லண்டன் ரயில் வெடிகுண்டு: டிரம்ப் கருத்தை விமர்சிக்கிறார் பிரிட்டிஷ் பிரதமர்

லண்டன் நிலத்தடி ரயிலில் வெள்ளிக்கிழமை நடந்த வெள்ளிக்கிழமை நடந்த வெடிகுண்டுத் தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்ட டிவிட்டர் பதிவை பிரிட்டீஷ் பிரதமர் தெரீசா மே விமர்சித்துள்ளார்.

தெரீசா மே
படக்குறிப்பு,

தெரீசா மே

"தோற்றுப்போன தீவிரவாதி ஒருவரால் லண்டனில் நடத்தப்பட்ட இன்னொரு தாக்குதல்.

இந்த ஆரோக்கியமற்ற, அறிவிழந்த நபர்கள் ஸ்காட்லாந்து யார்டு போலீசின் பார்வையிலேயே இருந்தார்கள். இன்னும் செயலூக்கத்தோடு இருக்கவேண்டியது தேவை" என்று வெடிகுண்டுத் தாக்குதலை அடுத்து வெளியிட்டத் தமது டிவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார் டிரம்ப்.

இதற்குப் பதில் அளித்த தெரீசா மே, நடந்த சம்பவம் குறித்து புலன் விசாரணை நடந்துகொண்டிருக்கும் நிலையில் இதுபோன்ற சந்தேகங்களை வெளியிடுவது யாருக்கும் உதவாது என்று தெரிவித்திருந்தார்.

தொலைபேசி உரையாடல்

இந்த விமர்சனத்தை அடுத்து, தெரீசாவுடன் தொலைபேசியில் பேசினார் டிரம்ப்.

"உலகம் முழுவதும் அப்பாவி மக்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதைத் தடுக்கவும், தீவிரவாதத்துக்கு எதிராகப் போரிடவும் பிரிட்டனோடு தொடர்ந்து சேர்ந்து செயல்படுவதற்கான வாக்குறுதியை தமது தொலைபேசி உரையாடலின்போது டிரம்ப் அளித்தார்," என்று வெள்ளை மாளிகை செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.

டிரம்ப்பின் கருத்து பிரிட்டனில் பரவலான விமர்சனத்தை எதிர்கொண்டது.

லண்டன் போலீஸ், பிரிட்டிஷ் பிரதமரின் முன்னாள் உதவியாளர் நிக் டிமோத்தி ஆகியோரும் டிரம்ப்பின் கருத்தை விமர்சித்திருந்தனர்.

கன்சர்வேடிவ் கட்சியின் முன்னாள் எம்.பி. பென் ஹவ்லெட் தமது டிவிட்டர் பதிவில் டிரம்பின் கருத்தைக் கடுமையாக விமர்சித்தார்.

"விசாரணையை கெடுக்கும் விதத்தில் உளவுத் தகவல்களை ஒரு நட்பு நாடு வெளிப்படுத்துவது உதவாது, ஆபத்தானது, பொருத்தமற்றது," என்று அவர் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :