அமெரிக்க சுகாதாரச் செயலாளர் பதவி விலகல்: தனி விமான விவகாரம்

டாம் பிரைஸ் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption டாம் பிரைஸ்

தமது அரசுப் பணிகளுக்காக தனி விமானங்களைப் பயன்படுத்தியது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அமெரிக்க சுகாதாரத்துறை செயலாளர் டாம் பிரைஸ் பதவி விலகினார்.

அவரது பதவி விலகல் கடிதத்தை அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்றுக்கொண்டதாக அதிபர் மாளிகையில் இருந்து வெளியான செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

துணை உதவி சுகாதாரச் செயலாளரான டான் ஜெ ரைட் தாற்காலிக சுகாதாரச் செயலாளராக நியமிக்கப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களைக் கையாளும் அலுவலர்களைத் தவிர மற்றவர்கள் தங்கள் பணி தொடர்பான பயணங்களை வணிக விமானங்களில் மேற்கொள்ள வேண்டும் என்ற குறிப்பு உள்ளது.

இதை மீறி டாம் பிரைஸ் 26 முறை தனி விமானங்களைப் பயன்படுத்தியுள்ளார். இது மிகவும் செலவு பிடிக்கக்கூடியது.

பிரைசின் பயணங்களால் 1 மில்லியன் டாலர் செலவானதாக பொலிடிகோ என்ற செய்தி இணைய தளம் புலனாய்வு செய்து கண்டுபிடித்ததை அடுத்து தமது செயலுக்கு டாம் பிரைஸ் மன்னிப்பு கோரியிருந்தார். செலவான தொகையை திருப்பித் தருவதாகவும் அவர் கூறியிருந்தார்.

முன்னதாக, டாம் பிரைஸ் பயணங்களால் ஏற்பட்ட செலவு தமக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.

டிரம்பின் அமைச்சரவையில் உள்ள மேலும் மூன்று உறுப்பினர்கள் தங்கள் பணி நிமித்தம் தனி விமானங்களைப் பயன்படுத்தியதான குற்றச்சாட்டு ஆராயப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :