இன்ஸ்டாகிராம் மூலம் எப்படி பணம் சம்பாதிக்கிறார்கள்?

ஃபேஸ்புக்குக்கு சொந்தமான புகைப்பட செயலியான, இன்ஸ்டாகிராம், பல சிறு தொழில்முனைவோருக்கு லாபகரமான தொழில் மேற்கொள்ளும் இடமாக மாறிவிட்டது. இதன் பின்னணியில் உள்ள ரகசியங்கள் என்னென்ன?

CAT MEFFAN

பட மூலாதாரம், Getty Images

புகைப்பட செயலியான இன்ஸ்டாகிராமை ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த 2012ம் ஆண்டு 1 பில்லியன் டாலருக்கு வாங்கியபோது அது அனைவரின் புருவத்தையும் உயர்த்தி பார்க்க வைத்தது. அதற்கு முக்கிய காரணம் அப்போது இன்ஸ்டாகிராம் துவங்கி 18 மாத காலமே ஆகியிருந்தது.

தற்போது 2017யிலும் ஃபேஸ்புக்கின் ஒரு அங்கமாகவே இருக்கும் இன்ஸ்டாகிராமின் பயனர்கள் எண்ணிகை 700 மில்லியனையும் தாண்டிவிட்டது. அது டிவிட்டர் மற்றும் ஸ்னாப்சாட் செயலிகளின் கூட்டெண்ணிக்கையை கடந்துவிட்டது.

மேம்படுத்தப்பட்ட புகைப்பட வடிப்பான்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் என்று சொல்லப்படும் ஒரு புகைப்படம் அல்லது சிறு வீடியோவை பதிவேற்றி, 24 மணிநேரத்தில் மறைந்துவிடும் சிறப்பம்சம் உள்ளிட்ட, மக்களை அதிகம் ஈர்க்கும் வசதிகளை கொண்டுள்ள இன்ஸ்டாகிராம் தனிப்பட்ட முறையில் பணிபுரிவோர் மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள் ஆகியோரிடம் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

சரி, அதை வைத்து எப்படி பணம் ஈட்ட முடியும் ?

"இன்ஸ்டாகிராம் உங்கள் கடையின் முகப்பு போன்றது" என்று கூறுகிறார் சல்கி டால் என்னும் புனை பெயருடன் பணியாற்றும் அலங்கார ஒப்பனையாளரான டோனா மேக்கல்லாக்.

பட மூலாதாரம், CAT MEFFAN

படக்குறிப்பு,

யோகா பயிற்சியாளராக கேட் மெஃபான் தனது யோகா புகைப்படங்கள் மூலம் இன்ஸ்டாகிராமில் 77,000 பின்தொடர்பாளர்களை வைத்துள்ளார்.

" இனி மக்கள் வணிக தொடர்பு அட்டைகளை கேட்பதற்கு பதிலாக ' ஹேண்டில்' என்று செல்லமாகக் கூறப்படும் இன்ஸ்டாகிராமில் உள்ள உங்களது கணக்கின் பெயரை கேட்பார்கள். இது ஒரு உடனடித் தொடர்பு வழி - நீங்கள் இருவரும் திறன்பேசியை திறந்தால் போதும், நீங்கள் தொடர்புக்கு வந்துவிடுவீர்கள் " என்றார் அவர்.

யோகா பயிற்சியாளராக கேட் மெஃபான், உலகத்தின் பல இடங்களில் எடுக்கும் கவர்ச்சிகரமான தனது யோகா புகைப்படங்கள் மூலம் இன்ஸ்டாகிராமில் தனக்கிருக்கும் 77,000 பின்தொடர்பாளர்களை ஊக்குவிக்கும் எண்ணத்தில் செயற்படுவதாக தெரிவித்தார்.

அதே சமயம், இந்தப் படங்கள் இவரின் வணிகத்தையும் மேம்படுத்த உதவுகின்றன.

"எனது முதல் யோகா முகாமுக்கான இடங்கள் ஐந்தே நாட்களில் விற்றுத் தீர்ந்துவிட்டன. நான் செய்ததெல்லாம், இன்ஸ்டாகிராமில் அது குறித்து ஒரே ஒரு புகைப்படத்தை மட்டும் பதிவிட்டேன் , அவ்வளவுதான்" என்கிறார்.

"நான் மிகவும் அதிர்ச்சியடைந்து போனேன். மேலும் உற்சாகமாகிவிட்டேன். அதுதான் இன்ஸ்டாகிராம் சக்தி" என்கிறார் அவர்.

கேட், தான் எடுத்த புகைப்படங்களுக்கு தலைப்புக்களை எழுத ஒரு மணிநேரம் வரை செலவழிப்பதாக கூறுகிறார். சில நேரங்களில் அவர் புகைப்படங்களை எடுப்பதற்காகும் நேரத்தைவிட தலைப்பெழுத அதிக நேரத்தை செலவிடுவதாக கூறுகிறார்.

"சில நேரங்களில் புகைப்படம் எடுப்பதற்காக எனது பங்குதாரருடன் வெளியே செல்வேன். ஆனால், பொதுவாக ஒரு சுய-நேர அளவீடு அல்லது கைபேசியை எடுத்து செல்வேன்."

டோனாவை போன்று கேட்டும், புகைப்படங்களில் ஹேஷ்டேகுகளை இணைப்பது புதிய பார்வையாளர்களை அடைவதற்குரிய சிறந்த வழியாகும் என்கிறார். உதாரணத்திற்கு #yoga என்று இன்ஸ்டாகிராமில் தேடினால் கேட்டின் புகைப்படங்கள் மற்றும் மற்றவர்களினுடையதும் கிடைக்கும். அதேபோன்று #OOTD (Outfit of The Day) என்று தேடினால் டோன்னாவின் மிகவும் பிரபலமான பதிவுகள் கிடைக்கும்.

"ஒத்த மனநிலையுடன் உள்ளவர்களை கண்டறிவதற்கான சிறந்த வழி இதுவாகும்"என்கிறார் கேட்.

பட மூலாதாரம், SULKY DOLL

படக்குறிப்பு,

இன்ஸ்டாகிராம் உங்கள் கடையின் முகப்பு போன்றது என்கிறார் டோனா மேக்கல்லாக்.

இந்த இரு பெண்களுமே இன்ஸ்டாகிராமில் உள்ள 'ஸ்டோரீஸ்' என்னும் வசதியை பயன்படுத்தி அவர்கள் உண்மையிலேயே எப்படி உள்ளார்களோ அதை வெளிப்படுத்தும் வகையில் காணொளியை பதிவிடுகிறார்கள். இது, பொதுவாக இன்ஸ்டாகிராமில் செயற்கையான புகைப்படங்களே பகிரப்படும் நடைமுறைக்கு மாற்றாக உள்ளது.

"இன்ஸ்டாகிராமின் ஸ்டோரீஸ் என்னும் வசதி உங்களை தனிநபராகவோ அல்லது பிராண்டாகவோ நிலைநிறுத்த உதவும்" என்று கூறுகிறார் டோன்னா.

""இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் வசதியில் ஒரு சிறப்பு என்னவென்றால், இது இணைய வலை என்ற திரைக்குப் பின்னால் சென்று பயன்பாட்டாளர்களைப் பார்க்க அனுமதிப்பதுதான். இதில் கிடக்கும் மிகப் பெரிய பாராட்டு என்னவென்றால் நீங்கள் உங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்யும் பதிவுகள் உங்களின் நிஜ வாழ்க்கையுடன் ஒத்துப்போவதாக மற்றொருவர் கூறுவதுதான்", என்று அவர் கூறுகிறார்.

கேட் மற்றும் டோன்னா ஆகிய இருவருமே தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கங்களை கிட்டத்தட்ட ஒரு குறிப்பிட்ட தலைப்புகளின் அடிப்படையிலே அமைத்துள்ளார்கள். யோகா/உடல்நலம் மற்றும் பேஷன் ஆகியவை முறையே அவர்கள் கவனம் செலுத்தும் தலைப்புகளாகும்.

உங்களை இன்ஸ்டாகிராமில் பின் தொடருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென்றால், குறிப்பிட்ட தலைப்புகளில் கவனம் செலுத்தி பதிவுகளை இடுவது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்கிறார் இன்ஸ்டாகிராமில் 1.73 லட்சம் பின்தொடர்பாளர்களை கொண்டுள்ளவரும் இன்ஸ்டாகிராம் ஆலோசகருமான டேனி காய்.

பட மூலாதாரம், DANNY COY

படக்குறிப்பு,

இன்ஸ்டாகிராமில் 1.73 லட்சம் பின்தொடர்பாளர்களை கொண்டுள்ளவரும் இன்ஸ்டாகிராம் ஆலோசகருமான டேனி காய்.

இவர் நடத்தும் வைப்ரன்ஸ் என்னும் நிறுவனமானது மாதத்திற்கு 300 பவுண்டு வழங்கினால் ஒவ்வொரு நான்கு வாரத்திற்கும் 2,000 புதிய பின்தொடர்பாளர்களை பெறவியலும் என்கிறது. மேலும், தொடர்ந்து பதிவுகளை இடுவதும் மற்றும் ஆர்வம் அளிக்கவல்ல சில புகைப்படங்களை வைத்திருப்பதும் பின்தொடர்பாளர்களை கவர்வதற்காக வழிகளாகும்.

"நீங்கள் தினமும் பதிவுகளை இட வேண்டிய அவசியமில்லை, ஆனால் அப்பதிவுகளை பயன்பாட்டாளர்கள் பார்த்து கருத்துகளைச் சொல்வது, 24 மணி நேரத்திற்கு பின்பு மட்டும்தான் உச்சத்துக்கு செல்லும்" என்று அவர் கூறுகிறார்.

"உங்களுக்கு தனித் திறன் எந்தத் துறையில் உள்ளதோ அதை மட்டும் செய்வது அவசியம்".

அது, இன்ஸ்டாகிராமில் அறிவுறுத்தலும் கூட…

"நீங்கள் இன்ஸ்டாகிராமில் ஒவ்வொருமுறை வரும்போதும் வெவ்வேறான விடயங்களை கூறினால் நீங்கள் என்ன கூற வருகிறீர்கள் என்பதை புரிந்துகொள்ள மக்கள் சிரமப்படுவார்கள்" என்று கூறுகிறார் அந்நிறுவனத்தின் சிறு தொழில்கள் பிரிவின் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளின் மேலாளர் ஜென் ரோனான்.

"உங்களின் வாடிக்கையாளர்கள் என்னவெல்லாம் அறிய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை நன்றாக முடிவுசெய்து, அதை மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக தருகிறீர்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும்".

டேனியின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் , தங்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து இன்ஸ்டாகிராமில் ஒரு உண்மையான தோற்றத்தைப் பெற விரும்பும் நிறுவனங்கள்தாம் என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், MARIANN HARDEY

படக்குறிப்பு,

இன்ஸ்டாகிராமில் முக்கியமான விஷயம் என்னவென்றால் "இடுகை வேடிக்கையாக இருக்கிறதா" மற்றும் படங்கள் "அழகாக" உள்ளதா என்பதுதான் பேராசிரியரான மரியான் ஹார்டி

"ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிதாக வரும் புகைப்படக்காரர்கள் தாங்கள் பெற தகுதியுள்ள பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை அடைய முடியவில்லை என்று நினைப்பார்கள்" என்கிறார். "எல்லோரும் ஏதவது ஓரிடத்தில் தொடங்க வேண்டும்".

இன்ஸ்டாகிராமில் அதிக எண்ணிக்கையிலான பின்தொடர்பாளர்களை கொண்டுள்ளோரை 'செல்வாக்கு செலுத்துபவராக அல்லது 'தூதுவாராக' தங்கள் நிறுவனத்துக்குப் பணியாற்றுமாறு அணுகும் பல பிராண்டுகள் ( பிரபல நிறுவனங்கள்) இதற்காக அவர்களுக்கு குறிப்பிட்ட தொகையும் தருகின்றன.

பிற செய்திகள் :

புகைப்பட அல்லது காணொளி மூலம் ஒரு குறிப்பிட்ட பிராண்டினுடைய தயாரிப்பு மற்றும் புகைப்படங்கள் இணைப்பது என்பது நல்ல பலனை தருவதாக இருந்தாலும் அந்த பதிவு இன்ஸ்டாகிராமின் கொள்கைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். எது வணிக ரீதியாக பதிவு செய்யப்படுகிறது என்பதை தெளிவாக்க வேண்டும்.

ஆனால், டோன்னா மேக்கலக் தான் அவ்வாறு செய்யதில்லை என்று கூறுகிறார். "நான் எனது நேர்மையை இழப்பேன்" என்று கூறும் அவர், இருந்தாலும் அவர் தனக்கு கொடுக்கப்பட்ட ஆடைகளை அணிந்து கொள்வதாக ஒப்புக்கொள்கிறார்.

"ஏனெனில் நான் அதை விரும்பினேன்" என்றும் அவர் கூறுகிறார்.

தனக்கு சரியெனப்படாத பிராண்டுகளுக்கு பெரும்பாலான சமயங்களில் "முடியாது" என்று சொல்வதாக கூறும் கேட் மேபிபான், சிலவற்றை மட்டும் ஏற்றுக்கொள்வதாக கூறுகிறார்.

"இன்ஸ்டாகிராம் உலகத்தை பொறுத்தவரை இதற்கு நிலையான குறிப்பிட்ட கட்டணமெல்லாம் இல்லை". ஆனால், உங்களின் தகுதியை பொறுத்து அக்குறிப்பிட்ட பிராண்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவதே வழி" என்கிறார் அவர்.

"என்னுடைய பக்கத்தை பயன்படுத்தி பதினெட்டு மாதங்களுக்கு முன்னதாகவே மாதத்திற்கு £2000 முதல் £3000 வரை பெற்றிருக்க முடியும்" என்று டேனி காய் கூறுகிறார்.

ஆனால் இந்த நடைமுறை குறித்து பிரபல நிறுவனங்கள் தெளிவடைந்துவிட்டதால், சந்தையில் இந்த நடைமுறைக்கான மதிப்பு குறைந்து வருகிறதென்று அவர் கூறுகிறார். ஒரு இன்ஸ்டாகிராம் பயன்பாட்டாளர் ஒரு குறிப்பிட்ட பிராண்டை டேக் செய்தால் அந்த புகைப்படத்தை அக்குறிப்பிட்ட பிராண்டு பணமளிக்காமல் பயன்படுத்திகொள்ளலாம்.

பட மூலாதாரம், Getty Images

"பெரும்பாலானோர் முதலில் கேட்பர்" என்றார் அவர். "ஆனால், ஒருவேளை நீங்கள் உங்கள் பதிவில் அவர்களை டேக் செய்துவிட்டு இன்ஸ்டாகிராமில் போட்டுவிட்டால், அவர்கள் உங்களின் அனுமதியை பெற வேண்டிய அவசியமில்லை".

ஆனால், சில நேரங்களில் பார்வையாளர்கள் தாங்கள் இன்ஸ்டாகிராமில் ரசிக்கும் பதிவாளர்களின் படங்கள் அல்லது வீடியோக்கள் , நிறுவனங்களால் பணம் தந்து பதிவேற்றப்பட்டவை என்பதை உணர்ந்தால் அது அவர்களை எரிச்சலடைய வைக்காதா ?

டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் சந்தைப்படுத்தல் துறையின் பேராசிரியரான மரியான் ஹார்டி, இன்ஸ்ட்ராகிராம் பயன்பாட்டாளர்கள் சமூகம் ஏமாறக்கூடியதல்ல என்று நினைக்கிறார்.

"செல்வாக்கு செலுத்துபவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் , அல்லது நாம் பார்க்கும் படங்கள் அல்லது வீடியோக்கள் பணம் வாங்கப்பட்டு பதிவேற்றப்பட்டிருக்கின்றன என்பது குறித்து என்பது குறித்து கோபமடைவது எளிது, ஆனால் ஆனால் இன்ஸ்டாகிராமை அதிகம் பயன்படுத்துவர்கள், இது போல பணம் தந்து தரவேற்றப்படும் விஷயங்களைப் பகுத்தாய்ந்து புரிந்து கொள்ளக்கூடிய அறிவு கொண்டவர்கள்தான்," என அவர் கூறுகிறார்.

மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் "இடுகை வேடிக்கையாக இருக்கிறதா" மற்றும் படங்கள் "அழகாக" உள்ளதா என்பதுதான் என்று அவர் கூறுகிறார்.

எனவே, ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு, வணிகரீதியானதாக இருந்தாலும், அது விரும்பக்கூடிய அளவில் இருந்தால், கருத்துகளைத் தூண்டக்கூடிய அளவில் இருந்தால், அதன் உள்ளடக்கம் பொழுதுபோக்கானதாக இருந்தால், பயன்பாட்டாளர்கள் அதை ஆட்சேபிக்கமாட்டார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :