வட கொரியா: அணு ஆயுத சோதனை நடத்திய இடத்துக்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது ஏன்?

வட கொரியாவில் 3.4 என்ற அளவுக்கான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் அந்நாட்டின் அணு ஆயுத சோதனை நடந்த இடத்தில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் (31 மைல்) தூரத்தில் உணரப்பட்டுள்ளதாக கண்காணிப்பு கருவிகள் குறிப்பிடுகின்றன.

தொலைக்காட்சியில் மக்கள் பார்வை

பட மூலாதாரம், AFP

வட கொரியாவில் நிகழ்ந்திருந்த முந்தைய நடுக்கங்கள் ஆயுத சோதனைகளால் ஏற்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

வட கொரியாவில் "வெடிப்பு ஏற்பட்டுள்ளது என்று சந்தேகப்படுவதாக" சீன நிலநடுக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், அந்த நிலநடுக்கம் அணு ஆயுத சோதனையால் நடத்தப்பட்டதாக இல்லாமல், இயற்கையானதாக இருக்கலாம் என்று தென் கொரியா தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில், இந்த நிலநடுக்கத்திற்கான காரணம் பற்றி எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று அமெரிக்க புவியியல் ஆய்வகம் கூறியுள்ளது.

கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி வட கொரியா மிகப் பெரியதொரு அணு ஆயுத சோதனை நடத்தியது. இது ஐக்கிய நாடுகள் மாமன்றத்தின் கடும் கண்டனத்தை பெற்றிருந்தது.

சனிக்கிழமை நிகழ்ந்த நிலநடுக்கத்தின் அளவு, வட கொரியா ஆயுதங்களை சோதனை செய்யுபோது வழக்கமாக கண்டறியப்படுவதைவிட குறைவாகும்.

கடந்த முறை அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டபோது, அமெரிக்க புவியியல் ஆய்வகத்தால் வெளியிடப்பட்ட தொடக்க அறிக்கைகளில், நிலநடுக்கத்தின் அளவு 5.6 என்றும், அதனுடைய ஆழம் 10 கிலோ மீட்டரில் இருந்தது என்றும் தெரிவித்தது. பின்னர் அந்த நிலநடுக்கத்தின் அளவை 6.03 என்றும் '0' கிலோமீட்டர் ஆழம் என்றும் மாற்றி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சமீபத்திய நிலநடுக்கம் '0' கிலோ மீட்டரில் புனங்கயி-ரி அணு ஆயுத தயாரிப்பு இடம் அமைந்திருக்கும் வடக்கு ஹாம்ங்யோங் மகாணத்தில் உணரப்பட்டதாக தென் கொரியாவின் வானிலை மையம் கூறியுள்ளது.

வட கொரியாவின் அணு ஆயுத சோதனை பகுதியில் இந்த நிலநடுக்கம் நிகழ்ந்திருப்பதாகவும் கூறியிருக்கும் அமெரிக்க புவியியல் ஆய்வகம், அதனுடைய நிலநடுக்க ஆய்வாளர்கள் இது 5 கிலோமீட்டர் ஆழத்தில் நிகழந்துள்ளது என்று கணித்திருப்பதாக கூறியுள்ளது.

"இந்த நிகழ்வின் இயல்பை (இயற்கையா அல்லது மனிதரால் நடத்தப்பட்டதா) முழுமையாக உறுதி செய்ய காலம் இன்னும் கனியவில்லை" என்று அது கூறியுள்ளது.

இது இயற்கையான நிலநடுக்கம் என்று தெரிவித்துள்ள தென் கொரியா, செயற்கையான நிலநடுக்கத்தால் ஏற்படும் குறிப்பிட்ட ஒலி அலைகள் கண்டறியப்படாத காரணத்தால் இவ்வாறு தெரிவித்துள்ளது என்று ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வட கொரியாவில் நிகழ்ந்துள்ள "இத்தகைய குறைவான அளவில் வழக்கமற்ற நிலநடுக்க செயல்பாடு" பற்றி ஒருங்கிணைந்த அணு ஆயுத சோதனை தடுப்பு ஒப்பந்த அமைப்பின் ஆய்வாளர்கள் பரிசீலனை செய்து வருவதாக அதன் செயலதிகாரி லாஸ்சினா ஸெர்போ டுவிட்டர் பதிவிட்டுள்ளார்.

வட கொரியாவில் முந்தைய சோதனைகள் நடைபெற்ற இடத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

வட கொரியா நடத்தியுள்ள முந்தைய சோதனைகள்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :