தனிநாட்டுக்கு கேட்டலோனியா மக்கள் பெரும்பான்மை ஆதரவு

வாக்கெடுப்பின் முடிவினை அறிவிக்கும் கேட்டலான் தலைவர்கள் படத்தின் காப்புரிமை Reuters
Image caption வாக்கெடுப்பின் முடிவினை அறிவிக்கும் கேட்டலான் தலைவர்கள்

ஸ்பெயின் நாட்டின் ஒரு மாகாணமான கேட்டலோனியா, தனி நாடாகப் பிரிந்து செல்வது தொடர்பாக நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் தனிநாடு கோரிக்கைக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்திருப்பதாக கேட்டலன் தலைவர் கார்லஸ் பூஜ்டியமோன் கூறியுள்ளார்.

சுதந்திரத்தை சுயாதீனமாக அறிவித்துக் கொள்ள இந்த வாக்கெடுப்பின் வெற்றி வழிவகுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

வாக்கெடுப்பில் மொத்தம் 42.3 சதவிகிதம் மக்கள் பங்கெடுத்தார்கள் என்றும், அதில் 90 சதவிகித மக்கள், தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள் என்றும் கேட்டலான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஸ்பெயினின் அரசியலமைப்பு நீதிமன்றம் இந்த வாக்கெடுப்பை தடை செய்திருந்தது. இந்த வாக்கெடுப்பை தடுக்க காவல் துறை மேற்கொண்ட தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்தனர்.

அதிகாரிகள் வாக்குப்பெட்டிகளையும், வாக்கு சீட்டுகளையும் வாக்குச்சாவடிகளிலிருந்து கைப்பற்றினார்கள். இந்த வாக்கெடுப்பில் பங்குபெற்றதன் மூலம் கேட்டலான் மக்கள் முட்டாளாக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Jaume Clotet
Image caption கேட்டலான் தலைவர் கார்லியாஸ் பூஜ்டியமோன்

இந்தப் பகுதியில் மட்டும் 5.3 மில்லியன் வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்றும், அதில் 2.2 மில்லியன் மக்கள் வாக்கெடுப்பில் பங்கெடுத்தார்கள் என்றும் கேட்டலான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாக்கெடுப்பு மையங்கள் பாதியில் மூடப்பட்டு, வாக்கு பெட்டிகள் கைப்பற்றப்பட்டதால் ஏறத்தாழ 750,000 வாக்குகளை எண்ண முடியவில்லை என்று கேட்டலான் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

பிற மூத்த தலைவர்களுடன் தொலைக்காட்சியில் தோன்றிய கேட்டலான் தலைவர் கார்லஸ், நம்பிக்கையான இந்த நாளில்,"கேட்டலோனியா மக்கள் தனி குடியரசுக்கான உரிமையை வென்றெடுத்துள்ளார்கள்" என்று தெரிவித்தார்.

மேலும் அவர், "இன்னும் சில தினங்களில் என்னுடைய அரசாங்கம், இந்த வாக்கெடுப்பு முடிவுகளை நம்முடைய மக்களின் இறையாண்மையான கேட்டலான் நாடாளுமன்றத்துக்கு அனுப்பும். அவர்கள் சட்டத்தின்படி நடவடிக்கைக்களை மேற்கொள்வார்கள்." என்றார்.

இது ஜனநாயகத்தின் கேலிக்கூத்து என்று ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் கூறினார்.

உற்சாகமும் ஊர்வலமும்:

ஸ்பெயினிலிருந்து கேட்டலோனியா பிரிந்து செல்ல விரும்பிய, கேட்டலான் சுதந்திரம் அடைய வேண்டும் என்று விரும்பிய பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பிராந்திய தலைநகரான பார்சிலோனியாவில் கூடி, கேட்டலானின் தேசிய கீதத்தை பாடினார்கள்.

இன்னொரு பக்கம் இந்த சுதந்திரத்துக்கு எதிரானவர்கள் பார்சிலோனாவிலும், பிற ஸ்பெயின் நகரத்திலும் ஊர்வலம் நடத்தினார்கள்.

சுதந்திரத்தை அங்கீகரிக்காத, வாக்கெடுப்பில் பங்கெடுத்த மக்கள் மீது தாக்குதல் தொடுத்த அரசுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்தம் செய்யபோவதாக 40-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption பல்வேறு பகுதியில் நடந்த மோதலில் 800-க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்ததாக கேட்டலான் அரசாங்கம் கூறியுள்ளது.

பல்வேறு பகுதிகளில் நடந்த மோதலில் 800-க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்ததாக கேட்டலான் அரசாங்கம் கூறியுள்ளது.

ஸ்பேனிஷ் உள்துறை அமைச்சகம், 12 காவலர்கள் காயமடைந்தனர் என்றும், மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் கூறியுள்ளது.

மேலும் அந்த அமைச்சகம், 92 வாக்கெடுப்பு மையங்கள் மூடப்பட்டன என்று கூறியுள்ளது.

ஆனால்,இதை மறுத்த கேட்டலோனியா அதிகாரிகள் அதிக எணிக்கையிலான வாக்கெடுப்பு மையங்கள் மூடப்பட்டது என்று கூறினர்.

மக்கள் வாக்களிப்பதை தடுக்க பெரும் எண்ணிக்கையிலான காவலர்கள் குவிக்கப்பட்டு இருந்தார்கள்.

ஜிரோனாவில், கேட்டலான் தலைவர் கார்லஸ் வாக்களிப்பதற்காக சென்ற வாக்குச்சாவடியை போலீஸார் கைப்பற்றி அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தியதால், கார்லஸ் வேறு வாக்குசாவடிக்கு சென்று வாக்களித்தார்.

பார்சிலோனா மாகாண தலைவர் அடா கொலாவ் போலீஸின் இந்த செயலை கண்டித்தார். ஆனால், ஸ்பெயினின் துணை பிரதமர் சொராயா, போலீஸ் மிகச்சரியான வழியில் நடந்துகொண்டுள்ளது என்று பாராட்டினார்.

வாக்கு மையங்களை ஆக்கிரமித்த மக்கள்:

கேட்டலான் அதிகாரிகள், மொத்தமுள்ள 2300 வாக்கு மையங்களை 319 மையங்களை போலீஸ் கைப்பற்றி அதை மூடியதாக கேட்டலான் அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம், ஸ்பெயின் அரசாங்கம் தாங்கள் 92 மையங்களை மட்டுமே மூடியதாக கூறியுள்ளது.

வாக்குச் மையங்களை கைப்பற்றிவிடக் கூடாது என்பதற்காக, அதை திறந்து வைப்பதற்காக கேட்டலான் சுதந்திரத்துக்கு ஆதரவான மக்கள், வெள்ளிக்கிழமையே வாக்குசாவடி மையங்கள் இருந்த பள்ளிகளையும், கல்லூரிகளையும் ஆக்கிரமித்தனர். அதில் பெரும்பாலானவர்கள் பெற்றோர்களும், குழந்தைகளும்தான்.

கேட்டலோனியா ஸ்பெயினின் வடக்கிழக்கில் இருக்கும் வளமையான பகுதி. இதில் ஏறத்தாழ 7.5 மில்லியன் மக்கள் வசிக்கிறார்கள். அவர்களுக்கென்று தனித்துவமான மொழியும், கலச்சாரமும் இருக்கிறது. அந்த பகுதி தன்னாட்சி உரிமையை கொண்டிருந்தாலும், அதை தனிநாடாக ஸ்பெயினின் அரசியலமைப்பு அங்கீகரிக்கவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்