சமூக ஊடகங்களில் ரோஹிஞ்சா செயற்பாட்டாளர்களின் பதிவுகள் நீக்கப்படுவது ஏன்?

ஷா ஹுசைன் படத்தின் காப்புரிமை SHAH HOSSAIN
Image caption ஷா ஹுசைன்

ரோஹிஞ்சா செயற்பாட்டாளர்களின் சமூக ஊடக கணக்குகள் கட்டுப்படுத்தப்படுத்தபடுவது, பல கேள்விகளை எழுப்புகின்றன. குறிப்பாக அரசின் அல்லது அரசு ஆதரிக்கும் குழுக்கள் ஒருங்கிணைக்கும் பிரச்சாரத்திற்கு குறிவைக்கப்பட்டு இருக்கிறார்களோ என்று சந்தேகிக்க வைக்கிறது.

ஷா ஹுசைன், செளதியில் வசிக்கும் மிக முக்கியமான செயற்பாட்டாளர். 2010 ஆண்டு முதலே ஒரு ஃபேஸ்புக் பக்கத்தை அவர் நிர்வகித்து வருகிறார். அண்மையில் அவர் மியான்மர் ரக்கைன் மாகாணம் தொடர்பாக அவரது ஃபேஸ்புக் கணக்கில் பதிந்த இடுகைகள் நீக்கப்பட்டத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நீக்கப்பட்ட இடுகைகளில் மியான்மரில் நடக்கும் வன்முறையை விளக்கும் படங்களும் இருந்துள்ளன. ஆனால், இந்த படங்கள் எதுவும் ஃபேஸ்புக் விதிமுறைகளை மீறும் படங்கள் இல்லை. வன்முறையை கொண்டாடும் அல்லது மகிமைப்படுத்தும் படங்களைதான் முகநூலில் பகிரக் கூடாது.

மற்றப்படி பொதுநலனுக்காக என்று கருதப்படும் படங்களை, இடுகைகளை பகிர ஃபேஸ்புக் விதிமுறைகள் அனுமதிக்கின்றன.

எனுக்கு மியான்மரில் வசிக்கும் சிலருடன் தொடர்பு இருக்கிறது. அவர்கள் தொடர்ந்து அங்கு கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறையின் புகைப்படங்களை காணொளி காட்சிகளை அனுப்புகிறார்கள் என்கிறார் ஹுசைன்.

ஹுசைன் பிபிசியி டிரெண்டிங்கிடம் சொல்கிறார், "எனக்கு பலபடங்கள் அங்கிருந்து வருகின்றன. அவை அனைத்தும் அங்கு நடக்கும் வன்முறையை விவரிக்கும் படங்களை. இந்த படங்களை மக்களின் பார்வைக்கு வைக்காமல் வேறு எதனை வைக்கப்போகிறோம்...?"

"நீக்கப்படும் இடுகைகள்"

மியான்மர் பிரதேசத்தில் மோதல் தொடங்கியவுடன் , அது தொடர்பான இடுகைகளும், படங்களும் பலரது சமூக ஊடகக் கணக்கிலிருந்து நீக்கப்பட்டு உள்ளது. அதில் ஹூசைனும் ஒருவர். சொல்லப்போனால், ஃபேஸ்புக் மட்டும் அந்த கலவரம் தொடர்பான படங்களை நீக்கவில்லை. யூடியூப் நிறுவனமும் காணொளிகளை நீக்கி இருக்கிறது.

ஹூசைன் அரக்கான் செய்தி நிறுவனம் என்ற பெயரில் யூ-டியூப் சேனலை நடத்தி வருகிறார். "அந்த சேனலை 60,000த்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்கிறார்கள். திடீரென்று அந்த யூ-டியூப் கணக்கு நீக்கப்பட்டு இருக்கிறது. இதை நாங்கள் சமூக ஊடகத்திடமிருந்து எதிர்பார்க்கவில்லை.

படத்தின் காப்புரிமை SHAH HOSSAIN
Image caption 60,000த்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்பாளர்களை கொண்ட யூ-டியூப் சேனல் திடீரென்று நீக்கப்பட்டு இருக்கிறது என்கிறார் ஹூசைன்

நாங்கள் எங்கள் பிரச்னைகளை பொதுசமூகத்தின் பார்வைக்கு வைக்க விரும்புகிறோம். ஆனால், சமூக ஊடகங்கள் எங்களை தடுக்கிறது" என்றார்.

பிபிசி டிரெண்டிங் யூ-டியூபை தொடர்பு கொண்டபோது, அந்த நிறுவனம், "ஒரே சமயத்தில் பலர் அந்த சேனலுக்கு எதிராக புகார் தெரிவித்ததுதான், அந்த சேனலை யூ-டியூபிலிருந்து நீக்கயதற்கு காரணம். ஆனால், அந்த சேனலை மீண்டும் செயல்படவைக்க முடிவு செய்திருக்கிறோம்." என்றனர்

"இன அழிப்பு"

கடந்த மாதத்திலிருந்து, ஏறத்தாழ 400,000 ரோஹிஞ்சா முஸ்லீம்கள் ராணுவ ஒடுக்குமுறையின் காரணமாக மியான்மரிலிருந்து வெளியேறி அண்டைநாடான வங்காளதேசத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனை ஐ.நா இன அழிப்புக்கு இணையானது என்று குறிப்பிடுகிறது.

மனித உரிமைக் குழுக்கள், ரோஹிஞ்சா கிராமங்களை ராணுவம் தீயிட்டு எரிக்கிறது என்கிறார்கள். ஆனால், ராணுவம் இதனை மறுக்கிறது. ஆயுதக் குழுக்களின் தாக்குதலுக்குதான் வினையாற்றுகிறோம். பொதுமக்கள் மீது தாங்கள் எந்த தாக்குதலையும் தொடுக்கவில்லை என்று கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஹூசைன் பக்கத்திலிருந்து நீக்கப்பட்ட பல்வேறு இடுகைகள் புகைப்படங்களை கொண்டிருந்தன. இறந்துபோன ஒரு பெண் கீழே கிடத்தி வைக்கப்பட்டிருக்கிறார், அவரை புதைக்க ஆண்கள் குழிதோண்டுவது போன்று ஒரு படம் அவர் ஃபேஸ்புக் கணக்கில் பதியப்பட்டிருக்கிறது.

இன்னொரு வீடியோவில், ஒரு பையன் நிர்வாணமாக தலையில் வெட்டுக் காயங்களுடன், தீக்காயங்களுடனும் இருக்கிறான். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஆயுதக்குழுக்கள் அவனது கிராமத்தை எரித்ததால், அவன் தீக்காயங்களுக்கு உள்ளாகினான் என்று கூறுகிறார்கள். ஆனால், பிபிசி டிரெண்டிங்கினால் சுயாதீனமாக விசாரித்து இதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

ஹூசனினின் சமூக ஊடக கணக்குகள் மட்டும் கட்டுப்படுத்தப்படவில்லை. ஜெர்மனியில் வசிக்கும் ரோஹிஞ்சா செயற்பாட்டாளரான நய் சான் லூயின் என்பவரின் ஃபேஸ்புக் இடுகைகளும் நீக்கப்பட்டுள்ளது. லூயின், "பர்மிய ராணுவத்தின் மீது குற்றம் சுமத்தும் எனது இடுகைகளும், ஒரு கவிதையும் நீக்கப்பட்டிருக்கிறது" என்கிறார்.

மேலும் அவர், "கோலாலம்பூரில் வசிக்கும் என் சக ஊழியர், மியான்மர் தொடர்பாக ஒரு விஷயத்தை ஆங்கிலத்தில் பதிவிட்டு இருக்கிறார். ஆனால், அதுவும் ஃபேஸ்புக் நிர்வாகத்தால் நீக்கப்பட்டு இருக்கிறது. அதனை தொடர்ந்து 72 மணி நேரத்தில் ஃபேஸ்புக் கணக்கும் முடக்கப்பட்டு இருக்கிறது."

படத்தின் காப்புரிமை Getty Images

எனது முகநூல் பக்கத்தில் மியான்மர் தொடர்பான படங்களை பகிர்வதால், எனக்கு கொலை மிரட்டலும் வருகிறது என்று சொல்லும் லூயின், சமூக ஊடக கணக்குகளை முடக்கும் நடவடிக்கைகள் அரசினாலும், அரசு ஆதரிக்கும் குழுக்களால் திட்டமிட்டு செய்யப்படுகிறது என்று தான் நம்புவதாக கூறுகிறார். அந்த குழுக்கள்தான் ஒருங்கிணைந்து வேலை பார்த்து, திட்டமிட்டு ஒரு சமூக ஊடக கணக்குக்கு எதிராக புகாரளித்து, அதனை முடக்குகிறார்கள் என்கிறார்.

"பிரச்சார யுத்தத்தின் ஒரு பகுதி"

பர்மா தொடர்பாக ஆய்வு செய்யும் ஆம்னெஸ்டி இண்டெர்நேஷனல் அமைப்பை சேர்ந்த லாரா ஹை, "ரோஹிஞ்சா செயற்பாட்டாளர்கள் ஃபேஸ்புக் மற்றும் ட்வீட்டர் ஆகிய சமூக ஊடகங்களில் பதியும் படங்கள் நீக்கப்படுவதாக எங்களுக்கும் புகார்கள் வந்துள்ளன. இது எதனால், யாரால் நிகழ்கிறது என்பது தெளிவற்ற ஒன்றாக இருக்கிறது" என்கிறார்.

மேலும் அவர், " திரைமறைவில் நடந்துக் கொண்டிருக்கும் பிரச்சார யுத்தத்தின் ஒரு பகுதி" என்று வர்ணிக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்