ஊட்டச்சத்துக்கு குறைபாட்டை போக்க வெனிசுவேலா அதிபரின் நூதன "முயல் திட்டம்"

"ஏகாதிபத்திய சக்திகளால்" தன்னுடைய அரசு எதிராக தொடுக்கப்பட்டுள்ள பொருளாதாரப் போர் என்று அவர் கூறுகின்ற நிலைமையை எதிர்கொள்ள "முயல் திட்டம்" ஒன்றை வெனிசுவேலாவின் அதிபர் நிக்கோலாஸ் மதுரோ உருவாக்கியுள்ளார்.

முயல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

முயல்களை செல்ல விலங்குகளாக கருதும் வெனிசுவேலா மக்கள், அதனை இறைச்சியின் ஆதாரமாக பார்க்கவில்லை

விலங்குகளின் இறைச்சி மூலம் கிடைக்கின்ற புரதத்தை பெற்றுக்கொள்ளும் விதமாக முயல்களை இனப்பெருக்கம் செய்து, இறைச்சிக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுவேலா மக்களை அதிபர் கேட்டுகொண்டுள்ளார்.

வெனிசுவேலாவில் உணவு பற்றாக்குறை தொடர்ந்து நிலவி வருவதால், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறைவு இதுவரை இல்லாத அளவுக்கு அங்கு நிலவுகிறது.

அதிபரின் இந்த திட்டத்தை "மோசமானதொரு நகைச்சுவை" என்று எதிர்க்கட்சி அரசியல்வாதி ஒருவர் விமர்சித்துள்ளார்.

அரசு தொலைக்காட்சியில் அதிபர் மதுரோ இந்த திட்டத்தை வெளியிட்டார்,

இறைச்சி மூலம் கிடைக்கின்ற புரதம் இப்போது முக்கியமாதொரு பிரச்சனையாக உள்ளது. இதற்காக, முயல்கள் அதிக அளவு இனப்பெருக்கம் செய்வதால், "முயல் திட்டம்" ஒன்றை அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாக அதிபர் மதுரோ கூறியுள்ளார்.

இந்த "முயல் திட்டம்" நல்லதொரு தொடக்கத்தை கொண்டிருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

செல்ல விலங்குகளான முயல்கள்

வெனிசுவேலாவின் நகர்ப்புற வேளாண்மை அமைச்சர் பிரெடி பெர்னல், இதில் "கலாசார பிரச்சனை" உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

முயல் திட்டம் தொடக்கத்தில் பின்னடைவை சந்தித்து என்று மதுரோ தெரிவித்தார்

இந்த திட்டத்தை சோதனை செய்வதன் ஒரு பகுதியாக 15 சமூகங்களுக்கு முயல் குட்டிகள் திரு பெர்னலால் வழங்கப்பட்டுள்ளன என்று அதிபர் மதுரோ தெரிவித்தார்.

"அமைச்சர் மீண்டும் சென்று ஆய்வு செய்தபோது, அவரே ஆச்சயமடையும் அளவுக்கு, அந்த முயல்களின் கழுத்தை அலங்காரப்படுத்தி, அவற்றை தங்களின் செல்லப் பிராணிகளாக மக்கள் வைத்திருந்தனர். முயல் திட்டம் தொடக்கத்தில் சந்தித்த ஒரு பின்னடைவு இது" என்று மதுரோ கூறியுள்ளார்.

"பலர் தங்களுடைய முயல்களுக்கு பெயர் சூட்டி, படுக்கையில் தூங்க வைத்திருந்தனர்" என்று பெர்னல் தெரிவித்திருக்கிறார்.

வெனிசுவேலா மக்கள் "பொருளாதாரப் போரின் பார்வையில் இருந்து" இந்த முயல் திட்டத்தை பார்க்க தொடங்க வேண்டும் என்று அமைச்சர் பெர்னல் கூறியிருக்கிறார்.

அமைச்சரவை கூட்டத்தில் சக அமைச்சர்களின் சிரிப்போலிக்கு மத்தியில் பேசிய அவர், "வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள், கார்ட்டூன்கள் என எல்லா இடங்களிலும் பரப்புரை நடவடிக்கை மேற்கொள்வது தேவையாகிறது. அதன் மூலம் முயல்கள் செல்லப் பிராணிகள் அல்ல. இரண்டரை கிலோ எடையுள்ள இறைச்சி பிராணிகள் என்பதை மக்கள் புரிந்துகொள்வர்" என்று அவர் கூறினார்.

உணவு பொருட்கள் முதல் மருந்துகள் மற்றும் சுகாதார (குளியலறை) பொருட்கள் அனைத்திலும் நிலவும் பற்றாக்குறைக்கு வெனிசுவேலா அரசு மீண்டும் மீண்டும் "பொருளாதாரப் போரே" காரணம் என்கிறது.

நாட்டின் சோசலிச தலைவரை பதவியில் இருந்து வெளியேற்றுவதற்காக "ஏகாதிபத்திய சக்திகள்" நாட்டை பொருளாதார ரீதியில் முடக்க முயல்வதாக அரசு குற்றஞ்சாட்டுகிறது.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு,

நாங்கள் பசியாக இருக்கிறோம் என்று எழுதப்பட்டுள்ள சுவர்

ஆனால், அரசின் தவறுதலான மேலாண்மையைதான் குறைசொல்ல வேண்டும் என்று எதிர்க்கட்சி கூறுகிறது.

பிரச்சினையின் வேர்கள்

உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் வள இருப்பு கொண்ட வெனிசுவேலா, உணவு பொருட்கள் முதல் எல்லா அடிப்படை பொருட்களுக்கும் இறக்குமதியையே பெருமளவு நம்பி வந்துள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் எண்ணெய் விலையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதால், அரசின் இருப்புக்களும் குறைந்துள்ளன.

டாலர் மதிப்பு அரசால் கட்டுப்படுத்தப்படுவதால், அதிக பணவீக்கத்தால் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.

அடிப்படை பொருட்களின் விலையில் அரசு திணிக்கும் கட்டுப்பாடுகளால் நஷ்டமடைந்துவிட்டதால், உணவு பொருட்களின் வணிக உற்பத்தி பல மூடப்பட்டுள்ளன.

உணவுக் கூட்டுறவுகளையும், நகர்ப்புற வேளாண்மையையும் உருவாக்க அரசு ஊக்கமூட்டியிருக்கும் நிலையிலும், வெனிசுவேலாவின் தேவைகள் முழுவதையும் நிறைவு செய்ய முடியவில்லை.

பொருளாதார நெருக்கடியால் வெனிசுவேலா மக்களில் நான்கில் மூன்று பகுதியினர், சராசரியாக 8.7 கிலோ எடை குறைந்துவிட்டதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

வெனிசுவேலா நெருக்கடி: இறுதி கட்டம் நெருங்குகிறதா?

காணொளிக் குறிப்பு,

வெனிசுவேலா நெருக்கடி: இறுதி கட்டம் நெருங்குகிறதா?