தென்கிழக்கு ஆசியாவில் பரவும் சூப்பர் மலேரியா அச்சுறுத்தல்

தென்கிழக்கு ஆசியாவில் சூப்பர் மலேரியா நோய் அதிவிரைவாக பரவி வருவது உலகளாவிய அச்சுறுத்தலாகும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

கொசு

பட மூலாதாரம், Science Photo Library

மலேரியா ஒட்டுண்ணியின் இந்த ஆபத்தான வடிவம் முக்கிய மலேரியா எதிர்ப்பு மருந்துகளால் கொல்லப்பட முடியாதது.

இது கம்போடியாவில் ஆரம்பித்து தற்போது தாய்லாந்து, லாவோஸ் மற்றும் தென் வியட்நாமின் பல பகுதிகளிலும் பரவ தொடங்கியுள்ளது.

பாங்காக்கில் உள்ள ஆக்ஸ்போர்டு வெப்பமண்டல மருத்துவ ஆய்வு பிரிவின் ஒரு குழுவானது உண்மையில் அபாயகரமான தக்க சிகிச்சையற்ற மலேரியா பரவி வருவதாக கூறியுள்ளது.

இந்த பிரிவின் தலைவரான பேராசிரியர் அர்ஜென் டண்டோர் "இது ஒரு தீவிர அச்சுறுத்தல் என்று நாங்கள் நினைக்கிறோம் என பிபிசி செய்திப்பிரிவு இணையதளத்திடம் கூறினார்.

ஆப்பிரிக்காவுக்குப் பரவும் ஆபத்து

இதன் தாக்கமானது இப்பகுதி முழுவதும் விரைவாக பரவி வருவது மிகவும் ஆபத்தானது என்றும் மேலும் இறுதியில் இது ஆப்பிரிக்காவிற்கும் பரவலாம் என தாங்கள் அச்சப்படுவதாகவும் அவர் கூறினார்.

தி லேன்செட் இன்ஃபெக்ஷியஸ் டிசீசஸ் என்ற மருத்துவ பத்திரிகைக்கு எழுதிய கடிதத்தில், இந்த நோய் ஆர்டிமிசினின் மருந்தால் குணப்படுத்த முடியாததாக வளர்ந்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் 212 மில்லியன் மக்கள் மலேரியா நோயால் பாதிக்கப்படுகின்றனர். இரத்தத்தை உறிஞ்சும் கொசுக்களால் பரவுகின்ற இந்த ஒட்டுண்ணியானது குறிப்பாக குழந்தைகளை அதிக அளவில் கொல்கிறது.

மலேரியா சிகிச்சைக்கு முதல் தேர்வானது பைபராக்கின், ஆர்டிமிசினின் கலவை மருந்து.

ஆனால் ஆர்டிமிசினின் வீரியம் குறைந்ததால், ஒட்டுண்ணியானது இப்போது பைபராக்கினையும் எதிர்த்து நிற்கிறது.

இப்போது இம்மருந்தின் தோல்வியின் விகிதமானது கவலைக்கிடமாக உள்ளது என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியட்நாமில் மேற்கொண்ட இந்த சிகிச்சையில் மூன்றில் ஒரு பகுதி தோல்விடைந்ததாகவும் அதே நேரத்தில் கம்போடியாவின் சில பகுதிகளில் கிட்டதட்ட 60 சதவீத அளவிலும் இந்த சிகிச்சை தோல்வி கண்டதாக பேராசிரியர் டான்டோர்ப் கூறினார்.

இதில் 92 சதவீத மலேரியா பாதிப்பு ஆப்பிரிக்காவில் ஏற்படும் போது எதிர்ப்பு மருந்துகள் பலனை தராவிட்டால் அது பேரழிவை தரும் என்றார் டான்ட்ராப்.

கிரேட்டர் மேகாங்கில் காலம் தாழ்த்தாமல் மலேரியாவை ஒழிப்பதற்கான நடவடிக்கைளில் ஈடுபட வேண்டிய அழுத்ததில் உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

காலத்துக்கு எதிராக...

மேலும் காலத்திற்கு எதிரான ஓட்டப்பந்தயத்தில் நாம் இருக்கிறோம். மலேரியா பரவுவதற்குள் இத்னை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். இல்லையென்றால் ஏராளமான உயிர்ப் பலிகளை நாம் சந்திக்க நேரிடும் என பேராசிரியர் டான்டோர்ப் கூறினார்.

உண்மையை சொல்லப்போனால் , நான் மிகவும் கவலைப்படுகிறேன்." என்றும் அவர் தெரிவித்தார்.

வெல்கம் டிரஸ்ட் மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளையின் மைக்கேல் சூவ் கூறுகையில் மிக அதிக வீரியமுள்ள மருந்துகளையும் எதிர்க்கும் மலேரியா வகை பரவுவது ஆபத்தானது மற்றும் உலகளாவிய பொதுசுகாதாரத்தில் முக்கிய விளைவுகளைக் கொண்டது என்றார்.

ஆண்டுக்கு சுமார் 7 லட்சம் மருந்துகளை எதிர்க்கும் திறனுடைய மலேரியா உள்ளிட்ட நோய்த் தொற்றுகளால் உயிரிழக்கின்றனர்.

இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் 2050 ஆண்டுக்குள் உயிரிழப்பு எண்ணிக்கை மில்லியன் கணக்காக அதிகரிக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :