ரோஹிஞ்சா முஸ்லிம்களின் வீடுகள் எரிப்பு: புதிய ஆதாரங்கள்

மியான்மர் நாட்டின் மேற்குப் பகுதியில் ரோஹிஞ்சா முஸ்லிம்களின் வீடுகள் திட்டமிட்டு எரிக்கப்படுவதற்கான ஆதாரங்களாக, புதிய செயற்கைக்கோள் புகைப்படங்களை அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமை அமைப்பு வெளியிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Amnesty International
Image caption ரோஹிஞ்சா குடியிருப்புகளில் தீ வைப்புச் சம்பவம் நடந்ததற்கு முன்னும் பின்னும் இருந்த நிலையைக் காட்டும் செயற்கைக்கோள் புகைப்படம்.

இந்தப் படங்கள், அந்நாட்டின் பாதுகாப்புப் படைகள் ரோஹிஞ்சா முஸ்லிம்களை மியான்மரை விட்டே துரத்துவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளுக்கான ஆதாரம் என்று அம்னெஸ்டி கூறியுள்ளது.

ஆனால், தாங்கள் பொதுமக்களைக் குறி வைக்கவில்லை என்றும், தீவிரவாதிகளுடன்தான் போரிடுவதாகவும் மியான்மனர் ராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் தொடங்கிய வன்முறைச் சம்பவங்களுக்குப் பிறகு, இதுவரை சுமார் 3,89,000 ரோஹிஞ்சா முஸ்லிம்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

ரகைன் மாகாணத்தில் உள்ள சுமார் 30% ரோஹிஞ்சா கிராமங்கள் தற்போது காலியாக உள்ளதாக மியான்மர் அரசு தெரிவித்துள்ளது.

பல தலைமுறைகளாக அவர்கள், முன்பு பர்மா என்று அழைக்கப்பட்ட மியான்மரில் வசித்து வந்தாலும், அவர்களை வங்கதேசத்தில் இருந்து வந்த சட்டவிரோதக் குடியேறிகள் என்று கூறி மியான்மர் அரசு அவர்களுக்கு குடியுரிமை வழங்க மறுத்து வருகிறது.

என்ன சொல்கிறது அம்னெஸ்டியின் அறிக்கை?

தனது ஆதாரங்கள் தீ எரியும் இடங்களைக் கண்டறிந்த தரவுகள், செயற்கைகோள் புகைப்படங்கள், பிற காணொளிகள் மற்றும் புகைப்படங்களின் அடிப்படையில் அமைந்துள்ளதாக அம்னெஸ்டி கூறியுள்ளது.

சுமார் மூன்று வார காலமாக "திட்டமிட்டு அரங்கேற்றப்படும் தீவைப்புச் சம்பவங்களை," நேரில் பார்த்தவர்களின் சாட்சியங்களுடன் அம்னெஸ்டி அறிக்கை இடம்பெற்றுள்ளது.

படத்தின் காப்புரிமை EPA
Image caption வங்கதேசம் வரும் ரோஹிஞ்சாக்களின் எண்ணிக்கை கடந்த வாரத்தை விட இந்த வாரம் மூன்று மடங்காகி உயர்ந்துள்ளது.

"இந்த ஆதாரங்கள் மறுக்க முடியாதவை. மியான்மர் பாதுகாப்பு படையினர் ரகைன் மாகாணத்தின் வடக்குப் பகுதியில் இருந்து ரோஹிஞ்சா மக்களை வெளியேற்றும் நோக்கத்துடன், அவர்களின் வீடுகளுக்கு தீ வைக்கின்றனர், " என்று அந்த அமைப்பின் நெருக்கடி கால நடவடிக்கைகளுக்கான இயக்குனர் திரானா ஹசன் கூறியுள்ளார்.

பாதுகாப்பு படையினர் கிராமங்களைச் சூழ்ந்துகொண்டு, தீ வைக்கப்பட்ட தங்கள் வீடுகளில் இருந்து தப்பிக்க முயலும் ரோஹிஞ்சா மக்களை சுட்டுக்கொல்லும் "மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்களில்" ஈடுபடுவதாக அம்னெஸ்டி கூறியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 25 அன்று, அர்ஸா எனப்படும் ரோஹிஞ்சா கிளர்ச்சிக் குழுவினர் பாதுகாப்பு படையினரின் சாவடிகள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, அம்மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் குறைந்தபட்சம் 80 பெரும் தீ எரியும் சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அம்னெஸ்டி அறிக்கை கூறுகிறது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கண்ணிவெடியில் காயம்பட்ட ரொஹிஞ்சா சிறார்கள்

கடந்த நான்கு ஆண்டுகளில் இதைப்போன்ற நெருக்கடி நிலைகளில் இந்த அளவுக்கு நெருப்பினால் உண்டாகும் அழிவுகளைக் கண்டதில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மியான்மர் அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்?

ரோஹிஞ்சா தீவிரவாதிகளை ரகைன் மாகாணத்தில் நடக்கும் வன்முறைச் சம்பவங்களுக்காக குற்றம்சாட்டியுள்ள, ஐ.நாவுக்கான மியான்மர் தூதர், அத்தகைய அட்டூழியங்களை தங்கள் நாடு பொறுத்துக்கொள்ளாது என்று கூறியுள்ளார்.

மியான்மர் அரசின் செய்தித் தொடர்பாளர் சா தே, ரகைன் மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களில் ரோஹிஞ்சா மக்கள் தஞ்சமடையுமாறு கூறியிருந்தாலும், வங்கதேசம் சென்ற அனைவரையும் மீண்டும் தங்களால் மியான்மருக்குள் அனுமதிக்க முடியாது என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

அரசில் மிகவும் செல்வாக்கு வாய்ந்தவரான, மியான்மர் பாதுகாப்பு படைகளின் தலைவர் மின் ஆங் லாங் "உண்மையை மறைத்து 'ரோஹிஞ்சா' எனும் பதத்தை ஏற்றுக்கொள்ளவோ, அங்கீகரிக்கவோ முடியாது," என்று கூறியுள்ளார்.

அதாவது, அவர்களை வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்னும் அரசின் நிலையை மீண்டும் ஒரு முறை மறைமுகமாகக் கூறியுள்ளார்.

"ரகைன் இனத்தவர்கள் (புத்த மதத்தினர்) நம் முன்னோர்களின் காலம்தொட்டே இங்கு வாழ்ந்து வரும் பூர்வ குடிகள்," என்று அவர் புதன்கிழமையன்று கூறியுள்ளார்.

வேறு என்ன ஆதரங்கள் உள்ளன?

ரகைன் மாகாணத்தில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் வாழ்ந்த கிராமங்களில் 30% அதிகமான பங்கு வகிக்கும், 176 கிராமங்கள் தற்போது யாருமற்று காலியாக உள்ளதாக மியான்மர் அரசே ஒப்புக்கொண்டுள்ளது.

Image caption ரகைன் மாகாணம்

அம்னெஸ்டி அறிக்கை வெளிவருவதற்கு முன்பே, அங்கிருந்து தப்பி வந்தவர்களால், பாதுகாப்பு படையினர் ரோஹிஞ்சா கிராமங்கள் அழிக்கப்படுவதாக வாக்குமூலம் அளித்தனர்.

மிகவும் கட்டுப்பாடு நிறைந்த, அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர்களுக்கான சுற்றுப் பயணத்தில் பங்கேற்ற பிபிசியின் ஜொனாதன் ஹெட் அங்கு ரோஹிஞ்சா முஸ்லிம்களின் வீடுகளுக்கு மியான்மர் காவல் துறையினர் தீ வைப்பதை நேரில் பார்த்துள்ளார்.

தற்போது அரங்கேறும் வன்முறைச் சம்பவங்களால் சுமார் 4 லட்சம் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மியான்மரை விட்டு வெளியேறி இருந்தாலும், முந்தைய வன்முறைச் சம்பவங்களால் வெளியேறிய ஆயிரக்கணக்கான ரோஹிஞ்சா மக்களுக்கு வங்கதேசம் அடைக்கலம் தருவதாக ஐ.நா தெரிவிக்கிறது.

தங்கள் வசிப்பிடத்தை விட்டு வெளியேறி, மியான்மர் நாட்டுக்குள்ளேயே இருக்கும் முகாம்களிலும் பல ரோஹிஞ்சா குடும்பங்கள் வசிக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :