பாகிஸ்தானின் விமானங்களை வீழ்த்திய பைலட் சகோதரர்கள்

ட்ரேவர் கீலர் மற்றும் டென்ஜில் கீலர் படத்தின் காப்புரிமை BBC WORLD SERVIC
Image caption ட்ரேவர் கீலர் மற்றும் டென்ஜில் கீலர்

இந்தியா-பாகிஸ்தான் இடையே 1965- இல் 22 நாட்கள் நடைபெற்ற போர் தொடர்பான 22 கட்டுரைகள் கொண்ட தொடரின் ஒன்பதாவது பகுதி.

அதிகாலை மூன்று மணி, பதான்கோட் விமானதளத்தில் இருந்த நேட் (Gnats) விமானத்தின் பைலட்டுகள் தூக்கத்திலிருந்து எழுப்பப்பட்டனர். கூட்டம் நடைபெறும் அறைக்கு செல்வதற்கு இரண்டு கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டியிருந்தது.

அதிகாலையில் விழிப்பவர்களுக்கு, எழுந்த உடனே தேநீர், காபி போன்ற பான்ங்களோ அல்லது காலை உணவோ கொடுக்கும் வழக்கம் அந்த காலத்தில் இல்லை.

கூட்டத்திற்கு பிறகு, நான்கு மிஸ்டியர்ஸ் விமானங்கள் 1500 அடி உயரத்தில் பறந்து சம்ப்பை நோக்கி பயணித்தன.

இந்திய தரப்பை கண்காணித்துக் கொண்டிருந்த ரேடார்களின் உதவியால் இதனை தெரிந்துகொண்ட பாகிஸ்தான் தரப்பு, சில நிமிடங்களில் எதிர் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. இந்திய விமானங்களை இடைமறிக்க, பாகிஸ்தானின் ஆறு சேபர் விமானங்களும், ஸ்டார் ஃபைட்டர் விமானங்கள் இரண்டும் புறப்பட்டன.

ஆனால் இந்தியாவின் மிஸ்டியர்ஸ் விமானங்களைத் தொடர்ந்து நான்கு நேட் போர் விமானங்களும் கிளம்பியதை, பாகிஸ்தானின் ரேடார் அறியவில்லை. இந்த நான்கு நேட் விமானங்களும் 300 அடி உயரத்தில் பறந்தன.

சேபர் விமானத்தை வீழ்த்திய ட்ரேவர்

நேட் விமானங்களை வழிநடத்தினார் அணித்தலைவர் ஸ்குவாட்ரன் ட்ரேவர் கீலர். கிருஷ்ணசாமி அவரது விங் மேனாக இருந்தார். சேபர் விமானம் 5000 அடி தொலைவில் வரும்போதே அதனை பார்த்த கீலர், அதை பின்தொடர்ந்தார்.

படத்தின் காப்புரிமை DEFENCE.PK

அவருடைய விமானத்தின் வேகம் மிகவும் அதிகமாக இருந்ததால், ஏர் பிரேக் போட வேண்டியிருந்தது. துப்பாக்கியால் சுடக்கூடிய எல்லைக்கு சேபர் வந்ததும், சுமார் 200 கஜ தூரத்தில் இருந்து 30 எம்.எம் கேனான் துப்பாக்கியால் விமானத்தின் வலப்புறத்தை நோக்கி சுட்டார் ட்ரேவர்.

அடுத்த நொடியே, சேபரின் வலப்புறமிருந்த இறக்கை கீழே விழத் தொடங்கியது. தொடர்ந்து விமானமும் கட்டுப்பாட்டை இழந்து கீழ் நோக்கி பாய்ந்தது. இது 1965 ஆம் ஆண்டு போரின்போது, இந்தியாவால் வீழ்த்தப்பட்ட முதல் விமானம். அன்றே ட்ரேவர் கீலருக்கு வீர் சக்ர விருதை அறிவித்தது இந்திய அரசு.

டென்ஜில் கீலரின் தீரம்

இந்த சம்பவம் நடந்த 16-ஆவது நாளில் சாவிண்டா பகுதியில் மிஸ்டியர்ஸ் விமானங்கள் தாக்குதலுக்கு கிளம்ப தயாராயின. அவற்றுக்கு பாதுகாப்பாக நேட் விமானங்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

பாதுகாப்பாக சென்ற நேட் விமான அணிக்கு தலைமை வகித்தார் ட்ரேவர் கீலரின் மூத்த சகோதரர் டென்ஜில் கீலர்.

அணியின் பிற விமானங்களில், முன்னா ராய், வினய் கத்து கபிலா, விஜய் மாயாதேவ் ஆகிய மூவரும் விமான அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர்.

சாவிண்டா பகுதியை அடைந்த இந்திய போர் விமானங்களை, விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் மூலம் வரவேற்றனர் எதிர்தரப்பினர்.

விமானங்கள் மிகவும் தாழப் பறந்து கொண்டிருந்தன. எனவே, துப்பாக்கிக் குண்டுகள் இந்திய விமானங்களுக்கு மேல் சீறிப் பாய்ந்தன. 2000 அடி உயரத்தில் பாகிஸ்தானின் நான்கு சேபர் விமானங்கள் வருவதை முதலில் பார்த்த கபிலா, உடனே ரேடியோ மூலம் சகாக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

படத்தின் காப்புரிமை BBC WORLD SERVICE
Image caption 1965 யுத்தத்தில் முக்கிய பங்களித்த டென்ஜில் கீலர்

சர்கோதாவில் இருந்த வந்த இந்த சேபர் விமானங்களுக்கு தலைமை ஏற்றவர் ஸ்குவாட்ரன் அஜீம் தாவுத்போதா. தங்களை பின் தொடர்ந்து நான்கு நேட் விமானங்கள் தாழ்வாக பறந்து வந்ததை பாகிஸ்தான் விமானிகள் பார்க்கவில்லை.

கீலர் அனைவருக்கும் பின்னே செல்ல முயன்றார். நான்கு சேபர் விமானங்களும் இரண்டு பிரிவாக பிரிந்து சென்று கொண்டிருந்ததை பார்த்த அவர், தனது அணியையும் இரண்டாக பிரித்தார். கீலரும், ராயும் சேபரின் ஒரு பிரிவை பின்தொடர, கபிலாவும், மாயாதேவும் அடுத்த பிரிவின் பின்சென்றனர்.

டென்ஜில்-கபிலாவின் விமான சாகசம்

டென்ஜில் வலப்புறமாக திரும்பியபோது, ராயிடம் இருந்து பிரிந்துவிட்டார். ரேடியோவில் ராயை தொடர்பு கொண்ட டென்ஜில், அவரை ஆதம்பூருக்கு திரும்பிச் செல்லச் சொன்னார்.

இப்போது டென்ஜில் இரண்டு சேபர் விமானங்களை தனியாக எதிர்கொள்ளவேண்டும். இதனிடையில், மற்றொரு பிரிவை பின் தொடர்ந்த கபிலா, தனது விமானத்தின் வேகத்தை அதிகரித்து 500 கஜ தூரத்தில் இருந்த சேபர் விமானத்தை நேரடியாக சுட்டார்.

Image caption பிபிசி ஸ்டுடியோவில் வினய் கபிலா

300 கஜ தூரத்தில் இருந்து மீண்டும் தாக்கிய வினய் கபிலா, சேபர் தடுமாறத்தொடங்கியதை பார்த்தார். அதே சமயத்தில், "அவர்களை தாக்கிவிட்டீர்கள், அவர்கள் கீழே விழப்போகிறார்கள் என்று நினைக்கிறேன்" என்று கீலரின் குரல் ரேடியோவில் கேட்டது.

தனது விமானத்தை 90 டிகிரி கோணத்தில் மேலே கொண்டு சென்றார் கபிலா. அவர் சுட்டு வீழ்த்திய சேபர் விமானம் நிலத்தில் விழுந்து நொறுங்கியதை பார்த்தார்.

சர்கோதா அருகே விமானம் விழுந்தது.

இதனிடையில், டென்ஜில் தான் தொடர்ந்த இரண்டு சேபர் விமானங்களை கண்காணித்ததோடு, கபிலாவின் விமானத்தையும் கவனித்து அவருக்கு செய்தி அனுப்பினார். ஒரு சேபர் விமானம் எந்தவித சேதமும் இல்லாமல் திரும்பிச் செல்ல முயற்சிப்பதை கண்ட டென்ஜில், அதனை பின்தொடர்ந்தார்.

படத்தின் காப்புரிமை VINAY KAPILA
Image caption 1965 போரில் வினய் கபிலா பயன்படுத்திய லாக் புக்

பாகிஸ்தானின் சேபர் விமானம், நேட் விமானத்தை பார்க்கவில்லை. திடீரென வலப்புறமாக திரும்பிய அது, டென்ஜில் துப்பாக்கியால் சுடும் வரம்புக்குள் வந்துவிட்டது. கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டார் டென்ஜில். சேபர் புகை எழுப்பிக்கொண்டே பூமியை நோக்கி விழத்தொடங்கியது.

கீலர் வெகு விரைவாக தனது இடத்தில் இருந்து அகன்றார். ஏனெனில் அவரது விமானம், மரத்தின் உயரத்திற்கு மிகவும் தாழ பறந்து கொண்டிருந்தது. அப்போது பின்புறமிருந்து வந்த கபிலா, வானில் இருந்து வீழ்ந்துக் கொண்டிருந்த சேபரை மீண்டும் துப்பாக்கி குண்டால் துளைத்தார்.

Image caption பிபிசி ஸ்டுடியோவில் டென்ஜில் மற்றும் ரெஹான் ஃபஜல்

புகைமூட்டத்தில் இருந்த சேபரை, சர்கோதாவை நோக்கி திருப்பிவிட்டார் பாகிஸ்தான் விமானி லெஃப்டினெண்ட் எஸ்.எம் அஹ்மத். ஆனால் விமானம் சர்கோதா விமான ஓடுதளத்திற்கு அருகில் விழுந்தது. தீப்பிழம்பு மற்றும் வெடிப்புக்கு இடையில் அஹ்மத் வெளியே தூக்கி வீசப்பட்டார்.

விமான டயர் வெடித்தது

கதை இத்துடன் முடிந்துவிடவில்லை. டென்ஜில் கீலர் தனது விமானத்தை தரையிறக்க முயன்றபோது, விமானத்தின் ஒரு டயர் வெடித்து, விமான ஓடுதளம் முழுவதுமே பயனற்றுப்போனது. எனவே கபிலா அல்வாராவுக்கு திசை திருப்பி விடப்பட்டார். அவர் அல்வாராவில் தரையிறங்கும்போது அவரது விமானத்தில் எஞ்சியிருந்தது சில துளி எரிபொருளே!

படத்தின் காப்புரிமை BBC WORLD SERVICE
Image caption சக விமானி லெஃப்டினென்ட் படானியாவுடன் டென்ஜில்

கபிலா மற்றும் டென்ஜிலின் வீரத்தை பாராட்டி அவர்களுக்கு வீர் சக்ர விருது வழங்கப்பட்டது.

ஒரு போரில் பங்கேற்ற இரு சகோதரர்களுக்கு வீர சக்ர விருது வழங்கப்பட்டது சரித்திரத்தில் முதல்முறை என்றே சொல்லலாம்.

'மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல் எனுஞ் சொல்' என்ற திருக்குறளை உண்மையாக்கிய டென்ஜில் மற்றும் ட்ரேவர் கீலரின் வீட்டிற்கு சென்ற விமானப்படை தளபதி அர்ஜுன் சிங், அவர்களின் தந்தையிடம் மகன்களின் வீர சாகசத்தை பற்றி நேரடியாக எடுத்துரைத்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :