'கிம் ஜாங் உன்' மீம்ஸ், ஏவுகணை சோதனை - வடகொரியா சென்ற பெங்களூரு எஃப் சி வீரரின் சுவாரஸ்ய அனுபவம்.

பெங்களூரு எஃப் சி படத்தின் காப்புரிமை BFC MEDIA

'கிம் ஜாங் உன்' மீம்ஸ், ஏவுகணை சோதனை - வடகொரியா சென்ற பெங்களூரு எஃப் சி வீரரின் சுவாரஸ்ய அனுபவம்.

அணு ஆயுத சோதனை காரணமாக பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கும் உலகின் மிகவும் ரகசியமான தலைநகரில், கால்பந்து விளையாட ஒரு வீரர் அங்கே சென்றால், அவருக்கு அது சாதாரணமான சராசரியான நாளாக இருந்திருக்குமா? இல்லை.

இந்திய சூப்பர் லீக்கில் விளையாடும் அணிகளில் ஒன்றான பெங்களூரு எஃப் சி, கடந்த வாரம் வட கொரியாவின் தலைநகரான பியோங்கியங்கில் ஏ எஃப் சி கோப்பைத் தொடரில் பங்கேற்பதற்காக சென்றது. (ஏ எஃப் சி கோப்பை என்பது ஐரோப்பிய லீக் தொடர் போன்று ஆசியாவில் விளையாடப்படும் ஒரு முக்கியமான கால்பந்து லீக் தொடர்).

அப்போது 'பயண உடைமைகள் தொலைந்து போனது', 'அந்நாட்டின் சமீபத்திய ஏவுகணை சோதனையின் போது அந்நகரத்தில் இருந்தது', 'வடகொரியாவின் உயர்வான பதவியில் இருக்கும் கிம் ஜாங் உன் குறித்த மீம்கள் தங்களது வாட்ஸ் அப் குழுக்களில் இருந்ததை கண்டு பதற்றம் கொண்டது' என அந்தப் போட்டிக்கு அப்பால் வேறு சில சுவாரஸ்யமான விஷயங்களையும் அந்த அணி சந்திக்க நேர்ந்தது.

பெங்களூரு எஃப் சி அணிக்காக ஆடும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மத்திய களவீரரான எரிக் பார்டாலு வட கொரிய சுற்றுப்பயண அனுபவம் குறித்து பிபிசி ஸ்போர்ட்ஸிடம் பேசினார்.

ஏ எஃப் சி கோப்பையின் மண்டலங்களுக்கு இடையிலான அரை இறுதிச் சுற்றில், சொந்த மண்ணில் நடைபெற்ற 'முதல் லெக்' போட்டியில் பெங்களூரு அணி 3 -0 என்ற கணக்கில் வென்றது.

அரை இறுதிச் சுற்றில் வெற்றி யாருக்கு என முடிவு செய்யும் எதிரணி மண்ணில் நடக்கக்கூடிய 'இரண்டாவது லெக் ' போட்டி 4.25 எனச் சொல்லப்படும் 'ஏப்ரல் 25' விளையாட்டு குழுவின் சொந்த மண்ணான பியோங்கியாங்கில் நடந்தது.

ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் அமரக்கூடிய மிகப்பெரிய மே தின விளையாட்டு அரங்கில் நடக்கவுள்ள இந்த இரண்டாவது போட்டி குறித்து ஆரம்பத்தில் அச்சமடைந்ததாக கூறினார் முப்பத்து ஒரு வயதாகும் கால்பந்து வீரர் பார்டாலு.

ஒரு போர் நடந்து கொண்டிருக்கும் நாட்டிலோ அல்லது நிலையற்றத் தன்மை நிலவும் பகுதியிலோ விளையாடச் செல்வது என்பது வேறு விஷயம் . ஆனால் வட கொரியா முற்றிலும் வேறானது என்கிறார் பார்டாலு.

படத்தின் காப்புரிமை BFC MEDIA

ஆஸ்திரேலிய அரசு தங்கள் நாட்டு மக்களை வட கொரியாவுக்குச் செல்ல வேண்டாம் என ஏற்கனவே எச்சரித்திருக்கிறது. அங்கே தூதரகம் இல்லை என்பதையும் அணு ஆயுத போர் நடக்கும் அபாயம் இருப்பதாகவும் அந்த அரசு அறிவுறுத்தியதாகவும் பார்டாலு தெரிவித்திருக்கிறார்.

தொலைந்து போன பைகள் :-

ஆஸ்திரேலியாவுக்காக மெல்பர்ன் சிட்டி மற்றும் பிரிஸ்பேன் ரோர் ஆகிய அணிகளுக்கும், சீனா, கத்தார், கொரியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள அணிகளுக்கும் விளையாடியிருக்கிறார் பார்டாலு. போட்டி நடப்பதற்கு சரியாக இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் பியோங்கியாங்கிற்குச் சென்றுள்ளது பெங்களூரு எஃப் சி அணி.

"எந்தவொரு செய்தியையும் வெளியில் இருந்து கேட்பதற்கும் பார்ப்பதற்கும், நேரடியாக நடக்கும் விஷயங்களை பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. கிட்டத்தட்ட காலியாக இருந்த விமானநிலையத்தில் தரை இறங்கியது விசித்திரமான அனுபவமாக இருந்தது"

" அது ஒரு சர்வதேச விமான நிலையமாக இருந்தும் கூட ஒரே ஒரு விமானம் மட்டுமே தரை இறங்கியது. அங்கே எங்களது உடைமைகளை எடுத்து வந்த பை குறித்து குழப்பம் உண்டானது மேலும் அந்த விமான நிலையத்தில் நாங்கள் இரண்டு மணிநேரம் செலவளிக்க வேண்டியதாக இருந்தது. அப்போது விமான நிலையத்தில் இருந்த குடியேற்ற அதிகாரிகளும், அனைத்து கடைக்காரர்களும்

வேலையை முடித்துவிட்டு கிளம்பிவிட்டார்கள். அனைத்து விளக்குகளும் அனைக்கப்பட்டிருந்தன. நாங்கள் அங்கே தனியாக இருந்தோம்" என விவரிக்கிறார் பார்டாலு.

பைகள் தேடப்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில் வீரர்களிடம் அவர்களது கைப்பேசி மற்றும் டேப்லெட் கொடுக்கப்பட்டு அதில் உள்ள அவர்களின் புகைப்படங்களை பரிசோதித்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மேலும் வட கொரியாவில் அவர்கள்

புகைப்படம் எடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

"ஒரு வேடிக்கையான விஷயம் என்னவெனில் எங்களது வாட்ஸ் அப் குழுக்களில் 'கிம் ஜாங் உன்'னை விமர்சிக்கும் வட கொரிய மீம்கள் இருந்தன. விமான நிலையத்தை விட்டு செல்வதற்குள் அவற்றை நீக்கிவிட வேண்டும் என எங்களுக்குள் சொல்லிக்கொண்டோம்"

படத்தின் காப்புரிமை BENGALURU FC

"அவர்களிடம் டிவிட்டர் இல்லை என நான் நம்பினேன். ஏனெனில் கிம்முடன் அமர்ந்து குடிப்பதற்காக அவரைச் சந்திக்கப் போகிறேன் என ஒரு நகைச்சுவையான டிவீட் செய்திருந்தேன்" என்றார் பார்டாலு

அணியில் உள்ள பலரது பைகள் தொலைந்து விட்டன. கால்பந்து விளையாடுவதற்கு தேவையான பொருள்கள் நிறைந்த பைகள்,பிரத்யேக ஷூக்கள், பந்துகள் போன்றவை தொலைந்து போன அந்தப் பைகளில் இருந்தன. ஆகவே, சில வீரர்கள் ஓட்டல்களில் பிரத்யேக ஷூக்களை வாங்கினார்கள். அங்கே போலியான ஷூக்களுக்கு 150 -200 டாலர் வரை வசூலிக்கப்பட்டதாக பார்டாலு கூறுகிறார்.

" வட கொரியாவுக்குச் சென்ற பின்னர் நடந்த முதல் பயிற்சி நேரத்தில் எங்களிடம் உரிய காலணிகளோ, பயிற்சிக்கான உபகரணங்களோ, பந்துகளோ இல்லை. நாங்கள் ஓட்டலில் வாங்கிய காலணிகள் தரமில்லாதவையாக இருந்தன, சில தவறான அளவுடையதாக இருந்தன"

" மாலையில் நாங்கள் ஓட்டலுக்குச் சென்றபோது ஏன் அனைத்து தெரு விளக்குகளும் அனைத்து வைக்கப்பட்டிருந்தன என ஆச்சர்யமடைந்தோம். செயற்கோள் வழியாக பியோங்கியாங்கை யாரவது கவனித்துக் கொண்டிருந்தால் அதை தடுப்பதற்காகவே அப்படிச் செய்யப்படுவதாக யாரோ ஒருவர் எங்களிடம் கூறினார்"

" நாங்கள் முதன் முதலாக ஓட்டலுக்குள் நுழைந்தபோது இந்த உலகத்தில் மற்ற எந்த இடத்திலும் இல்லாதவாறு அது இருந்தது. ஆனால் ஓட்டலின் பகுமுகக்கூடத்தில் ஒரு தொலைக்காட்சி இருந்தது. அதில் கிம் ஜான் உன் மட்டுமே திரும்பத்திரும்ப வந்துகொண்டிருந்தார். அங்கிருந்தே பிரசாரம் ஆரம்பித்துவிட்டது"

" நாங்கள் சில விஷயங்களை பார்த்தபோது ஆச்சர்யப்பட்டோம். எங்குப்பார்த்தாலும் வீடுகளில் கிம் ஜாங் உன், அவரது அப்பா மற்றும் தாத்தா ஆகியோரின் படங்கள் இருந்தன. எல்லோரும் மிகுந்த தேசபக்தி கொண்டவர்களாக இருந்தனர்"

" கொரிய மக்கள் நட்புடன் அணுகக்கூடியவர்களாக இருந்தார்கள். ஒவ்வொருவருமே கொரியாவின் தேசிய கொடியையோ அல்லது ஆட்சியாளர்களின் குடும்பபடத்தையோ பேட்ஜ் மூலமாக அணிந்திருந்தார்கள்"

படத்தின் காப்புரிமை BENGALURU FC

" அவர்கள் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது நீங்கள் அவர்களை திரும்பி உற்றுப்பார்க்கத் தொடங்கினால் அவர்கள் உங்களை பார்ப்பதை தவிர்த்து விடுவார்கள். அங்குள்ள குழந்தைகள் எங்களைப் பார்த்தால் தங்கள் நண்பர்களிடம் யார் இவர்கள் என கேட்கத் தொடங்கிவிடுவார்கள். அவர்கள் அதிகம் பேச மாட்டார்கள். நீங்கள் அவர்களிடம் ஹலோ சொன்னால் அவர்களும் புன்னகையோடு ஹலோ சொல்வார்கள்" என விரிவாக விவரித்துச் சொல்கிறார் அந்தக் கால்பந்து வீரர்.

விளையாட்டு

"மே தின விளையாட்டு அரங்கில் போட்டி நடந்தபோது ஒன்பதாயிரம் ரசிகர்கள் மட்டுமே வந்திருந்தார்கள். போட்டித் தொடங்கியதும் அங்கே அமைதி நிலவியது. அவர்கள் பிரிட்டன் ரசிகர்களை போல அல்ல. ஆனாலும், அவர்களுக்கு கால்பந்து குறித்து தெளிவாக சில விஷயங்கள் தெரிந்திருந்தது. தங்களது உணர்ச்சிகளை வேறுவிதமாக அங்கே வெளிப்படுத்தினார்கள் "

நாங்கள் எங்கள் ஆட்டத்தில் கவனம் செலுத்தினோம். அவர்கள் தாக்குதல் பாணி ஆட்டத்தையும் நாங்கள் தடுத்தல் பாணி ஆட்டத்தையும் வெளிப்படுத்தினோம். அந்தப் போட்டியில் எதிரணியினர் ஆதிக்கம் செலுத்தினார்கள்.இறுதியில் எந்த அணியும் கோல் அடிக்காமல் போட்டி சமநிலையில் முடிந்தது" என போட்டி குறித்துச் சொன்னார் பார்டாலு.

செப்டம்பர் பதிமூன்றாம் தேதி புதன் கிழமையன்று போட்டி முடிந்தது. இரண்டு நாட்கள் கொரியாவில்தான் இருக்கவேண்டும் என்ற நிலை.வெள்ளிக்கிழமை காலையில் அவர்கள் படுக்கையை விட்டு எழுந்தபோது வடகொரியா ஜப்பான் வான்வெளியில் பேலிஸ்டிக் ஏவுகணை சோதனை செய்தியை அறிந்தார்கள்.

"எங்கள் ஓட்டலில் ஆறு சேனல்கள் இருந்தன. அதில் வடகொரியா ஏவுகணை சோதனை செய்ததை பார்த்தோம். நாங்கள் காலை ஆறு மணிக்கு ஓட்டலை விட்டு வெளியே வந்திருந்தால் ஓட்டலுக்கு மேலே ஏவுகணை சென்றதை பார்த்திருக்கலாம் என ஒரு நபர் எங்களிடம் சொன்னார்"

" வீரர்கள் அனைவரும் ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்த்தோம். எவ்வளவு சீக்கிரம் இங்கிருந்து வெளியேற முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியேறிவிடுவது அதைச் செய்ய வேண்டும் என நினைத்தோம்"

" எனக்கு வட கொரிய மக்களுக்கு வெளியில் என்ன நடக்கிறது என்பது குறித்து முழுவதுமா அறிந்திருக்கிறார்களா என்பது உறுதியாக தெரியவில்லை. எங்களது பயணத்தில் வழிகாட்டியாக வந்தவர்களிடம் நாங்கள் சில கேள்விகள் கேட்டபோது அவர்கள் கிம் ஜாங் உன்னை தற்காத்தார்கள். அவர்கள் அமெரிக்காவை எதிர்கொள்ள ஜிம் தயாராக இருப்பதாக வெளியில் காட்டுவதாக தெரிவிக்கிறார்கள்.

அவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டிருப்பது போல தோன்றியது. அவர்கள் வட கொரியாவிடம் அத்தனை வலிமையும் இருப்பதாகவும் அமெரிக்கா பலவீனமாக இருப்பதாகவும் கருதுகிறார்கள். அது மிகவும் வினோதமாக இருந்தது " என தெரிவித்தார் பார்டாலு

படத்தின் காப்புரிமை Reuters

" வட கொரியா அழகான ஒரு நாடு. நீல நில வானம், பூத்துக்குலுங்கும் பூக்கள், செடிகள், பச்சை வண்ண விவசாய நிலங்கள் என அழகாக இருக்கிறது. என்னால் இந்தச் சுற்றுப்பயணத்தை மறக்கவே முடியாது"

" ஒரு முக்கியமான விஷயத்தை இந்த பயணத்தில் உணர்ந்தேன். செய்திகள் அனைத்தையும் அப்படியே நம்பக்கூடாது என தெரிகிறது. அங்கே இளம் சிறுவர்கள் மகிழ்ச்சியோடு புன்னகையுடன் கால்பந்து ஆடுகிறார்கள். அவர்கள் கால்பந்தை நேசிக்கிறார்கள். இந்த இடம் அழிக்கப்படும் என நினைக்கும்போது இந்த மக்கள் எப்படி துன்புறுவார்கள் என எண்ணிப்பார்க்கையில் எனக்கு வருத்தமாக இருக்கிறது. அது நடக்காது என நம்புகிறேன் ".

" அந்தப் போட்டி முடிந்தபோது எதிரணி வீரர் ஒருவர் கட்டிப்பிடித்து சிரித்தவாறே ஆங்கிலத்தில் வாழ்த்துச் சொன்னார். நான் அப்போது அவர் ஆங்கிலத்தில் பேசுவார் என்றோ வாழ்த்துச் சொல்வார் என்றோ எளிமையாக புன்னகைத்தவாறு இருப்பார் என்றோ நினைக்கவில்லை. விளையாட்டு உண்மையாகவே மக்களை இணைக்கிறது அது தான் போட்டிக்கு அழகூட்டுகிறது" என்கிறார் எரிக் பார்டாலு.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்