இந்தியா-பாகிஸ்தான் போர்: ராணுவ தளபதியின் ஆணையை ஏற்காத ஜெனரல் ஹர்பக்ஷ் சிங்

  • ரெஹான் ஃபஜல்
  • பிபிசி
லால் பகதூர் சாஸ்திரியோடு

பட மூலாதாரம், BBC WORLD SERVICE

இந்தியா-பாகிஸ்தான் இடையே 1965- இல் 22 நாட்கள் நடைபெற்ற போர் தொடர்பான 22 கட்டுரைகள் கொண்ட தொடரின் ஒன்பதாவது பகுதி இது .

சம்ப் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியபோது, இந்திய படைகள் அக்னூரில் இருந்து முன்னேறி பாகிஸ்தானை எதிர்க்கவேண்டும் என்று ஜெனரல் செளத்ரி விரும்பினார்.

ஆனால், சர்வதேச எல்லையை கடந்து லாகூரை நோக்கி முன்னேற அரசிடம் அனுமதி பெற்றுத் தாருங்கள் என்ற கோரிக்கையை செளத்ரியிடம் வைத்தார் ஜெனரல் ஹர்பக்ஷ் சிங்.

இந்த கோரிக்கையை ஏற்க செளத்ரி தயங்கினார். ஆனால், இந்த விஷயத்தில் திடமாக இருந்த ஜென்ரல் ஹர்பக்ஷ் சிங், அரசிடம் பேச தயக்கமாக இருந்தால் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியை சந்திக்க தனக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என செளத்ரியிடம் வலியுறுத்தினார்.

பட மூலாதாரம், BBC WORLD SERVICE

படக்குறிப்பு,

ஜெனரல் ஹர்பக்ஷ் சிங்

இறுதியாக, செப்டம்பர் மூன்றாம் தேதியன்று பஞ்சாபிற்கு முன்னேற ஜெனரல் ஹர்பக்ஷ் சிங் அனுமதி கிடைத்தது.

'In the Line of Duty' என்ற தனது சுயசரிதையில் ஹர்பக்ஷ் சிங் எழுதுகிறார்: "இதற்கிடையில், அக்னூர் தாக்குதலுக்கு இந்தியா பதில் தாக்குதல் நடத்தப்போவதாக பாகிஸ்தானை நினைக்க வைத்து திசை திருப்ப விரும்பினோம். எனவே, பதான்கோட்-அக்னூர் சாலையை சீரமைக்கவும், ஜம்மு-தாவியில் உள்ள பாலத்தை வலுப்படுத்தவும் எங்கள் பொறியாளர்களுக்கு உத்தரவிட்டேன்" என்று தெரிவித்தார்.

"இது பாகிஸ்தான் தரப்புக்கு எப்படிப்பட்ட விளைவை ஏற்படுத்தியது என்று எனக்குத் தெரியாது, ஆனால் மூன்று நாட்களுக்குப் பிறகு நாங்கள் லாகூரை நோக்கி அணிவகுத்து சென்றபோது அவர்கள் ஆச்சரியமடைந்தார்கள் என்பதை உறுதியாக சொல்லமுடியும்" என்று தெரிவித்தார்.

ஜெர்மன் மீசலில் இருந்து தப்பினேன்

பட மூலாதாரம், BBC WORLD SERVICE

படக்குறிப்பு,

மனைவியுடன் ஜெனரல் ஹர்பக்ஷ் சிங்

ஹர்பக்ஷ் சிங் மேலும் கூறுகிறார், "யுத்தத்திற்கு ஒரு நாள் முன்பு ஷிம்லாவில் இருந்த என் வீட்டில் நானும் என் மனைவியும் உறங்கிக் கொண்டிருந்தோம்".

"தொலைபேசி ஒலித்தபோது அதை எடுக்கச் சென்றபோது, என் மனைவி இரண்டு முறை தும்மினார்".

"உடனே அந்த நள்ளிரவு வேளையிலும் தனது கட்டிலை அடுத்த அறைக்கு மாற்றிவிட்டேன். மனைவிக்கு ஜெர்மன் மீசல் எனப்படும் ருபேலா தாக்கியிருந்தது பிறகுதான் தெரியவந்தது. இது ஒரு தொற்று நோய்". என்று கூறினார்.

"போர் நடந்துக் கொண்டிருந்த அந்த சமயத்தில் எனக்கு நோய் ஏற்பட்டிருந்தால் பல்வேறுவிதமான விமர்சனங்களை எதிர்கொள்ள நேர்ந்திருக்கும். பலவிதமான யூகங்களும் வதந்திகளும் பரப்பப்பட்டிருக்கும். நள்ளிரவு நேரமாக இருந்தாலும், அறையை மாற்றிய முடிவு, மிகவும் சரியானது என்று எனக்கு பிறகு தோன்றியது. இல்லாவிட்டால், மிகப் பெரிய அவமானத்தை சந்தித்திருப்பேன்" என மேலும் தெரிவித்தார்.

ஜெனரல் செளத்ரியுடன் மோதல்

ஹர்பக்ஷ் சிங் "ஆர்ம்சேர் ஜெனரல்" (Armchair general) இல்லை என்று கூறுகிறார் அவரது மகள் ஹர்மாலா குப்தா. ராணுவத்தில் உண்மையான அனுபவம் இல்லாதபோதிலும், ராணுவ விஷயங்களில் ஒரு நிபுணராக தன்னை கூறிக்கொள்பவர்களை குறிப்பிடும் ஒரு தரக்கூரைவான வார்த்தை ஆர்ம்சேர் ஜெனரல்.

அவர் கூறுகிறார், "அவர் போர்க்களத்தில் நேரடியாக இறங்கி செயல்படும் அதிகாரியாக இருந்தார். களத்திற்கு செல்லாமல் பின்புறம் அமர்ந்து கட்டளையிடுவதிலோ, அறிக்கைகள் வெளியிடுவதிலோ நிதர்சனம் தெரியவராது. கமாண்டர் முன் வரிசையில் இருந்தால்தான், படையில் இருப்பவர்களும் உத்வேகத்துடன் போரில் ஈடுபடுவார்கள், வெற்றி பெறுவார்கள்."

1965 போரில் ராணுவத் தளபதி ஜென்ரல் செளத்ரியுடன் அவருக்கு பல்முறை கருத்து வேறுபாடுகள் எழுந்தது.

பட மூலாதாரம், BHARAT RAKSHAK.COM

படக்குறிப்பு,

இந்தியத் துருப்புகளுடன் உரையாடும் ராணுவத் தளபதி ஜெனரல் சௌத்ரி

'In the Line of Duty' என்ற தனது சுயசரிதையில் ஹர்பக்ஷ் சிங் கூறுகிறார்: "செப்டம்பர் ஒன்பதாம் தேதி இரவு இரண்டரை மணிக்கு என்னை தொலைபேசியில் அழைத்த ராணுவத் தளபதி, பாகிஸ்தான் தாக்குதலில் இருந்து இந்திய படைகள் சேதமடையாமல் தவிர்க்க வேண்டுமானால், பியாஸ் நதிக்கு பின்னே இந்திய ராணுவத்தை பின்வாங்கச் சொன்னார்."

" பஞ்சாபின் அமிர்தசரஸ், குர்தாஸ்பூர் மாவட்டங்கள் உட்பட மிகப் பெரிய பகுதியை விட்டு விலகவேண்டும் என்பதே அதன் அர்த்தம். அது மட்டும் நடந்திருந்தால், 1962 ம் ஆண்டு சீனா தாக்குதலின்போது இந்தியாவுக்கு ஏற்பட்ட சேதத்தை விட இது மிகவும் மோசமாக இருக்கும் என்றே நான் நினைக்கிறேன்."

ஜென்ரல் ஹர்பக்ஷ் சிங் ராணுவத் தளபதியின் ஆணையை ஏற்க மறுத்துவிட்டார்.

தனது சுயசரிதையில் ஹர்பக்ஷ் சிங் இவ்வாறு எழுதுகிறார்: "இது முக்கியத்துவம் வாய்ந்த கட்டளையாக இருப்பதால், அதை யுத்த களத்திற்கே நேரடியாக வந்து கொடுக்க வேண்டும், இல்லையென்றால், எழுத்துபூர்வமான கட்டளை தேவை என்று நான் ஜென்ரல் செளத்ரியிடம் சொன்னேன். அவர் என்னை அம்பலாவில் சந்திப்பதாக முடிவு செய்யப்பட்டது. விமானத்தில் இருந்து இறங்கிய அவருடன் பாதுகாப்பு விமானங்களும் வந்ததை பார்த்து வியப்படைந்தேன்."

"எல்லையில் போரிடும் நமது வீரர்கள் அனைவருக்கும் இதுபோன்ற விமானங்கள் தேவைப்படும் என்று நான் அங்கிருந்த கள அதிகாரியிடம் கூறினேன். நானும், ராணுவத் தளபதியும் அறைக்குள் சென்று பேசினோம். பேசினோம் என்று சொல்வதை விட கடுமையாக விவாதித்தோம், தர்க்கம் செய்தோம் என்றே சொல்லலாம்."

பட மூலாதாரம், BBC WORLD SERVICE

படக்குறிப்பு,

விளையாட்டில் விருப்பம் கொண்ட ஜென்ரல் ஹர்பக்ஷ் சிங், கிரிக்கெட் மற்றும் ஹாக்கியில் சிறந்த வீரராகவும் இருந்தார்

"எங்களுக்கு இடையில் நடைபெற்ற விவாதத்தின்போது, மெஸ்ஸிலிருந்து பியர் வரவழைக்கட்டுமா என்று செளத்ரி கேட்டார். அவர் எதாவது ஆணையிட விரும்பினால், அவர் யுத்தக் களத்திற்கு நேரடியாக வந்து அங்கு வழங்கவேண்டும். அப்போதும், அவருடைய உத்தரவை செயல்படுத்துவது பற்றிய முடிவை நான்தான் எடுப்பேன் என்று உறுதியாக கூறிவிட்டேன்".

மேஜர் ஜென்ரல் பலித் எழுதுகிறார், "இந்த குறிப்பிடத்தக்க விஷயத்தில் செளத்ரியின் வாய்மொழி உத்தரவை ஏற்றுக்கொள்ள முடியாது, எழுத்துப்பூர்வமான உத்தரவு கொடுக்குமாறு என்று ஜென்ரல் ஹர்பக்ஷ் சிங் கேட்டார். ஆனால் எழுத்துப்பூர்வ ஆணை வரவேயில்லை. சில மணி நேரத்தில் நிலைமை மாறிவிட்டது. அதற்கு காரணம், பாகிஸ்தானின் மிகச் சிறந்த படான் டாங்கிகளை, இந்தியாவின் செஞ்சூரியன் டாங்கிகள் தாக்கி சிதறடித்துவிட்டன."

மூலோபாய விவகாரங்களில் நிபுணரான சுப்பிரமணியத்தின் கருத்து இது- "பியாஸ் நதியில் இருந்து பின்வாங்க வேண்டும் என்று உத்தரவிடுமாறு ஜெனரல் சௌத்ரி, பிரதமர் சாஸ்திரியிடம் கேட்டதை சாஸ்திரி நிராகரித்துவிட்டார்".

ஜென்ரல் செளத்ரியின் கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால், இந்தியா, அதிகமான பகுதியை விட்டுக் கொடுத்திருக்கவேண்டும் என்று எழுத்தாளர்கள் இந்தர் மல்ஹோத்ராவும், குல்தீப் நாயரும் பிபிசியிடம் கூறினார்கள்.

தளபதிகளை பதவிநீக்கம் செய்ய தயங்கவில்லை

பட மூலாதாரம், BBC WORLD SERVICE

தனது நினைவுகளை பகிர்ந்துக் கொள்ளும் ஹர்பக்ஷ் சிங்கின் மகள் ஹர்மாலா குப்தா சொல்கிறார், "போர்க் காலங்களில், அப்பா வீட்டிற்கு வருவதே அரிது. அப்படியே வந்தாலும், தனியறையில் தொலைபேசியில் கமாண்டர்களுடன் பேசி, யுத்தகளத்தில் நடைபெறும் விஷயங்களை கேட்டறிவார்".

"அறையில் இருந்து வெளியே வந்தாலும், எந்த தகவலையும் சொல்லமாட்டார். போரின் போக்கு, யாருக்கு சாதகமாக இருக்கிறது என்பதுகூட எங்களுக்கு தெரியாது. ஆனால் அவரை பார்த்தே நிலைமையை யூகித்துக் கொள்வோம்".

துணிச்சல் மிக்கவர் ஹர்பக்ஷ் சிங் என்று கூறுகிறார், அவரிடம் ஏ.டி.சியாக பணியாற்றிய கேப்டன் அமீர்ந்தர் சிங். ஆனால் பணியில் தவறு செய்தால் அதை அவர் ஒருபோதும் மன்னிக்கமாட்டார் என்றும் சொல்கிறார்.

1965 ம் ஆண்டு போரில் எதிர்பார்த்தபடி வேலை செய்யத் தவறிய மேஜர் ஜெனரல் நிரஞ்சன் பிரசாத்தை நீக்க தயங்காத ஹர்பக்ஷ் சிங், அக்னூர் போர்க்களத்தில் முன்னணியில் இருந்த ஜென்ரல் சோப்டா திறமையாக செயல்படாததால் அவரை அங்கிருந்து பின்வாங்கச் சொல்லவும் தயங்கவில்லை.

மரியாதைக்குரிய அதிகாரி

படக்குறிப்பு,

முன்னாள் ராணுவ தளபதி வி.என். ஷர்மா

அந்த நேரத்தில் ஜெனரல் சௌத்ரியிடன் விசேஷ உதவியாளராக இருந்து பிறகு ராணுவத் தளபதியான வி.என். ஷர்மா, கூறுகிறார்,

"ஜெனரல் ஹர்பக்ஷ் சிங் மரியாதைக்குரிய அதிகாரி. யுத்தத்தின்போது, ஒரு அதிகாரியை வெளியேற்றுவது, அதிகாரியின் ஆணையை நிறைவேற்றுவது என அனைத்தையும் தனது விருப்பத்திற்கு ஏற்பவே செய்தார். மற்றொரு நாட்டுடன் போரிடும்போது, தேவைப்பட்டால் தனது வீரர்களை சண்டையில் இருந்து பின்வாங்கச் செய்யலாம் என்று அவர் நினைத்தார்" என மேலும் தெரிவித்தார்.

உணவை வீணாக்குவதை விரும்பமாட்டார்

படக்குறிப்பு,

பிபிசி ஸ்டூடியோவில் ரெஹான் ஃபஜலுடன் ஹர்மாலா குப்தா

ராணுவமே தனது தந்தையின் முதல் குடும்பம் என்கிறார் ஜெனரல் ஹர்பக்ஷ் சிங்கின் மகள் ஹர்மாலா குப்தா. நாங்கள் அனைவரும் அவருக்கு இரண்டாம்பட்சம் என்று ஹர்மாலா குப்தா கூறுகிறார்.

இசை ரசிகரான ஜெனரல் ஹர்பக்ஷ் சிங் பழைய பாடல்களை விரும்பிக் கேட்பதுடன் பாடவும் முயற்சிப்பாராம்.

'சாந்த்வி கா சாந்த்' மற்றும் 'ப்யாசா' ஆகிய பாடல்கள் தனது தந்தைக்கு மிகவும் பிடித்தமானவை என்று சொல்லும் ஹர்மாலா குப்தா, 'அன்பைக் கோரினால் கிடைத்ததோ முள் மாலை' என்ற பொருளுடைய 'ப்யார் மாங்கா லேகின் காண்ட்டோ கா ஹார் மிலா' என்ற இந்தி மொழிப் பாடலை அடிக்கடி முனுமுனுப்பாராம்.

வாகனம் ஓட்டுவதில் விருப்பம் கொண்ட ஜென்ரல் ஹர்பக்ஷ் சிங், வண்டியை மிகவும் வேகமாக ஓட்டுவார். தந்தையுடன் பைலட் ஜீப்பை ஓட்டுவதில் போட்டிபோட்ட ஹர்மாலா ஒருமுறைகூட தந்தையை வென்றதில்லையாம்.

பட மூலாதாரம், HARMALA GUPTA

படக்குறிப்பு,

குடும்பத்துடன் ஹர்பக்ஷ் சிங் (வலமிருந்து இரண்டாவது)

"கட்டுப்பாடும், ஒழுக்கமும் எங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான அங்கங்கள். காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடையில் தின்பண்டங்கள் சாப்பிடக்கூடாது என்பது ஒரு சட்டமாகவே இருந்தது" என்று சொல்கிறார் ஹர்மாலா.

"உணவு கிடைக்காமல் இரண்டு வருடங்கள் அவதிப்பட்டிருந்த அனுபவத்தால், உணவின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தார். உணவை வீணடிக்கக்கூடாது என்று வலியுறுத்துவார். சில உணவுகளை பிடிக்கவில்லை என்று சொன்னால் அதற்காக வருத்தப்படுவார்."

பாகிஸ்தான் வீரர்களுக்கும் மரியாதை

பட மூலாதாரம், HARMALA GUPTA

படக்குறிப்பு,

ஜெனரல் ஹர்பக்ஷ் சிங் பாகிஸ்தான் ஜென்ரல் பாக்தியார் ராணாவுடன்

ஹர்மாலா சொல்கிறார், "பாகிஸ்தானில் யுத்தத்தில் வெற்றி பெற்ற பகுதிகளில் இருந்த மசூதிகளை பழுதுபார்த்தார். அதுமட்டுமல்ல, போரில் உயிரிழந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் சடலங்களை, முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்தார்."

"பாகிஸ்தான் ராணுவத்தில், ஹர்பக்ஷ் சிங்க்கு சமமான பதவி ஜென்ரல் பாக்தியார் ராணா, அவரது நண்பர் மற்றும் சக மாணவர் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். இருவரும் லாகூர் அரசு கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். போர் நிறுத்த உடன்படிக்கைக்கு பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போது, ஐ.நா சார்பில் சிலியின் ஜென்ரல் மரம்பியோ கலந்துக் கொண்டார்" என மேலும் தெரிவித்தார்.

"பேச்சுவார்த்தைக்கு சென்ற என் தந்தை, ஜென்ரல் ராணா எங்கே? அவரை பார்க்க விரும்புகிறேன் என்று சொன்னதுடன், ராணாவை பார்த்ததும், பல ஆண்டு பிரிந்திருந்த நண்பரை ஆரத் தழுவிக்கொண்டார். இந்த காட்சியைக் கண்டு திகைப்படைந்த ஜென்ரல் மரம்பியோ, நீங்களா எதிரெதிர் தரப்பில் இருந்து யுத்தம் செய்தீர்கள், என்று கேட்டார்" என்று குறிப்பிட்டார்.

வாளை பரிசாக கொடுக்கும் சாஸ்திரி

பட மூலாதாரம், BBC WORLD SERVICE

படக்குறிப்பு,

ஜெனரல் ஹர்பக்ஷ் சிங்குக்கு வாள் வழங்கும் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி

1965 ஆம் ஆண்டின் போருக்குப் பிறகு, டெல்லியில் இருக்கும் சீக்கிய சமூகத்தினரின் 'பங்களா சாஹிப் குருத்வாரா', பிரதம மந்திரி லால் பகதூர் சாஸ்திரி மற்றும் ஜெனரல் ஹர்பக்ஷ் சிங்குக்கு தலைப்பாகை வழங்கி பெருமைப்படுத்தியது.

பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கு பரிசாக வீரவாள் ஒன்று வழங்கப்பட்டது. சாஸ்திரியின் உயரத்தைவிட பெரியதாக இருந்த அந்த வாளை பெற்ற அவர், தனக்கு அருகில் அமர்ந்திருந்த ஜெனரல் ஹர்பக்ஷ் சிங்கின் கையை பிடித்து எழுப்பி, அவருக்கு பரிசாக வழங்கினார்.

அப்போது, சாஸ்திரி சொன்ன வார்த்தைகள் மிகவும் பிரபலமானவை. நான் வேட்டி கட்டும் பிரசாத், ஆனால் என்னுடைய ஜென்ரல் வேட்டிக்கட்டும் சாதாரணர் அல்ல, யுத்தகளத்தில் போரிடும் வீரர் என்ற பொருள்படும், "மை தோ தோத்தி பிரசாத் ஹூ, பர் மேரே ஜென்ரல் தோத்தி பிரசாத் நஹி".

இன்றும் பிரதமர் சாஸ்திரி வழங்கிய வாளை ஜெனரல் ஹர்பக்ஷ் சிங்கின் குடும்பத்தினர் பொக்கிஷமாக பாதுகாத்து வருகின்றனர்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :