வட கொரியா பற்றி தெரிந்துகொள்ள உதவும் ஒன்பது முக்கிய அட்டவணைகள்

வடகொரியாவும், அமெரிக்காவும் பரஸ்பரம் அச்சுறுத்தல்களை விடுத்துவரும் நிலையில், வடகொரிய மக்கள் இந்த சொற்போரை எவ்வாறு பார்க்கின்றனர் என்பது பற்றி வெளியுலகத்திற்கு அதிகம் தெரியாது. ஏனெனில், கிம் ஜோங்-உன், தன் நாட்டு மக்கள் வெளியுலகத்துடன் தொடர்பு கொள்வதை கவனமாக கட்டுப்படுத்தி இரும்புப்பிடிக்குள் வைத்திருக்கிறார்.

21ஆம் நூற்றாண்டிற்குள் இன்னும் காலடி எடுத்து வைக்காத அளவு வடகொரியா தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக சித்தரிக்கப்படுகிறது. அந்த நாட்டில் இருந்து புள்ளிவிவரங்கள் பெறுவது கடினமானது என்ற நிலையில் மதிப்பீடுகளை அடிப்படையாக கொண்டே அந்த நாட்டைப் பற்றி கணிக்கப்படுகிறது. ஆனால் வட கொரியாவின் வாழ்க்கை முறை பற்றி அவை நமக்கு என்ன தெரிவிக்கின்றன?

1948ஆம் ஆண்டில் வடகொரியாவை திறமையுடன் நிறுவிய கிம் இல்-சுங்கின் குடும்ப வம்சத்தினரே அன்று முதல் இன்றுவரை நாட்டை ஆட்சி புரிகின்றார்கள். ஆனால் தென் கொரியாவோ ஆறு குடியரசுகள், ஒரு புரட்சி, சில சதிகளையும் சந்தித்து, சுதந்திரமான நியாயமான தேர்தல்களை நோக்கி நகர்ந்துள்ளது. தென்கொரியாவில் இதுவரை, மொத்தம் 12 அதிபர்கள் 19 ஆட்சிக் காலங்களை வழிநடத்தியுள்ளனர். அதாவது சில அதிபர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை அதிபராக பொறுப்பு வகித்துள்ளனர்.

மூன்று மில்லியன் மொபைல் போன்கள் என்ற எண்ணிக்கை கேட்பதற்கு பெரும் எண்ணிக்கை என்று தோன்றினாலும் அது உண்மையல்ல. 25 மில்லியன் மக்களைக் கொண்ட வடகொரியாவில், பத்தில் ஒருவரிடமே மொபைல் போன் இருக்கிறது என்பதே நிதர்சனம். மொபைலை பயன்படுத்தும் பெரும்பாலானோர் தலைநகர் பியோங்யாங்கில் இருக்கலாம் என்று கருதுவதற்கான சாத்தியங்கள் அதிகம்.

இதற்கு நேர்மாறாக, 51 மில்லியன் மக்கள்த்தொகை கொண்ட தென்கொரியாவில் அதைவிட அதிகமான மொபைல் இணைப்புகள் இருக்கின்றன.

'கொரியோலிங்க்' என்ற ஒரே நெட்வொர்க்கைக் கொண்ட வட கொரியாவின் மொபைல் சந்தையானது மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தாலும் வளர்ச்சியடைந்துவருகிறது.

முதலில் எகிப்திய தொலைத்தொடர்பு நிறுவனமான ஓராஸ்காம் நிறுவனத்துடன் கூட்டணியாக நிறுவப்பட்ட கொரியோலிங்க் மட்டுமே பல ஆண்டுகளாக மக்களுக்கான ஒரே தெரிவு.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
அமெரிக்க மிரட்டலுக்கு அசராத வடகொரியா

இருந்தபோதிலும், 2015 ஆம் ஆண்டில் 'பையல்' என்ற போட்டி நெட்வொர்க் ஒன்றை வட கொரியா அமைப்பதை ஓராஸ்காம் கண்டுபிடித்தது. எனவே மூன்று மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக தனது முதலீட்டாளர்களுக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயம் ஓராஸ்காமுக்கு ஏற்பட்டது.

அந்த சந்தாதாரர் எண்ணிக்கை பற்றி சந்தேகம் ஏற்படுவதற்கான காரணமும் இருக்கிறது.

வட கொரிய மக்கள் மொபைலில் கூடுதல் பேசும் நேரத்திற்கு (Talk time) செலவிடுவதைவிட கூடுதல் எண் ஒன்றை வாங்குவது மலிவானதாக இருக்கும் என்பதை அடிப்படையாக கொண்டு பார்த்தால், மொபைல் போன் வசதி கொண்ட வட கொரியர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம் என்று யு.எஸ். கொரியா இன்ஸ்டிடியூட் அட் சைஸ் என்ற ஆய்வு நிறுவனம் கூறுகிறது.

அதேபோல் மொபைல்களின் பற்றாக்குறை இருப்பது மட்டுமல்லாமல் மற்றும் வட கொரியாவின் பெரும்பான்மை மக்கள் அந்த நாட்டுக்குள் மட்டுமே செயல்படும் 'தனி இணையத்துக்கு' மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். தேசிய அளவிலான இன்ட்ரானெட் போன்றது அது.

இதுவொரு கட்டுக்கதை போல தோன்றினாலும், வட கொரிய ஆண்கள் சராசரி தென்கொரிய ஆணைவிட உயரம் குறைவாக இருப்பதாக சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

வட கொரியா எல்லைகளை கடந்து, தென் கொரியாவிற்கு வரும் அகதிகளின் உயரத்தை ஆய்வு செய்தார் சியோலில் உள்ள சுங்க்யூன்க்வான் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டேனியல் ச்வெகிண்டிக். தென் கொரிய ஆண்களைவிட, வடகொரிய ஆண்கள் சராசரியாக 3-8 செ.மீ (1.2 -3.1 அங்குல) உயரம் குறைவாக இருப்பதை அவர் கண்டறிந்தார்.

இந்த உயரக்குறைவுக்கு மரபியலை காரணமாக கூறமுடியாது. ஏனெனில் இரு நாட்டினரும் ஒரே மரபை சேர்ந்தவர்களே.

அகதிகள் வறுமையில் இருப்பதால் அவர்களின் உயரம் குறைவாக இருக்கலாம் என்ற கூற்றையும் அவர் புறந்தள்ளுகிறார்.

உணவுப் பற்றாக்குறையே வட கொரியர்கள் உயரம் குறைவாக இருப்பதற்கு முக்கியக் காரணியாக கருதப்படுகிறது.

வட கொரியா தலைநகர் பியோங்யாங்கில் இருந்து வெளியிடப்படும் புகைப்படங்களில் பரந்த, அழகிய நெடுஞ்சாலைகளையும், போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலைகளையும் காணமுடியும். ஆனால் தலைநகரத்திற்கு வெளியில் கதையே வேறு.

2006 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி வட கொரியாவில் சுமார் 25,554 கி.மீ. சாலைகள் உள்ளன, ஆனால் வெறும் 3% மட்டுமே, அதாவது சுமார் 724km (449 மைல்) அளவு நீளம் மட்டுமே முறையாக போடப்பட்ட சாலைகள்.

வட கொரிய மக்களில் ஆயிரத்தில் 11 பேர் மட்டுமே கார் வைத்திருப்பவர்கள் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே மக்கள் பயணம் செய்ய வேண்டுமானால் பொதுப் போக்குவரத்துக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும் என்பதை புரிந்துக்கொள்ளலாம்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பொது போக்குவரத்துக்காக காத்திருக்கும் வட கொரியா மக்கள்

வட கொரியாவின் பொருளாதாரம் நிலக்கரி ஏற்றுமதியையே நம்பியுள்ளது. ஆனால் வடகொரியாவில் இருந்து நிலக்கரியை வாங்கும் நாடுகளிலிருந்து கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் வடகொரியாவின் நிலக்கரி வர்த்தகத்தின் உண்மையான மதிப்பை அளவிடுவது கடினமானதே.

சீனாவிற்கு அதிக அளவிலான நிலக்கரியை ஏற்றுமதி செய்கிறது வடகொரியா. சீனாவும் 2017 பிப்ரவரியில் நிலக்கரி இறக்குமதிக்கு தடை விதித்துவிட்டது. இருந்தாலும் வடக்கொரியாவின் நிலக்கரி ஒதுக்கீடு செய்யும் முறை குறித்து ஆய்வாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

"நிலக்கரி இறக்குமதிக்கு சீனா தடை விதித்த பிறகும் வட கொரிய கப்பல்கள் சீனத் துறைமுகங்களில் இருப்பதை காண்பதாக கப்பல்களை கண்காணிப்பவர்கள் கூறுகின்றனர். சீனா, நிலக்கரி இறக்குமதியை குறைத்திருக்கலாம் என்று சொல்லலாம், ஆனால் முற்றிலுமாக தடை செய்யவில்லை" என்கிறார் பீட்டர்சன் சர்வதேச பொருளாதார நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவின் ஆய்வாளர் கெண்ட் பாய்ட்சன்.

1973 ம் ஆண்டு வரை வட கொரியாவும் தென் கொரியாவும் செல்வத்தின் அடிப்படையில் ஒரே நிலையில் இருந்தன.

பின்னர், தென் கொரியா உலகின் முன்னணி தொழில்துறை தயாரிப்பாளர்களில் ஒன்றாக முன்னேறியது. சாம்சங் மற்றும் ஹூண்டாய் போன்றவை உலகெங்கும் வீட்டுக்குள் புழங்கும் பெயர்களாயின. வட கொரிய அரசு அரசே அனைத்தையும் நடத்தவேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால் 1980 களில் தேக்க நிலையை சந்தித்தது.

மக்கள்தொகையின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய நாடுகளில் 52வது இடத்தில் இருக்கும் வடகொரியா, உலகின் நான்காவது பெரிய ராணுவத்தைப் பெற்றிருக்கிறது.

வடகொரியா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீதத்தை ராணுவத்துக்கு செலவிடுகவதாகக் கணக்கிடப்படுகிறது, மேலும் கிட்டத்தட்ட அனைத்து வட கொரிய ஆண்களும் ஏதோ ஒருவகை ராணுவப் பயிற்சியைப் பெற்றிருப்பார்கள்.

1990 களின் பிற்பகுதியில் தொடர்ந்து ஏற்பட்ட பஞ்சங்களால் வட கொரியா மக்களின் சராசரி ஆயுட்காலம் கணிசமாக குறைத்தது. இந்தக் காரணியை கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டாலும்கூட வட கொரியா சுமார் 12 ஆண்டுகளுக்கு ஆயுட்காலத்தில் பின்தங்கியுள்ளது.

வடகொரியாவில் உணவு பற்றாக்குறை தொடர்வதும், தென் கொரியர்களைவிட அவர்கள் பொதுவாகக் குறைந்தகாலம் வாழ்வதற்கான பல காரணிகளில் ஒன்று.

ஒரு தசாப்த காலமாக நாட்டின் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்கு தென் கொரியா பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், 2017 ஆம் ஆண்டில் பிறப்பு விகிதம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்துவிட்டது.

குழந்தை பெற்றுக் கொள்வதற்கு ஊக்கத் தொகை கொடுப்பது, மகப்பேறு விடுப்பை மேம்படுத்துவது மற்றும் மலட்டுத்தன்மை போக்கும் சிகிச்சைக்கு பணம் கொடுப்பது பல்வேறு விதங்களில் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக 70 பில்லியன் அமெரிக்க டாலர் அளவு தொகையை தென்கொரியா செலவழித்துள்ளது. ஆனால், வட கொரியாவில் அதிகக் குழந்தைகள் பிறக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்