பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம்: 'தொடர்ந்து நீடிக்கவில்லை' என அமெரிக்கா மறுப்பு

பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மென்மையாக்கலாம் என்று செய்திகள் வந்த போதிலும், தாங்கள் அந்த ஒப்பந்தத்தை கைவிடுவதாக அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம்: தொடர்ந்து நீடிக்கவில்லை என அமெரிக்கா மறுப்பு

பட மூலாதாரம், Reuters

சனிக்கிழமையன்று வெள்ளை மாளிகை பிரதிநிதி ஒருவரை சந்தித்த அதிகாரிகள், 2015 பருவநிலை ஒப்பந்தத்தை தொடர்ந்து அமெரிக்கா கடைபிடிக்கலாம் அல்லது இது தொடர்பாக தங்களின் அணுகுமுறையை மாற்றலாம் என்று தெரிவித்தனர்.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், 'எங்கள் நாட்டுக்கு சாதகமான வகையில் விதிமுறைகள் இல்லாத வரை, இந்த ஒப்பந்தத்தில் மீண்டும் சேர முடியாது என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் அமெரிக்காவுக்கு உரிய நியாயமான பங்கு வேண்டும் என்று தான்விரும்புவதாக கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

பருவநிலை மாற்றத்திற்கு எதிராக டிரம்பின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாம்பர்க்கில் நடைபெற்ற ஆர்பாட்டம்

இது தொடர்பாக புதிய ஒப்பந்தம் ஏற்பட்டால் அது அமெரிக்க வணிகத்துக்கு தீமையாக இராது என்று டிரம்ப் மேலும் தெரிவித்திருந்தார்.

ஆனால், அவரது கருத்தின் எதிர்ப்பாளர்கள், இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவது முக்கியமான ஒரு உலக மாற்றம் தொடர்பான அம்சத்தில் அமெரிக்க தலைமை விலகுவதாக குறிப்பிட்டனர்.

அமலுக்கு வந்த பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம்

முன்னதாக, பல ஆண்டுகள் நடைபெற்ற சிக்கலான பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பருவநிலை மாற்றம் தொடர்பாக கையெழுத்தான உலக நாடுகளின் முதல் ஒப்பந்தமான பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.

தொழிற்புரட்சி ஏற்பட்ட காலத்தில் இருந்த அளவிலிருந்து சராசரியாக இரண்டு டிகிரி உலக வெப்பமயமாதலைக் குறைப்பதை இது இலக்காகக் கொண்டிருக்கிறது.

பலத்த புயல்கள், வறட்சிகள் மற்றும் கடல் நீர்மட்டம் உயர்தல் உள்பட ஆபத்தான பருவநிலை மாற்றங்களை தவிர்ப்பதற்கு இந்த இலக்கு முக்கியமானது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

தொழிற்புரட்சி மேற்கொள்ளப்பட்ட காலத்திற்கு முன்பை விட பூமியில் ஏற்கெனவே ஒரு டிகிரி வெப்பம் தற்போது அதிகரித்திருக்கிறது.

எரியாற்றல் உற்பத்தி, போக்குவரத்து, விவசாயம், குடியேற்றம் ஆகியவற்றிற்காக காடுகளை அழிப்பதால் மனிதர்கள் வெளியேற்றக்கூடிய பசுங்குடில் வாயுக்களால் முக்கியமாக பூமியின் வெப்பம் அதிகரிப்பதாக பருவநிலை அறிவியல் குற்றம் சாட்டுகிறது.

90-க்கு மேற்பட்ட நாடுகள் இந்த ஒப்பந்தத்திற்கு இசைவு தெரிவித்திருக்கின்றன. கடந்த ஆண்டு நடைபெற்ற பாரிஸ் மாநாட்டில், ஐநாவின் 197 உறுப்பு நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

ஆனால், இந்த ஒப்பந்தம் சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தாமல் இருப்பதால், ஒவ்வொரு நாடுகளின் தன்னார்வ அர்ப்பணத்தையும் செல்பாடுகளையும் சார்ந்துதான் இது அமைகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவு சர்வதேச நாடுகளின் கண்டனங்களை பெற்றது

2019 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி வரை இந்த பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கான நோக்கம் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக எந்த நாடும் அறிவிக்க முடியாத நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு, அடையாள முக்கியத்துவத்தை மட்டுமே பெறுகின்ற ஒரு நிகழ்வாகிப் போனது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :