இந்தியா-பாகிஸ்தான் போர்: பல ஆண்டுகளுக்கு பிறகு வருத்தம் தெரிவித்த பாகிஸ்தானி விமானி

  • ரெஹான் ஃபஜல்
  • பிபிசி

இந்தியா-பாகிஸ்தான் இடையே 1965-இல் நடைபெற்ற போர் தொடர்பான 22 கட்டுரைகள் கொண்ட தொடரின் 11-ஆவது பாகம் இது.

பட மூலாதாரம், QUAIS HUSSAIN

படக்குறிப்பு,

தனது சேபர் விமானத்தில் பாகிஸ்தான் விமானி கைஸ் ஹுசைன்

1965, செப்டம்பர் 19, குஜராத் மாநில முதலமைச்சர் பல்வந்த்ராவ் மெஹ்தா அதிகாலையிலேயே தூக்கத்திலிருந்து எழுந்துவிட்டார்.

காலை பத்து மணிக்கு என்.சி.சி பேரணியில் உரையாற்றிய முதலமைச்சர் பல்வந்த்ராவ், உணவருந்திவிட்டு வீட்டுக்கு திரும்பினார். மதியம் ஒன்றரை மணி சுமாருக்கு அஹமதாபாத் விமானநிலையத்திற்கு கிளம்பினார்.

மனைவி சரோஜ்பென், சக ஊழியர்கள் மூன்று பேர் மற்றும் குஜராத் சமாச்சார் பத்திரிகையின் ஒரு நிருபர் ஆகியோர் முதலமைச்சருடன் இருந்தார்கள்.

விமானநிலையத்திற்கு வந்த அவருக்கு இந்திய விமானப்படையின் முன்னாள் விமானி, ஜஹாங்கீர் ஜுங்கூ எஞ்சினியர் சல்யூட் வைத்தார்.

400 கி.மீ. தொலைவு பயணித்து துவாரகாவிற்கு அருகில் உள்ள மீடாபுரில் நடைபெறும் பேரணியில் உரையாற்ற இருந்தார் பல்வந்த்ராய் மெஹ்தா.

விமானத்தை சுட்டு வீழ்த்த கட்டளை

பட மூலாதாரம், BBC WORLD SERVICE

மூன்றரை மணி சுமாருக்கு பாகிஸ்தானின் மெளரிபுர் விமானதளத்தில் புஜ் பகுதிக்கு அருகே உள்ள ரேடாரில் இந்திய விமானம் ஒன்று புலப்பட்டது. அதை கண்காணிக்குமாறு லெஃப்டினென்ட் புகாரி மற்றும் விமான அதிகாரி கைஸ் ஹுசைனுக்கு உத்தரவிடப்பட்டது.

அமெரிக்காவில் எஃப் 86 செபர் விமானம் பற்றிய பயிற்சியை முடித்துக்கொண்டு நான்கு மாதங்களுக்கு முன்புதான் பாகிஸ்தான் திரும்பியிருந்தார் கைஸ்.

கைஸ் கூறுகிறார், "எச்சரிக்கை ஒலி ஒலித்த மூன்று நிமிடங்களில் நான் விமானத்தை ஸ்டார்ட் செய்துவிட்டேன். 20 ஆயிரம் அடி உயரத்தில் பறக்குமாறு கூறிய ரேடார் நிலைய அறிவுறுத்தலை பின்பற்றி இந்திய எல்லைக்குள் சென்றேன்".

"சில நிமிடங்களிலேயே கீழே வருமாறு பணிக்கப்பட்டேன். மூன்றாயிரம் அடி உயரத்தில் புஜ்ஜை நோக்கி பறந்து கொண்டிருந்த இந்திய விமானத்தை பார்த்தேன். அது சிவிலியன் விமானம் என்று தெரிந்ததும் உடனே விமான கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்துவிட்டேன்," என்று பிபிசி நிருபரிடம் கைஸ் தெரிவித்தார்.

"அந்த விமானத்தின் மேற்புரத்தில் எழுதியிருக்கும் எண்ணை படிக்கும் அளவு நெருக்கமாக சென்றேன். அதில் விக்டர் டேங்கோ என்று எழுதியிருக்கிறது, எட்டு இருக்கைகள் கொண்ட விமானம் இது, இப்போது என்ன செய்வது என்று ரேடாரில் அதிகாரிகளிடம் கேட்டேன்".

மறுஉத்தரவு வரும்வரை காத்திருக்கவும் என்று பதில் வந்த்து. மிகவும் தாழ்வாக விமானத்தை செலுத்திக் கொண்டிருந்தேன், அதிக நேரம் காத்திருந்தால் விமானத்தின் எரிபொருள் தீர்ந்துவிடலாம் என்ற அச்சமும் இருந்தது. ஆனால் விமானத்தை சுட்டு வீழ்த்து என்ற உத்தரவு மூன்று அல்லது நான்கு நிமிடங்களிலேயே கிடைத்துவிட்டது.

அனைவரும் கொல்லப்பட்டனர்

ஆனால் உத்தரவு கிடைத்த உடனே கைஸ் இந்திய விமானத்தை சுடவில்லை. சிவிலியன் விமானத்தை சுடவேண்டுமா என்று மீண்டும் ஒருமுறை கேட்டார். உத்தரவு மீண்டும் உறுதி செய்யப்பட்ட பிறகே செயலில் இறங்கினார் கைஸ்.

ஹூசைன் நினைவுகூர்கிறார், "சுடுமாறு உத்தரவு கிடைத்த உடனே, நூறு அடி தூரத்தில் இருந்து விமானத்தை நோக்கி சுட்டேன். விமானத்தின் இடப்புற இறக்கையில் இருந்து எதோ ஒரு பாகம் கழன்று விழுவதைப் பார்த்தேன். பிறகு என்னுடைய விமானத்தின் வேகத்தை குறைத்துக்கொண்டு மீண்டும் சுட்டேன். அப்போது வலப்புற எஞ்சினில் இருந்து தீ கிளம்பியதைப் பார்த்தேன்."

அசைக்கப்பட்ட விமானத்தின் இறக்கைகள்

"இது ராணுவ விமானம் அல்ல" என்று இந்திய விமானத்தில் இருந்து மீண்டும் மீண்டும் சமிக்ஞைகள் அனுப்பப்பட்டதை கைஸ் நினைவுகூர்கிறார்.

"இந்திய விமானத்தை தாக்கியபோது, அதன் விமானி, இறக்கைகளை அசைத்து சமிக்ஞை அனுப்பினார். அதன் அர்த்தம், 'எங்கள் மீது கருணைக்காட்டுங்கள்' (Have mercy on me). ஆனால் எல்லைக்கு அருகே பயணிக்கும் இந்த விமானம், எங்கள் நாட்டை புகைப்படம் எடுக்கிறதோ என்ற சந்தேகமும் எழுந்தது. யுத்தகாலத்தில் இதுபோன்ற சந்தேகங்கள் எழாமல் இருப்பதுதான் தவறு".

பட மூலாதாரம், BBC WORLD SERVICE

படக்குறிப்பு,

மனைவியுடன் ஜஹாங்கீர்

"அந்த விமானத்தில் முதலமைச்சர் பல்வந்த்ராய் இருப்பார் என்று யாருக்குமே தோன்றவில்லை. மனைவி மற்றும் ஆறு அல்லது ஏழு நபர்களுடன் குஜராத் முதலமைச்சர் விமானத்தில் இருப்பார் என்று எப்படி நினைக்கமுடியும்? விமானத்திற்குள் யார் இருக்கிறார்கள் என்பதை கேட்டறியும் ரேடியோ வசதிகள் ஏதும் இல்லை".

ராணுவ நடவடிக்கைகளுக்கு சிவிலியன் விமானத்தை பயன்படுத்துவது

பாகிஸ்தானின் விமானப் போக்குவரத்து வரலாற்றில் நிபுணத்துவம் பெற்ற கைசர் துஃபைல் எழுதுகிறார், "இந்தியாவும் பாகிஸ்தானும் 1965 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போர்களில் ராணுவ சேவைக்கு சிவிலியன் விமானங்களையும் பயன்படுத்தின. எனவே எந்த விமானமாக இருந்தாலும், அது ராணுவ கண்ணோட்டத்துடனே பார்க்கப்படும்."

"ஐக்கிய நாடுகள் மற்றும் செஞ்சிலுவை அமைப்பின் விமானங்கள் மட்டுமே வெளிப்படையாக தெரியும். அந்த சமயத்தில் இருந்த சர்வதேச விமான பறப்பு சட்டங்களின்படி சிவிலியன் விமானங்களை தாக்கக்கூடாது என்று எந்த சட்டப்பிரிவும் இல்லை. பிறகு 1977 ஆம் ஆண்டில் அது ஜெனீவா உடன்படிக்கையின் ஒரு பகுதியாக மாறியது".

விடை தெரியா வினாக்கள்

பட மூலாதாரம், BBC WORLD SERVICE

படக்குறிப்பு,

ஜஹாங்கீரின் இறுதிச்சடங்குகளின் புகைப்படம்

'குஜராத் முதலமைச்சர் பல்வந்த்ராய் மெஹ்தா பயணித்த சிவிலியன் விமானத்தை பாகிஸ்தான் போர் விமானம் சுட்டு வீழ்த்தியது' என்று அன்று மாலை ஏழு மணிக்கு ஒலிபரப்பான ஆகாசவாணி செய்திகளில் அறிவிக்கப்பட்டது.

பி.வி.எஸ். ஜகன் மோகன் மற்றும் சமீர் சோப்ரா எழுதிய 'இந்தியா பாகிஸ்தான் வான் சண்டை 1965' (The India Pakistan Air war of 1965) புத்தகத்தில், "விபத்துக்குள்ளான இடத்திற்கு நலியாவின் தாசில்தார் அனுப்பப்பட்டுள்ளார், அங்கு அவர் குஜராத் சமாச்சர் பத்திரிகை நிருபரின் எரிந்துகிடந்த அடையாள அட்டையை கண்டெடுத்தார்."

"விடை தெரியா பல வினாக்கள் பதிலை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றன. போர் நடந்துக் கொண்டிருந்த சூழலில், இந்திய எல்லைப் பகுதியில் பாதுகாப்பு விமானத்தின் துணை இல்லாமல் ஒரு முதலமைச்சரின் விமானம் சென்றது ஏன்? முதலமைச்சரின் விமானப் பயணம் பற்றி இந்திய விமானப்படைக்கு தகவல் அனுப்பப்பட்டதா இல்லையா? என்பவை அவற்றில் தலையாய கேள்விகள்."

நான்கு மாதங்களுக்கு பிறகு கிடைத்த விசாரணை அறிக்கையின்படி, "முதலமைச்சரின் விமானம் பயணிக்க மும்பை விமானப்படை நிர்வாகம் அனுமதிக்கவில்லை. ஆனால் குஜராத் மாநில அரசு அனுமதி கோரி வற்புறுத்தியபோது, எங்கள் எச்சரிக்கையை மீறி செல்வதானால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று விமானப்படை நிர்வாகம் கைவிரித்துவிட்டது."

இந்திய பாகிஸ்தான் யுத்தத்தில் ராணுவத்திற்கு சொந்தமில்லாத சிவிலியன் விமானம் ஒன்று இலக்கு வைக்கப்பட்டது இதுவே முதல்முறை.

எல்லைப் பகுதியில் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்ட இந்தியாவின் முதல் அரசியல்வாதி பல்வந்த்ராய் மெஹ்தா என்பதும் குறிப்பிடத்தக்கது.

தாக்குதலை தவிர்க்க 45 நிமிடங்கள் வரை வானிலேயே சுற்றிய விமானம்

படக்குறிப்பு,

பிபிசி ஸ்டூடியோவில் ஜஹாங்கீர் எஞ்சினியரின் மகள் ஃபரீதா சிங்குடன் ரெஹான் ஃபஜல்

விமானி ஜஹாங்கீர் எஞ்சினியரின் விமானம் விபத்துக்கு உள்ளான தகவல் டெல்லியில் இருந்த குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. சித்தப்பாவான ஏர் மார்ஷல் எஞ்சினியர், ஜஹாங்கீர் எஞ்சினியரின் மகள் ஃபரீதா சிங்கிடம் இந்த தகவலை தெரிவித்தார்.

ஃபரீதா சிங் பிபிசியிடம் கூறுகிறார், 'தகவல் அறிந்த்தும் ஏற்பட்ட துக்கம், முழு விவரங்களை கேட்டதும் பன்மடங்காக அதிகரித்தது. தனது விமானத்தை தாக்க வந்த பாகிஸ்தான் விமானத்திலிருந்து தப்பிப்பதற்காக 45 நிமிடங்கள் வரை அங்குமிங்குமாக விமானத்தை ஓட்டியிருக்கிறார். செபர் விமானத்துடன் ஒப்பிடும்போது, சிறிய ரக விமானத்திற்கு எரிபொருள் குறைவாகவே செலவாகும் என்பதால் அவர் இந்த யுக்தியை கையாண்டிருக்கிறார்."

"விமானத்தை மேலும் கீழுமாக அசைத்து, எதிர் தரப்பினரை அலைகழித்திருக்கிறார். கைஸ் ஹுஸைனின் விமானத்தில் எரிபொருள் தீர்ந்து போகும் நிலையில் இருந்தபோதுதான் அவர் அப்பாவின் விமானத்தை சுட்டிருக்கிறார். தாக்குதல் நடத்திய பிறகு அவர் தனது விமானத்தை மோரிபுர் விமானதளத்தில் இறக்கியபோது எரிபொருள் முற்றிலுமாக தீர்ந்துவிட்டதால், எஞ்சின் செயல்பாட்டை நிறுத்திவிட்டது. அதன்பிறகு, அந்த விமானத்தை இழுத்துச் செல்ல வேண்டியிருந்த்து. தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் அப்பா செய்தார் என்று உறுதியாக சொல்லமுடியும்."

மின்னஞ்சலில் வருத்தம் தெரிவித்த கைஸ் ஹுஸைன்

பட மூலாதாரம், QUAIS HUSSAIN

படக்குறிப்பு,

பாகிஸ்தான் விமானப்படை விமானி கைஸ் ஹுஸைன்

இந்த சம்பவம் பற்றிய பெரிய அளவிலான விவாதம் ஏதும் எழவில்லை. ஆனால் மனதில் தனது சோகத்தை வைத்து அமைதிகாத்தார் கைஸ் ஹூஸைன்.

46 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தானின் ஒரு பத்திரிகையில் வெளியிடப்பட்ட கைஸர் துஃபைலின் ஒரு கட்டுரையில், ஜஹாங்கீர் எஞ்சினியரின் விமானம் யுத்த அபாயம் சூழ்ந்த பகுதியில் பறக்க அனுமதி கொடுத்த இந்திய போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளே அந்த உயிரிழப்புகளுக்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்த்து.

அப்போது, கைஸ் ஹுஸைன், ஜஹாங்கீரின் மகள் ஃபரீதாவிடம் தொடர்பு கொண்டு மன்னிப்பு கோரவேண்டும் என்று முடிவுசெய்தார்.

கைஸ் ஹூஸைன் நினைவுகூர்கிறார், "இந்த சம்பவம் பற்றி நேரில் கண்ட சாட்சி உங்களைத் தவிர வேறு யாரும் இல்லை என்று கூறிய நண்பர் கைஸர் துஃபைல், 'டிஃபென்ஸ் ஜர்னல் பாகிஸ்தான்' இல் வெளியிட்டார். அதற்கு பிறகு இந்திய விசாரணைக் குழு இந்த சம்பவம் குறித்து நடத்திய அறிக்கை என்னிடம் கொடுக்கப்பட்டது. அதில், தரையிறங்கிய ஜஹாங்கீர் எஞ்சினியரின் விமானத்தை பாகிஸ்தானிய விமானங்கள் இரண்டு தாக்கி அழித்ததாக கூறப்பட்டிருந்தது."

பட மூலாதாரம், BBC WORLD SERVICE

படக்குறிப்பு,

குடும்பத்துடன் ஜஹாங்கீர் எஞ்சினியர்

"எந்த சூழ்நிலையில் ஜஹாங்கீரின் விமானம் தாக்கப்பட்டது என்ற விவரங்களை அவரது குடும்பத்தினரே அறிந்திருக்கமாட்டார்கள், எனவே அவர்களை தேடி, உண்மையான விவரங்களை தெரிவிக்கவேண்டும் என்று தோன்றியது. இதுபற்றி என் நண்பன் நவீத் ரியாஜிடம் பேசினேன்" என்கிறார் கைஸ் ஹூஸைன்.

"அவர் மூலமாக ஜஹாங்கீர் எஞ்சினியரின் மகள் ஃபரீதா சிங்கின் மின்னஞ்சல் முகவரி கிடைத்த்து. 2011 ஆகஸ்ட் ஆறாம் தேதியன்று, நான் அவருக்கு எழுதிய மின்ன்ஞ்சலில் சம்பவம் பற்றிய அனைத்து விவரங்களையும் விரிவாக குறிப்பிட்டேன். மனித வாழ்க்கையின் முடிவு சோகமானது, நானும் அதற்கு விதிவிலக்கல்ல என்று அதில் குறிப்பிடிருந்தேன். உங்கள் தந்தையின் மரணத்திற்கு நான் மிகவும் வருந்துகிறேன். வாய்ப்பு கிடைத்தால், நான் தனிப்பட்ட முறையில் உங்களை சந்தித்து, எனது வருத்த்த்தை வெளிப்படுத்துவேன்."

"நான் மன்னிப்பு கேட்கவில்லை, ஒரு ராணுவ போர் விமானியாக எனது கடமையையே செய்தேன். உத்தரவை நிறைவேற்றாவிட்டால், விசாரணையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சரியான காரணம் இல்லாமல் வேண்டுமென்றே தாக்கவில்லை என்று தெரியவந்தால் கோர்ட் மார்ஷல் செய்யப்படலாம்.

"என் கடமையில் இருந்து தவறவோ, எந்தவொரு நடவடிக்கையை எதிர்கொள்ளவோ நான் விரும்பவில்லை என்று சொல்கிறார் கைஸ் ஹூஸைன்."

ஃபரீதாவின் பதில்

பட மூலாதாரம், BBC WORLD SERVICE

படக்குறிப்பு,

மனைவி மற்றும் மகள்களுடன் ஜஹாங்கீர் எஞ்சினியர்

கைஸ் ஹூஸைன் அனுப்பிய மின்னஞ்சலை ஃபரீதா கவனிக்கவில்லை.

அவர் பிபிசியிடம் கூறுகிறார், "என் அப்பா ஓட்டிச் சென்ற விமானத்தை சுட்டு வீழ்த்தியவர் என்னை தேடிக் கொண்டிருந்த தகவல் எனக்கு தெரியாது. இந்த விஷயம் தெரியவந்ததும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதற்கு காரணம், அப்பாவின் மரணம் பற்றி மீண்டும் வேறு எதையும் கேட்க விரும்பவில்லை".

"மின்னஞ்சலை தினமும் பார்க்கும் பழக்கம் இல்லாத என்னிடம் நண்பர் ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வெளியான தகவலை தொலைபேசியில் கூறினார். உடனே மின்னஞ்சலை பார்த்தேன். தாமதிக்காமல் அடுத்த கணமே பதில் மின்னஞ்சலை அனுப்பிவிட்டேன். அந்த கடிதம் வெறும் பதிவாக இல்லை, இதயத்தில் இருந்து எழுதப்பட்டிருந்தது."

"இந்த விஷயம் பற்றி அவருக்கு மிகுந்த வருத்தம் இருந்தது. அந்தத் தாக்குதலை நட்த்த அவருக்கு விருப்பமே இல்லை. தனிப்பட்ட முறையில் அவருக்கும் என் தந்தைக்கும் தனிப்பட்ட விரோதமும் இல்லை. அவரது கடமையையே செய்திருக்கிறார்."

கைஸ் கூறுகிறார், "அவரது மின்னஞ்சல் மிகவும் நன்றாக இருந்தது. நான் ஓரடிதான் எடுத்துவைத்தேன். ஆனால் அவர் பல அடிகளை முன்னெடுத்துவைத்தார்…"

'யுத்தத்தில் நாம் அனைவரும் சிப்பாய்களே'

பட மூலாதாரம், BBC WORLD SERVICE

படக்குறிப்பு,

மனைவி மற்றும் மகளுடன் ஜஹாங்கீர் எஞ்சினியர்

46 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஏன் இப்படி நடந்து கொண்டார் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று சொல்கிறார் ஃபரீதா. "ஆனால் ஒரு விஷயம் என் மனதில் தோன்றியது. இரண்டு நாடுகளுக்கு இடையே விரோதப்போக்கினால் காயம் ஏற்பட்டால் அதற்கு யாராவது ஒருவர் மருந்திட வேண்டும். அதில் அவர் முதல் அடி எடுத்துவைத்தார்."

"அவர் மனதிற்கு வருத்தம் ஏற்படுத்தும் எதையும் பதில் மின்னஞ்சலில் எழுத விரும்பவில்லை... அது விமானியின் தவறு என்று நான் நினைக்கவில்லை, தங்களுக்கு பிடிக்காத விஷயங்களையும் போரில் ஈடுபடுபவர்கள் செய்ய வேண்டியிருக்கும் என்பதையும் அறிவேன்."

"யுத்தக்களத்தில் அனைவரும் சிப்பாய்களே… எனவே கவலைப்பட வேண்டாம் என்று அவருக்கு பதில் எழுதினேன். எனது வார்த்தைகள் அவரது மனக்காயத்திற்கு களிம்பு இட்டிருக்கும் என்று நம்புகிறேன் என்கிறார் ஜஹாங்கீர் எஞ்சினியரின் மகள் ஃபரீதா.

முதலாம் உலகப் போரில் ஜெர்மனியை வீழ்த்த உதவிய இந்தியர்கள்

காணொளிக் குறிப்பு,

இந்தியர்கள் போரிட்டனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :