இந்திய-பாகிஸ்தான் போர்க் களத்தில் டாங்கியின் மேல் நின்று எதிரிகளையும் வியக்க வைத்த கர்னல்

  • ரெஹான் ஃபஜல்
  • பிபிசி
கர்னல் தாராபோரின் மனைவியிடம் பரம்வீர் சக்ர விருதை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன்

பட மூலாதாரம், ZARIN BOYCE

படக்குறிப்பு,

கர்னல் தாராபோரின் மனைவியிடம் பரம்வீர் சக்ர விருதை வழங்குகிறார் அன்றைய குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன்

இந்தியா-பாகிஸ்தான் இடையே 1965- இல் 22 நாட்கள் நடைபெற்ற போர் தொடர்பான 22 கட்டுரைகள் கொண்ட தொடரின் பத்தாவது பகுதி.

ஃபிலெளராவை வென்ற பிறகு சியால்கோட்டை நோக்கி முன்னேறிய பூனா ஹார்ஸ் படைப்பிரிவின் (ரெஜிமெண்ட்) டாங்கிகள் இந்திய எல்லையை கடந்தன. கமாண்டிங் அதிகாரி அர்த்ஷெர் புர்ஜாரி தாராபோர், தனக்கு அடுத்த இடத்தில் இருந்த மேஜர் நிரஞ்சன் சிங் சீமாவை அழைத்தார்.

யுத்த தந்திரங்களை பற்றி விவாதிக்கவே உயரதிகாரி அழைக்கிறார் என்று நினைத்தார் நிரஞ்சன் சிங் சீமா.

ஆனால் சீமாவின் எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக, "போரில் நான் இறந்துவிட்டால், யுத்தகளத்திலேயே இறுதிச் சடங்குகளை செய்யவேண்டும். என்னுடைய பிரார்தனை புத்தகத்தை என் தாயிடமும், தங்க செயினை என் மனைவியிடமும், மோதிரத்தை மகளிடமும், பவுண்டன் பேனாவை மகன் ஜர்ஜிஸ்க்கும் கொடுத்துவிடுங்கள். ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றவேண்டும் என்று ஜர்ஜிஸிடம் சொல்லுங்கள்" என்று தாராபோர் சொன்னார்.

பட மூலாதாரம், AJAY SINGH

படக்குறிப்பு,

கர்னல் அர்த்ஷெர் புர்ஜாரி தாராபோர்

காயமடைந்தாலும் களத்தை விட்டு வெளியேறவில்லை.

ஐந்து நாட்களுக்கு பிறகு, பாகிஸ்தான் டாங்கிகளின் தாக்குதலுக்கு இலக்கான லெஃப்டினெண்ட் கர்னல் ஏ.பி. தாராபோர் போர்க்களத்தில் வீரமரணம் எய்தினார்.

குண்டு தாக்கியதில் கையில் ஆழமான காயமும் ஏற்பட்டிருந்த போதிலும் சிகிச்சைக்காக முகாமுக்கு திரும்ப மறுத்துவிட்ட தாராபோர், கையில் கட்டுப் போட்டுக் கொண்டு கடமையில் கண்ணாக இருந்தார். சிகிச்சைக்காக சென்றிருந்தால் அவர் இறந்திருக்க மாட்டார்.

புனேயில் வசிக்கும் தாராபோரின் மகள் ஜரீன் சொல்கிறார், "சவிண்டாவில் நடைபெற்ற போரில் அப்பாவின் கையில் துப்பாக்கி காயம் ஏற்பட்டது. மிகவும் வீரமான அவர், பொறுப்பை எந்த சமயத்திலும் கைவிடாத குணம் கொண்டவர். காயத்திற்காக, யுத்தகளத்தில் இருந்து விலகினால், தன்னுடைய படைப்பிரிவினர் சோர்வடைந்துவிடுவார்கள் என்று அவர் நினைத்தார்".

பட மூலாதாரம், AJAY SINGH

படக்குறிப்பு,

கேப்டன் அஜய் சிங், மேஜர் ராடி, லெஃப்டினெண்ட் கர்னல் தாராபோர் (வலப்புறம் இருப்பவர்)

டாங்கியில் போருக்கு முன்னேறினார்

ஜரீன் சொல்கிறார், "அவர் மிகவும் துணிச்சல் மிக்கவர். மிகவும் தீவிரமான காயமடைந்திருந்த நிலையில், வலியை சமாளிக்க மார்ஃபின் மருந்தை ஊசி மூலம் பயன்படுத்தியதாக அவரது சகாக்கள் பிறகு எங்களிடம் சொன்னார்கள். இந்திய படைகள் மிகவும் துரிதமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்து கொண்டிருந்த அந்த முக்கியமான கட்டத்தில் போர்க்களத்தில் இருந்து அவர் வெளியேறியிருந்தால், படைகளின் முன்னேற்றமும் தேக்கமடைந்திருக்கும்".

தாராபோருடன் யுத்தத்தில் இணைந்து பணியாற்றிய கேப்டன் அஜய் சிங் பிற்காலத்தில் லெஃப்டினென்ட் ஜெனரலாகவும், அஸாம் மாநில ஆளுநராகவும் பணியாற்றினார். அவர் நினைவு கூர்கிறார், "சவிண்டாவை சுற்றி புனே ஹார்ஸ் ரெஜிமெண்ட் ஒரு வலையத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது பிரிகேடியர் கே.கே.சிங்கின் உத்தரவு. 14-15 தேதிகளில் நாங்கள் ஜஸோரன் மற்றும் வஜீர்வாலியை கைப்பற்றினோம். பிறகு, புட்டோடோகராணியை கைப்பற்றுமாறு உத்தரவு வந்தது. அப்போது எங்களிடம் ஏழு டாங்கிகள் இருந்தன".

படக்குறிப்பு,

பிபிசி ஸ்டூடியோவில் ஜென்ரல் அஜய் சிங்குடன் ரெஹான் ஃபஜல்

டாங்கியில் பயணித்த தாராபோர்

அஜய் சிங் மேலும் கூறுகிறார், "கர்வால் காலாட்படையின் ஒன்பதாம் பிரிவுடன் நாங்களும் சென்றோம். உத்தரவை நிறைவேற்றினோம். பாகிஸ்தானின் கடுமையான எதிர் தாக்குதலை எதிர்கொண்டோம். இரு தரப்பிலும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. விரைவாக கூடுதல் டாங்கிகளை அனுப்புமாறு தலைமை அதிகாரிக்கு அவசர செய்தி அனுப்பினேன். அருகிலிருந்த அனைத்து டாங்கிகளையும் அழைத்துக் கொண்டு தானும் ஒரு டாங்கியில் ஏறி வந்த அவர், எதிரிகள் மீது தாக்குதல் நடத்தினார்".

"அப்போதுதான் தாராபோர் பாகிஸ்தானி டாங்கியால் பலத்த காயமடைந்தார். தீவிரமான போர் நடந்து கொண்டிருந்த நிலையில் அவர் இறந்துவிட்டார் என்பது மாலையில்தான் தெரியவந்தது. அவர் பயணித்த குஷாப் என்ற டாங்கி மிக அதிகமான தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தது, அது மீண்டும் கிளம்ப முடியாத நிலையில் இருந்ததால், அதை அங்கேயே கைவிட நேர்ந்தது. அதை எடுத்துச் சென்ற எதிர் தரப்பினர், பாகிஸ்தான் போர் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைத்துள்ளனர்" என்று நினைவுகளை பகிர்ந்துக் கொள்கிறார் அஜய் சிங்.

பட மூலாதாரம், ZARIN BOYCE

படக்குறிப்பு,

ஆங்கில பார்வையாளர் ஒருவருடன் பபீனா மெஸ்ஸில் கர்னல் தாராபோர் (இடது பக்கம்)

கடமையில் கண்ணானவர் தாராபோர்

தனது டாங்கியின் மேல்பகுதியில் நின்று கொண்டு யுத்த பூமியை கண்காணிப்பார் தாராபோர். அவரது இறுதிகாலத்தில் கையில் கட்டுடன் இருந்தாலும் கடமையில் கண்ணாக இருந்தார்.

ஜரீன் சொல்கிறார், "பொதுவாக போரின்போது, டாங்கிகளின் மேல்பகுதி மூடப்பட்டிருக்கும், அப்போதுதான் உள்ளேயிருப்பவர்களுக்கு பாதுகாப்பு இருக்கும். ஆனால் டாங்கியின் மேல்பகுதியை அப்பா ஒருபோதும் மூடியதே இல்லை. அவரை பின்பற்றிய அவருக்கு கீழ் பணிபுரிந்த வீரர்களும், டாங்கியின் மேற்புரத்தை திறந்து வைத்திருப்பார்கள். டாங்கியின் மேற்புரத்தில் இந்திய ராணுவத்தினர் நின்றுகொண்டு வருவதை பார்த்து பாகிஸ்தானி வீரர்களுக்கு வியந்தார்களாம்!"

ஜென்ரல் அஜய் சிங் சொல்கிறார், "படையை வழி நடத்துபவர்கள் எப்போதும் பிற வீரர்களின் பார்வையில்படும்படி இருக்கவேண்டும். அணியை வழிநடத்துபவர் எப்போதும் துணையாக ஆதரவாக இருக்கிறார் என்று அவர்களுக்கு தெரிவது வீரர்களின் மனோபலத்தை அதிகரிக்கும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். கருப்பு கண்ணாடி அணிந்துகொண்டு அனைவரின் பார்வையில் படுமாறே இருப்பார். அச்சம் என்பதே அவருக்கு கிடையாது".

பட மூலாதாரம், ZARIN BOYCE

படக்குறிப்பு,

இளமைக்காலத்தில் கர்னல் தாராபோர்

கையெறி குண்டில் இருந்து பாதுகாத்த தாராபோர்

புனே ஹார்ஸ் ரெஜிமெண்டில் பணிபுரிந்த கர்னல் தாராபோர், ஹைதராபாத் மாகாண ராணுவத்திலும் பணியாற்றியவர். இந்திய அரசின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எல். எத்ரோஸ் தனது படைப்பிரிவை பரிசோதித்தபோது நடந்த சம்பவம் இது.

கையெறி குண்டு வீசும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இளம் சிப்பாயி ஒருவர், பலர் அமர்ந்திருந்த இடத்தில் குண்டை தவறுதலாக வீசிவிட்டார். வெடிப்பதற்கு முன் பாய்ந்துபோய் அதை கைப்பற்றிய தாராபோர் அதை வேறு இடத்தை நோக்கி வீசியெறிந்தார்.

மின்னல் வேகத்தில் தாராபோர் செயல்பட்டாலும், தூக்கிவீசும்போதே அவரது கையிலேயே வெடித்த குண்டின் சிதிலங்கள் அவர் உடலின் பல இடங்களை பதம் பார்த்துவிட்டது.

பட மூலாதாரம், AJAY SINGH

படக்குறிப்பு,

ஃபிலோரா காவல்நிலையத்தை கைப்பற்றிய இந்திய படை

இந்தியாவுடன் இணைந்த ஹைதாராபாத்

ஜரீன் சொல்கிறார், "அவர் குணமடைந்த சில நாட்களில் ஜென்ரல் எத்ரோஸ் அப்பாவை அழைத்து, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். ஆயுத படைப்பிரிவுக்கு பணி மாறுதல் கோரிய அடுத்த நாளே, ஹைதராபாத் ஆயுத படைப்பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்தியாவுடன் ஹைதராபாத் இணைந்தபோது, புனே ஹார்ஸ் ரெஜிமெண்டில் சேர்க்கப்பட்டார்".

கர்னல் தாராபோரின் வீர தீரத்தை பெருமையுடன் நினைவுகூர்கிறார் ஜென்ரல் அஜய் சிங், "புட்டோடோகராணிக்கு அவர் நேரடியாக வரவேண்டிய அவசியமே இல்லை. காயமடைந்திருந்த நிலையில் வேறு அதிகாரியை அனுப்பியிருக்கலாம். நீங்கள் உங்களை நிலையை மாற்றிக் கொண்டு டாங்கியின் மூடியிருக்கும் பகுதிக்குள் சென்றுவிடுங்கள் என்று சக வீரர் பலமுறை சொன்னார், ஆனால், எனது சக வீரர்களுக்கு என்ன நடக்குமோ, அதுவே எனக்கும் நடக்கட்டும் என்று அவர் உறுதியாக சொன்னதை மறக்கவேமுடியாது".

பட மூலாதாரம், ZARIN BOYCE

படக்குறிப்பு,

கர்னல் தாராபோரின் அஸ்தியுடன் மகள் ஜரீன் (இடது), மனைவி (வலது)

மானசீக கதாநாயகன் நெப்போலியன்

யுத்தத்தில் தாராபோரின் நிர்வாகத்திறனை எதிரி தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

1965 ஆம் ஆண்டில் பாகிஸ்தானிய ராணுவத்தின் இயக்குனராக பதவிவகித்த குல் ஹாசன் கானின் சுயசரிதையில் காணப்படும் குறிப்பு: "தாராபோரின் வயர்லெஸ் உரையாடலை கேட்குமாறு குதிரைப்படையின் (Cavalry) 25வது பிரிவின் கமாண்டர் நிஸார் கான் என்னிடம் சொன்னார்... கேட்டேன், அது எங்களுக்கு மிகப் பெரிய பாடமாக இருந்தது. தன்னுடைய படைப்பிரிவினருக்கு அவர் உத்தரவிடும் பாங்கு அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று."

தனது தந்தையின் மானசீக கதாநாயகன் நெப்போலியன் என்று சொல்கிறார் தாராபோரின் மகள் ஜரீன். நெப்போலியன் பற்றிய பல புத்தகங்களை அவர் சேர்த்து வைத்திருந்தார். இசையில் நாட்டம் கொண்ட தாராபோர், இரவு நேரத்தில் ஆங்கில இசையை விரும்பிக் கேட்பாராம். சைக்கோஸ்கி (Tchaikovsky)யின் இசையில் மையல் கொண்டவர் தாராபோர்.

குடியரசு தினத்தில் ...

லெப்டினென்ட் ஜெனரல் நிரஞ்சன் சிங் சீமாவின் மனைவி உஷா சீமா கூறுகிறார்: "என் கணவர் 1965 போருக்குப் கிளம்பும்போது அவரை வழியனுப்புவதற்கு ரயில் நிலையத்திற்கு வந்திருந்தேன். ரயில் கிளம்பும் நேரத்தில் தாராபோர் என்னிடம் வந்தார். கவலைப்படாதே உஷா, நான் நிரஞ்சனை கவனமாக பார்த்துக் கொள்கிறேன் என்று உறுதி கூறினார். மற்றவர்களின் உயிரை பாதுகாக்க விரும்பிய அவர் தனது உயிரை துச்சமென மதித்தார். எனக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய வீரரை மீண்டும் பார்க்கவே முடியவில்லை".

கர்னல் தார்போரின் மகள் ஜரீன் தனது மனதில் பசுமையாக பதிந்துவிட்ட நினைவுகளில் ஒன்றை சொல்கிறார்: "1966ஆம் ஆண்டு குடியரசு தினத்திற்கு டெல்லி சென்றிருந்தோம். கர்னல் ஆஃப் த ரெஜிமென்டின் இருக்கைக்கு அருகில் எனது தாயார் அமரவைக்கப்பட்டார். குடும்பத்தின் பிற உறுப்பினர்கள் முன்வரிசையில் அமர்ந்திருந்தோம். என் அம்மாவுக்கு அப்போது 41 வயதுதான். அப்பாவுடைய பெயரும், அவரின் பெருமைகளும் கூறப்பட்டபோது, எங்களுக்கு ஏற்பட்ட உணர்ச்சிகளை வார்த்தைகளால் விவரிக்கமுடியாது. அம்மாவின் கையில் பரம்வீர் சக்ர விருதை அளித்த குடியரசுத் தலைவர், ஆறுதலாக அம்மாவின் கையில் தட்டிக் கொடுத்தார். எங்கள் கண்களில் இருந்து கண்ணீருக்கு தடைபோட முடியவில்லை."

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :