ஆங் சாங் சூச்சியின் பேச்சு: உலக தலைவர்கள் விமர்சனம்

படத்தின் காப்புரிமை Getty Images

மியான்மரின் நடைமுறைத் தலைவர் ஆங் சாங் சூச்சி, ரக்கைன் மாநிலத்தில் நடக்கும் வன்முறைகளையும், ரோஹிஞ்சா அகதிகள் பிரச்சனையையும் கையாளும் விதம் குறித்து, அதிகப்படியான சர்வதேச அழுத்ததிற்கு உள்ளாகியுள்ளார்.

செவ்வாயன்று ஆற்றிய ஓர் உரையில், மியான்மரின் தலைவர், உரிமை மீறல்களுக்கு கண்டனம் தெரிவித்தார். ஆனாலும், ராணுவத்தின் மீது எந்த பழியும் கூறவோ, இன சுத்திகரிப்பு குறித்த குற்றச்சாட்டுகள் குறித்தோ பேசவில்லை.

அவரின் நிலைப்பாடு பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதாக, பல தலைவர்களும், தூதர்களும் கூறியுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நான்கு லட்சம் ரோஹிஞ்சாக்கள் வங்கதேசத்திற்கு சென்றுள்ளனர்.

கடந்த மாதம் ரக்கைன் மாநிலத்தில் உள்ள காவல் சாவடிகள் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதலே அண்மை காலத்தில் உள்ள அமைதியின்மைக்கு காரணமாக கூறப்படுகிறது. இதற்கு புதிதாக உருவெடுத்துள்ள ரோஹிஞ்சா குழுவான அர்சா எனப்படும் அரக்கன் ரொகிஞ்சா சால்வேஷன் ஆர்மி தான் காரணம் என கூறப்பட்டது.

ஒரு தொடர்ச்சியான ராணுவ அடக்குமுறையால் அதிகளவில் மக்கள் கொல்லப்பட்டனர். ரோஹிஞ்சாக்கள் அங்கிருந்து விரட்டப்பட்டு, அவர்களின் கிராமங்கள் தீக்கிறையாக்கப்பட்டன என பல குற்றச்சாட்டுகள் உள்ளன.

ரோஹிஞ்சா சிறுபான்மை மக்கள், வங்க தேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று மியான்மர் அரசு கூறுகிறது. அவர்களை பெங்காலி முஸ்லிம்கள் என்று அது குறிப்பிடுகிறது.

இந்த விவகாரம் குறித்த நாட்டு மக்களுக்கு உரையாற்றிய சூச்சி கூறுகையில்:

  • கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி முதல் எந்த மோதலோ அல்லது, வெளியேற்றும் நடவடிக்கையோ இல்லை.
  • பெரும்பான்மையான முஸ்லிம்கள் இங்கு தங்கவே முடிவெடுத்துள்ளனர், இதுவே தற்போதைய சூழல், அவ்வளவு தீவிரமானது இல்லை என்பதை காட்டுகிறது.
  • ரக்கைன் மாநிலத்தில் வாழும் முஸ்லிம்கள் உட்பட அனைத்து மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற அரசு அண்மை ஆண்டுகளில் பல முயற்சிகளை எடுத்துள்ளது.
  • சரிபார்ப்பு செயல்முறை முடிந்த பின்பு அனைத்து அகதிகளும் தங்கள் இடங்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்படும்.

பர்மிய ராணுவம், ரக்கைன் மாநிலத்தில் உள்ள கிளர்ச்சியாளர்களின் அடித்தளத்தை நீக்கும் வகையிலேயே செயல்படுவதாக கூறுவதோடு, பொதுமக்களை குறிவைப்பதாக வரும் குற்றசாட்டை மீண்டும் மீண்டும் மறுக்கிறது. சாட்சியங்கள், அகதிகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் இதை மறுக்கினறனர்.

ஆங் சாங் சூசியுடன், தொலைபேசியில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், சரிபார்ப்பிற்கு பின்பு அகதிகள் நாடு திரும்பலாம் என்று சூசி கூறியுள்ளதை வரவேற்பதாக கூறியுள்ளார்.

ஆனால், மனிதாபிமான உதவிகளை எளிதாக்குமாறு அவர் வலியுறுத்தியதாகவும், அதிக பிரச்சனைகளை உருவாக்கிவரும் ,மனித உரிமை அத்துமீறல்கள் குறித்த குற்றசாட்டுகள் குறித்து பேசுமாறும் கேட்டுகொண்டுள்ளதாக வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஐ.நா சபை கூட்டத்தில் பேசிய ஃபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங், "ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும். அங்கு, இன சுத்திகரிப்பு மூலமாக நீதியின் ஆட்சி நிலை நிறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

மேலும் கூறுகையில், அவர் ஒரு பாதுகாப்பு கவுன்சில் மூலம் மனிதாபிமான உதவிகள் கிடைக்கிறதா என்பதை கவனிக்கவும், வன்முறையை முடிவுக்கு கொண்டுவரவும் உள்ளதாக கூறினார்.

ஐ.நா சபை பொதுசெயலாளரான ஆண்டோனியோ குட்டெரிஷும், "ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்" மற்றும், "பல ஆண்டுகளாக தீர்வு காணப்படாமல் இருக்கும் ரோஹிஞ்சாக்களின் குறைகளை தீர்ப்பது குறித்த பேச்சை நடத்த வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

துருக்கி அதிபர், ரஸிப் தயிப் ஏர்துவான், சர்வதேச சமூகத்தை இந்த நெருக்கடி குறித்து பேச அழைத்துள்ளதோடு, "மியான்மரில் நடக்கும் சோகத்தை நிறுத்தாவிட்டால், மனித இனம், வரலாற்றில் அடுத்த மிக கடுமையான கரையின் அவமானத்தில் வாழவேண்டி இருக்கும்" என எச்சரித்துள்ளார்.

ஐரோப்பியன் யூனியனின் செய்திதொடர்பாளர் ஒருவர் கூறுகையில், முன்பு எல்லைகளுக்கு அப்பால் இருந்த பாதிக்கப்பட்ட இடங்களை, சர்வதேச தூதர்கள் பார்ப்பதற்கு ஆங் சாங் சூசி அழைப்பு விடுத்துள்ளது என்பது "ஒருபடி முன்னேற்றம் " ஆகும் என்கிறார்.

மேலும் கூறிய அவர், "மியான்மர் அரசு எந்த ஜனநாயகத்திற்காக கடுமையாக போராடுகிறதோ, அது, இனம், சமூகம் , மதம் ஆகிய எல்லைகளை கடந்து, மியான்மரின் அனைத்து மக்களுக்கும் செயல்படும்" என்பதை நிரூபிக்கும் தேவை மியான்மர் தலைமைக்கு உள்ளது என்றார்.

மியான்மர் ராணுவத்துக்கு

இங்கிலாந்து பயிற்சி நிறுத்தம்

இங்கிலாந்து பிரதமர் தெரீ மேவும், ரக்கேன் மாநிலத்தில் நடக்கும்ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றார். வன்முறைகள் நடக்கின்றன என்கிற பேச்சுக்கள் உள்ளதால், மியான்மர் ராணுவத்திற்கு பயிற்சி வகுப்புகள் அளிப்பதை இங்கிலாந்து தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

ஆங் சாங் சூசியின் பேச்சு குறித்து கருத்து கூறியுள்ள ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல், அவரின் பேச்சு, "பாதிக்கப்பட்டவர்கள் மீது குற்றம் சாட்டுவதாகவும், உண்மையற்றதாகவும் கலந்து இருந்தது" என்றுள்ளதோடு, ராணுவ அத்துமீறல்களை கண்டுகொள்ளாமல், ஆங் சாங் சூசி, "மணலில் தலையை புதைத்துள்ளார்" என குற்றம்சாட்டியுள்ளது.

பல ஆண்டுகள் ராணுவ சர்வாதிகாரத்தில் இருந்த மியான்மரை, அதில் இருந்து வெளிகொண்டுவர போராடியதற்காக, 1990 ஆம் ஆண்டு, ஆங் சாங் சூசி , அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். அவர் இன்னும் மியான்மரில் மிகவும் பிரபலமானவராகவே உள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்