தமிழக சாரணர் படைத் தலைவர் பதவிக்கு எச். ராஜா குறிவைத்தது ஏன்?

தமிழக சாரண - சாரணியர் படைத் தலைவருக்கான தேர்தலில் போட்டியிட்ட பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜா தோல்வியடைந்தார். தேர்தல் நடைமுறைகளில் முறைகேடுகள் இருந்ததாக அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

எச்.ராஜா

பட மூலாதாரம், H Raja/Facebook

தமிழக சாரண - சாரணியர் படைக்கான தேர்தல் மாநிலத் தலைமையகத்தில் இன்று காலை 10.30 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சியின் தேசியச் செயலர் எச். ராஜா தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பள்ளிக் கல்வித் துறையின் முன்னாள் இயக்குனர் பி. மணி போட்டியிட்டார்.

தேர்தல் அலுவலராக கலாவதி என்பவர் செயல்பட்டார். இன்று வாக்குப் பதிவு துவங்கிய சிறிது நேரத்தில், தேர்தல் நடத்த தடையாணை பெற்றிருப்பதாக ரமேஷ் என்பவர் கூறினார். இதனால், சிறிது சலசலப்பு ஏற்பட்டது. இருந்தபோதும் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது.

மொத்தம் 499 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில், 286 பேர் வாக்களித்தனர். இதில் 2 வாக்குகள் செல்லாத வாக்குகளாகிவிட, மீதமுள்ள 284 வாக்குகளில் பி. மணிக்கு 232 வாக்குகள் கிடைத்தன. எச். ராஜாவுக்கு 52 வாக்குகளே கிடைத்தன. இதனால், பி. மணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

லட்சுமி, கஸ்தூரி, மஞ்சுளா ஆகியோர் போட்டியின்றி துணைத் தலைவர்களாகத் தேர்வுசெய்யப்பட்டனர்.

எச். ராஜா இந்தத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தவுடனேயே தமிழக அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதற்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர். சாரணர் இயக்கத்தை ராஜா காவி மயமாக்கிவிடுவார் என்று கூறினர்.

இதற்குப் பதிலளித்த எச். ராஜா, தான் சாரணர் இயக்கத்தை காவிமயமாக்குவேன் என்றும் காவி, தியாகத்தின் நிறம் என்றும் கூறினார். ஒரு மாணவர் அமைப்பின் தலைவருக்கான தேர்தல், இதற்குப் பிறகு, வெகுவாக கவனிக்கப்பட்டது.

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையின் முடிவில் எச். ராஜா தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடைமுறைகளில் பல்வேறு முறைகேடுகள் இருந்ததாக அவர் தெரிவித்தார்.

இது குறித்து பிபிசியிடம் பேசிய எச். ராஜா, "இன்று பல்வேறு தேர்வுகள் இருப்பதால், ஆசிரியர்கள் அந்தத் தேர்வுகளுக்கு சென்றுவிடுவார்கள். ஆகவே இன்று தேர்தலை நடத்தாமல் செப்டம்பர் 23ஆம் தேதி நடத்த வேண்டுமெனக் கோரினேன். அதேபோல, தலைமையகத்திலிருந்து தேர்தலை தள்ளிவைக்க ஆணை வந்தது. இருந்தபோதும் தேர்தல் நடத்தப்பட்டது. இதனால், 200க்கும் மேற்பட்டவர்கள் வாக்களிக்கவில்லை" என்றார்.

தமிழக சாரணர் படை கடந்த 12 ஆண்டுகளாக செயல்பாடுகள் ஏதுமின்றி முடங்கிக் கிடப்பதாகவும் ஆகவே தன்னைப் போட்டியிடச் சொல்லி பலர் கேட்டுக்கொண்டதாலேயே தான் போட்டியில் இறங்கியதாகவும் எச். ராஜா தெரிவித்தார்.

ஆனால், வாக்காளர் பட்டியலைத் தயாரித்ததில் பல முறைகேடுகள் இருப்பதாகவும் தகுதியுள்ள பலரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை என்றும் ராஜா கூறியிருக்கிறார்.

ஆனால், தேர்தல் நடைமுறைகளில் எந்த முறைகேடும் இல்லையென்றும் சரியாகவே நடந்தது என்றும் தேர்தல் அலுவலர் கலாவதி தெரிவித்தார்.

தமிழ்நாடு சாரணர் இயக்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். கடைசியாக 2010ல் தேர்தல் நடந்த நிலையில், அடுத்த தேர்தல் நடக்காமல் தள்ளிப்போடப்பட்டுவந்தது. இது தொடர்பாக வழக்குகளும் தொடரப்பட்டன.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் கூடிய தமிழ்நாடு சாரணர் அமைப்பின் செயற்குழு, பொதுக்குழு நிர்வாகிகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. நிர்வாகிகளுக்கான தேர்தலை செப்டம்பர் 16-ம் தேதி தேர்தல் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்தத் தேர்தலில் மாவட்ட கல்வி அதிகாரிகள், சாரண ஆசிரியர்கள் வாக்களிக்கத் தகுதிபெற்றவர்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :