இலங்கை: புற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் ஆண்டுதோறும் 17 ஆயிரம் புற்றுநோயாளிகள் புதிததாக இனங்காணப்படுவதாகவும் அவற்றில் 15 சதவீதமானோர் மார்பக புற்றுநோயாளிகள் என்றும் சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் தடுப்பு பிரிவு கூறுகின்றது.

Image caption மார்பக புற்றுநோய் பற்றி மருத்துவர்களால் விழிப்புணர்வு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

புதிதாக நாளுக்கு 6 -7 பேர் வரை மார்பக புற்று நோயாளிகள் புதிதாக இனங்காணப்படுகின்றனர். 45 முதல் 60 வயது வரையான பெண்களே பெரும்பாலும் மார்பக பற்றுநோயின் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் இந்தப் பிரிவின் சிறப்பு மருத்துவரான டாக்டர் நைனா டி அல்விஸ் கூறுகின்றார்.

"புற்றுநோயை ஆரம்ப கட்டத்தில் இனங்காண்டுவிட்டால் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். பெரும்பாலோர் 3ஆம், 4ஆம் கட்டங்களில் அதிக காலத்திற்கு பிறகு தாமதமாகி வருவதால் குணப்படுத்துவது கடினமாகி விடுகிறது. 5 வருடங்கள் கூட அவர்கள் உயிரோடு இருப்பது கடினம்” என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

நாடு முழுவதும் அரசு வைத்தியசாலைகளில் 800 புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன. அதன் மூலம் மக்கள் தங்களுக்கு எழுகின்ற சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என்று தேசிய புற்றுநோய் தடுப்புப் பிரிவு கூறுகின்றது.

"இலங்கையில் ஆண்டுதோறும் 2 ஆயிரத்து 500 மார்பக புற்றுநோயாளிகள் உட்பட சுமார் 17 ஆயிரம் அனைத்து வகையிலான புற்றுநோயாளிகள் புதிதாக இனங்காணப்படுகின்ற அதேவேளை, 13 ஆயிரம் புற்று நோயாளிகள் மரணமடைகின்றார்கள்" என்கின்றார் தேசிய புற்றுநோய் தடுப்புப் பிரிவின் இயக்குநரான டாக்டர் சுதத் சமரவீர.

"புற்றுநோய் வராமல் ஆரம்பத்திலே தடுப்பு மருந்து மூலம் தடுக்கின்ற வகையிலே, குறிப்பாக பள்ளிக் கூடங்களில் 6ஆம் வகுப்பு மாணவியருக்கு HPV தடுப்பூசி போடப்படுகின்றது" என்றும் அவர் கூறியுள்ளார்.

"புகையிலை மற்றும் பாக்கு சார்ந்த பொருட்களை பயன்படுத்துவதன் காரணமாக அண்மைக்காலமாக சிறுவர்கள் மத்தியில் அதனால் வரக்கூடிய புற்றுநோய் அதிகரித்ப்பு காணப்படுகின்றது" என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கையில் ஆண்டுதோறும் 1 லட்சத்து 38 ஆயிரம் மரணங்கள் பதிவாகின்றன. 75 சதவீதமான மரணங்கள் இருதநோய், புற்றுநோய் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட தொற்றாத நோய்களால் ஏற்படும் மரணங்கள் என அறிக்கையிடப்பட்டுள்ளன.

அந்த மரணங்களில் குறிப்பாக 40 சதவீத மரணங்கள் இருத நோய் காரணமாக நிகழ்கின்றது. புற்றுநோயால் 10 சதவீதத்தினரும் சர்க்கரை வியாதியால் 7 சதவீதத்தினரும் மரணம் அடைவதாக சமூக வைத்திய நிபுணரான டாக்டர் சுராஜ் பெரேரா கூறுகின்றார்.

ஆண்டுதோறும் அதிகரித்து வரும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையால் அத்தகைய நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கையிலும் அதிகரிப்பை காண முடிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

1985 ஆம் ஆண்டு 4 ஆயிரத்து 416 என்று அறிக்கையிடப்பட்ட புற்றுநோயாளிகளின் மரணங்கள் 2005ஆம் ஆண்டு 9 ஆயிரத்து 403 ஆக அதிகரித்ததோடு, 2009ஆம் ஆண்டு தரவுகளின்படி இது 11 ஆயிரத்து 286ஆக கூடியிருப்பதாகவும் அவரால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :