அணு ஆயுத போர் நடக்காமல் தடுத்த ஸ்டனிஸ்லாஃப் பெட்ரோஃப் 77 வயதில் மரணம்

அணுஆயுத போரை நடக்காமல் தடுத்த ஸ்டனிஸ்லாஃப் பெட்ரோஃப் 77 வயதில் மரணம்

பனிப்போர் உச்சத்தில் இருந்த காலத்தில் நிகழ்ந்திருக்கக்கூடிய அணுஆயுத பேரழிவை தடுத்தவர் என்று போற்றப்படும் சோவியத் ராணுவ அதிகாரி ஸ்டனிஸ்லாஃப் பெட்ரோஃப் தனது 77-வது வயதில் உயிரிழந்தார்.

1983-ம் ஆண்டு பனிப்போர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் ஸ்டனிஸ்லாஃப் பெட்ரோஃப் ரஷ்ய ஆணு ஆயுத முன்னெச்சரிக்கை மையத்தில் பணியில் இருந்தார். அப்போது அந்த எச்சரிக்கை மையத்தின் கணினி அமெரிக்க ஏவுகணைகள் ரஷ்யாவை நோக்கி வருவதாக தவறான தரவுகளை காட்டியது.

இது தவறான எச்சரிக்கையாகதான் இருக்கும் என்று கருதிய பெட்ரோஃப், இதை தனது மேலதிகாரிகளுக்கு சொல்ல வேண்டாம் என்று முடிவு செய்தார்.

அப்போது மட்டும் இந்த தகவல் உண்மையென கருதி, தனது உயரதிகாரிகளுக்கு தெரிவித்திருப்பாராயின், அது அணு ஆயுத போர் வெடிக்க காராணமாக அமைந்திருக்கும்.

ஒரு அணு ஆயுத யுத்தத்தை தவிர்த்த பெட்ரோஃபின் இந்த செயல், பல ஆண்டுகளுக்கு பின்புதான் வெளிச்சத்துக்கு வந்தது.

2013-ம் ஆண்டு பெட்ரோஃப் பிபிசி-க்கு அளித்த நேர்காணலில், அமெரிக்க ஏவுகணைகள் தாக்கப்போகிறது என்று பரிந்துரைக்கும் கணினி தரவுகளை 1983 செப்டம்பர் 26 அதிகாலை வேளையில்தான் எவ்வாறு பெற்றேன் என்பதை விளக்கி இருந்தார்.

"என்னிடம் அனைத்து கணினி தரவுகளும், அதாவது அமெரிக்க ஏவுகணைகள் தாக்கப்போகிறது என்று பரிந்துரைக்கும் தகவல்கள் இருந்தன. இதை மட்டும் என் கட்டளை அதிகாரிகளுக்கு நான் அனுப்பி இருந்தால், அவர்கள் யாரும் அந்த தகவல்களுக்கு எதிராக ஒரு வார்த்தைக்கூட பேசி இருக்க மாட்டார்கள்.

பட மூலாதாரம், Getty Images

நான் செய்திருக்க வேண்டியது ஒன்றே ஒன்று மட்டும்தான், தொலைப்பேசி இருக்கும் இடத்திற்கு நகர்ந்து, என் மேலதிகாரிகளுக்கு நான் இந்த தகவல்களை தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் என்னால் அப்போது நான் அமர்ந்திருருக்கும் இடத்திலிருந்து நகர முடியவில்லை. சூடான ஒரு உலோக தட்டில் அமர்ந்திருப்பது போல அப்போது நான் உணர்ந்தேன்" என்று அந்த நாட்களை பிபிசி பேட்டியில் பெட்ரோஃப் நினைவு கூர்ந்திருந்தார்.

இக்கட்டான அந்த சூழ்நிலையில் பெட்ரோஃப் தனது உயரதிகாரிக்கு இது கணினியின் கோளாறு என்று விளக்கினார். அப்போது மட்டும், அவரின் கணிப்பு தவறாக இருந்திருக்கும்பட்சத்தில், முதல் அணுகுண்டு சில நிமிடங்களில் வெடித்திருக்கும்.

"என்னுடைய கணிப்பு சரிதான் என்பதை என்னுடைய 23 நிமிட காத்திருப்பு எனக்கு உணர்த்தியது. ஆம், எந்த அணு ஆயுத ஏவுகணை தாக்குதலும் நடைப்பெறவில்லை. அது எனக்கு பெரும் நிம்மதியை தந்தது" என்றும் அந்த பேட்டியில் கூறி இருந்தார்.

பின்பு நடந்த ஒரு விசாரணையில், மேகங்களிடையே எதிரொலித்த சூரிய ஒளியை சோவியத் ஏவுகணைகள் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணைகளாக தவறாக அடையாளம் கண்டது தெரியவந்தது.

லெப்டினன்ட் கேணலாக ஓய்வு பெற்ற பெட்ரோஃப் இந்த ஆண்டு மே மாதம் 19-தேதி அவர் வீட்டில் இயற்கை ஏய்தினார். ஆனால், இந்த தகவல் பொது சமூகத்துக்கு பெரிதாக தெரியாமல் இருந்தது. ஏதேச்சையான ஒரு தொலைபேசி அழைப்புதான் இந்த தகவலை வெளி கொண்டு வந்துள்ளது.

ஆம், பெட்ரோஃப் குறித்த இந்த ஏவுகணை செய்தியை முதன் முதலாக வெளி உலகத்துக்கு கொண்டு வந்த, ஜெர்மன் திரைப்பட இயக்குனர் கார்ல் சூமாக்கர், பெட்ரோஃப்-க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக செப்டம்பர் 7-ம் தேது அழைத்திருக்கிறார். அந்த தொலைப்பேசி அழைப்பை எடுத்த பெட்ரோஃப்பின் மகன் டிமிட்ரி, தன் தந்தை மரணித்த தகவலை கூறியிருக்கிறார்.

சூமேக்கர் பெட்ரோஃப்பின் மரண செய்தியை இணையத்தில்தான் முதலில் வெளியிட்டார். அதன்பின் தான் ஊடகங்களுக்கு இது குறித்த தெரியவந்தது.

 பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :