`பாகிஸ்தானில் தவறுதலாக தரையிறங்கிய இந்திய போர் விமானம்': 1965 போர் நினைவுகள்

  • ரெஹான் ஃபஜல்
  • பிபிசி
இந்திய போர் விமானம்

பட மூலாதாரம், KAISER TUFAIL

படக்குறிப்பு,

பாகிஸ்தானில் தரையிறங்கிய பி.எஸ் சிகந்த்தின் நேட் விமானம்

போரில் வெற்றிகரமாக செயல்பட்ட இந்திய விமானப்படையின் ஓர் அணியின் தலைவர் ஸ்குவாட்ரன் விலியம் கிரீன், பதான்கோட் விமானதளத்திற்கு மகிழ்ச்சியுடன் திரும்பி வந்தார். ஆனால், தன்னுடைய சகா ப்ரஜ்பால் சிங் சிகந்த் திரும்பி வரவில்லை என்று அறிந்ததும் அவரது மகிழ்ச்சி வருத்தமாக மாறியது.

அந்த கால விமானங்களில் ஜி.பி.எஸ் அமைப்போ, ரேடாரோ இருக்காது. விமானிகள் செல்லும் இடத்தை அறிந்து கொள்ள வரைபடங்கள் மற்றும் திசைகாட்டிகளையே பயன்படுத்தினார்கள். சிகந்த் வழிதவறிவிட்டார். அவரின் விமானத்தில் எரிபொருளும் குறைவாகவே இருந்தது. வானில் இருந்து பார்க்கும்போது, விமான ஓடுபாதை தெரிந்தது. அது இந்தியாவின் பயன்படுத்தப்படாத ஒரு விமானதளம் என நினைத்த சிகந்த் அங்கே தரையிறங்கிவிட்டார்.

தரையிறங்கிய பிறகுதான், தான் இறங்கியது பாகிஸ்தானின் பஸ்ரூர் பகுதி என்பதை தெரிந்துக் கொண்ட சிகந்த் சிக்கிக்கொண்டதை உணர்ந்தார். அங்கிருந்த பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் போர்க் கைதியானர் சிகந்த்.

பதான்கோட் விமானதளத்திற்கு சிகந்த் வந்து சேராததால், அவரைத் தேடி இரண்டு வேம்பயர் விமானங்கள் அனுப்பப்பட்டன. சிகந்தின் விமானம் விபத்துக்குள்ளாகி நொறுங்கிப் போயிருக்கும் என்ற கோணத்திலேயே விமானத்தின் இடிபாடுகள் விமானங்கள் மூலமாக தேடப்பட்டது. பாகிஸ்தான் எல்லைக்குள் சிகந்த் சிக்கிக் கொண்டிருப்பார் என்பதை யாரும் யூகிக்கவேயில்லை.

பட மூலாதாரம், BBC WORLD SERVICE

படக்குறிப்பு,

பாகிஸ்தானில் போர்கைதியாக இருந்த ப்ரஜ்பால் சிங் சிகந்த்

தரையிறங்க வேண்டிய கட்டாயம்

பாகிஸ்தான் ஃபீல்ட் மார்ஷல் அயூப்பின் மகன் கெளஹர் அயூப் கான் பிபிசியிடம் கூறுகிறார், "சிகந்த் தவறுதலாக பஸ்ரூரில் தரையிறங்கவில்லை. பாகிஸ்தானின் ஸ்டார் ஃபைட்டர் விமானம் சிகந்த் பஸ்ரூரில் தரையிறங்க கட்டாயப்படுத்தியது".

"அந்த ஸ்டார் ஃபைட்டர் விமானத்தை ஓட்டிய ஹகீமுல்லா, நான் விமான பயிற்சி பெற்றபோது, என்னுடைய சகாவாக இருந்தவர். பிறகு ஹகீமுல்லா பாகிஸ்தான் விமானப்படைத் தளபதியாகவும் பணிபுரிந்தார். பாகிஸ்தான் எல்லைக்குள் பறந்துக் கொண்டிருந்த சிக்கந்தின் நேட் (Gnats) விமானத்தை பார்த்த அவர், அருகில் இருக்கும் பஸ்ரூர் விமான ஓடுதளத்தில் விமானத்தை இறக்காவிட்டால், சுட்டு வீழ்த்துவேன் என்று எச்சரிக்கை சமிக்ஞை அனுப்பினார்" என்று சொல்கிறார் கெளஹர் அயூப்.

பட மூலாதாரம், GAUHAR AYUB KHAN

படக்குறிப்பு,

அயூப் கானும், அவரது இரு மகன்களும். வலப்புறம் இருப்பவர் கெளஹர் அயூப்

மீண்டும் கிளம்ப முயற்சி

சிகந்த் போர்க் கைதியாக சிறைபிடிக்கப்பட்ட பிறகு, நாட் விமானத்தை பெஷாவர் விமானதளத்திற்கு ஓட்டிச் சென்றார் விமானி லெஃப்டினெண்ட் சாத் ஹாத்மி. பிரிட்டனில் விமான ஓட்டுனர் பயிற்சி எடுத்துக்கொண்ட ஹாத்மிக்கு, நேட் (Gnats) விமானத்தை இயக்கும் அனுபவமும் இருந்தது.

பாகிஸ்தானின் விமானப் போக்குவரத்து வரலாற்றில் நிபுணத்துவம் பெற்ற கைசர் துஃபைல் சுட்டிக்காட்டுகிறார்: "போர்க்கைதியாக இருந்த சிகந்த்திடம் விசாரணை மேற்கொண்டபோது, அவரது விமானத்தில் ஒரே நேரத்தில் பல பிரச்சனைகள் ஏற்பட்டதாக சொன்னார். போர் விமானங்களை நானும் இயக்கியிருக்கிறேன், ஒரே நேரத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுவதற்கான சாத்தியங்களே இல்லை என்று உறுதியாக சொல்வேன்."

இந்த விமர்சனம் பற்றி சிகந்திடம் விளக்கம் கோர விரும்பி, பிபிசி அவரை தொடர்புகொண்டது. ஆனால் அவர் இதுகுறித்து பேச மறுத்துவிட்டார். வயது மூப்பின் காரணமாக பழைய நினைவுகளை நினைவுகூர்வது அவரால் முடியாமல் போயிருக்கலாம்.

"நான் தவறுதலாக பஸ்ரூரில் இறங்கிவிட்டேன். அதை தெரிந்துக் கொண்டதும் உடனே மீண்டும் விமானத்தை கிளப்ப முயற்சித்தேன்", என்று சில பத்திரிகைகளில் சிகந்த் எழுதியிருக்கிறார் என்பதை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

பட மூலாதாரம், KAISER TUFAIL

படக்குறிப்பு,

கைசர் துஃபைல்

சிகந்தின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் கைசர் துஃபைல், "ஒரு ஜெட் ஃபைட்டர் இறங்கிய பிறகு உடனடியாக மீண்டும் கிளம்ப முடியாது, அவர் விமானத்தின் எஞ்சின் சுவிட்சை நிறுத்திவிட்டார். ஓடுதளத்தின் இறுதிப் பகுதிக்கு சென்றுவிட்டதால், உடனே அங்கிருந்து விமானத்தை கிளப்ப முயற்சி செய்வதற்கு சாத்தியம் இல்லை."

ஆனால் சிகந்தின் கருத்தை ஏற்றுக்கொள்ளும் பி.வி.எஸ். ஜகன் மோகன் மற்றும் சமீர் சோப்ரா இருவரும் 'The India Pakistan Air War 1965' என்ற தங்களது புத்தகத்தில் அதுபற்றி எழுதியுள்ளனர். "1965இல் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூண்டபோது, ஹகீமுல்லா பறந்து கொண்டிருந்த இடத்திலே, சிகந்தும் தரையிறக்கியிருக்கலாம். ஆனால் பாகிஸ்தானிய தரப்பு, அவரை கட்டாயப்படுத்தி தரையிறங்கச் செய்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை".

தன்னுடைய மற்றொரு கட்டுரையில் கைசர் துஃபைல் இவ்வாறு கூறியிருக்கிறார், 'பஸ்ரூர் ஓடுதளத்தில் தன்னுடைய ப்ரேக் ஷுட்டுடன் சிகந்த் நின்றிருப்பதை பார்க்கும்வரை, நேட் விமானத்தை நான் பார்க்கவில்லை".

பட மூலாதாரம், BBC WORLD SERVICE

படக்குறிப்பு,

போர்க்கைதியாக இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, இந்திய விமானப்படை தளபதி அர்ஜுன் சிங்குடன் ப்ரஜ்பால் சிகந்த்

இந்த முழு சம்பவத்திற்கும் மற்றொரு சாட்சியாக இருப்பவர் அமிர்தசரஸ் ரேடார் நிலைய பிரிவு கமாண்டர் தண்டபாணி. "விமான அணியில் இருந்து சிகந்த் பிரிந்து தடம் மாறியதுமே அதை கவனித்துவிட்டேன், ஆனால் அதன்பிறகு ரேடார் எல்லையின் வரம்பில் சிகந்த் வரவில்லை" என்று ஜகன்மோஹனிடம் தண்டபாணி கூறினார்.

"அந்த சமயத்தில் எந்தவொரு பாகிஸ்தானிய விமானமும் ரேடாரில் தென்படவில்லை" என்று தண்டபாணி உறுதிபட கூறுகிறார்.

"பாகிஸ்தானில் சிகந்தின் நேட் விமானம் முழுமையாக தரையிறங்கிவிட்டது என்று தெரியவந்ததும், இந்தியாவின் நேட் விமானங்கள் அனைத்தும் பதான்கோட் விமானதளத்திற்கு வரவழைக்கப்பட்டு, அவற்றில் இருந்த 'ரேடியோ கிறிஸ்டல்' மாற்றப்பட்டது. சிகந்தின் விமானத்தில் உள்ள கருவிகளின் மூலம் பாகிஸ்தான், இந்திய விமானப்படையின் தகவல்களை ஒட்டு கேட்பதற்கான சாத்தியங்களை அகற்றிவிடவே இந்த மாற்றம் செய்யப்பட்டது.

பறவை மோதி பாதிப்படைந்த விமானம்

தவறாக தரையிறங்கிய இந்தியாவின் இந்த நேட் விமானம், பாகிஸ்தானிய விமானப்படைக்கு பயிற்சியளிப்பதற்கு பின்னர் பயன்படுத்தப்பட்டது என்ற சுவாரஸ்யமான உண்மையை கௌஹர் அய்யூப் கான் தெரிவித்தார்.

இந்த விமானத்தின் இறக்கையில் ஒரு பறவை மோதியதால் விமானத்தின் விதானத்தில் (Canopy) கணிசமான சேதம் ஏற்பட்டது.

"அந்த நேரத்தில் யூகோஸ்லாவிய விமானப்படையில் நேட் விமானங்கள் அதிகமாக இருந்தன. அங்கிருந்து உதிரி பாகங்களை வாங்கி சேதமடைந்த பாகத்தை மாற்றிவிடலாம் என்று முயற்சி செய்தோம். ஆனால் அது நடைபெறவில்லை. இங்கிலாந்தில் ஒரு பெட்ரோல் நிலையத்தில் பாகிஸ்தானிய விமானப்படையை சேர்ந்தவர் ஒரு ஆங்கிலேயரை சந்தித்தது எங்களுக்கு அதிர்ஷ்டத்தை தந்தது' என்கிறார் கௌஹர் அய்யூப் கான்.

பட மூலாதாரம், KAISER TUFAIL

படக்குறிப்பு,

பாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் நேட் விமானம்

"அந்த ஆங்கிலேயர் இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் தொழிற்சாலையில் பணிபுரிபவர். நேட் விமானத்தின் விதானம் பற்றி அவரிடம் பேசியபோது, அது ஒரு பெரிய விஷயம் இல்லை என்று ஆங்கிலேய நண்பர் சொன்னார்" என்கிறார் கெளஹர் அயூப்.

பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் தொழிற்சாலையில் இருந்து குறிப்பிட்ட அந்த பாகத்தை ரகசியமாக கொண்டு வந்த அந்த ஆங்கிலேயர், அதை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தார். இன்றும் அந்த நேட் விமானம் பாகிஸ்தானில் உள்ள விமானப்படை அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

(இந்தியா-பாகிஸ்தான் இடையே 1965- இல் 22 நாட்கள் நடைபெற்ற போர் தொடர்பான 22 கட்டுரைகள் கொண்ட தொடரை பிபிசி 2017ஆம் ஆண்டு பகிர்ந்தது. அதன் எட்டாவது பகுதி இது. பிபிசி தமிழ் தளத்தில் இந்தக் கட்டுரை 15 செப்டெம்பர் 2017 அன்று வெளியானது.)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: