சிரியா போர்: ஜிஹாதிகளிடம் இருந்து தற்காக்க துருக்கி ராணுவ நடவடிக்கை

சிரியாவின் வட மேற்குப் பகுதியில் உள்ள இட்லிப் மாகாணத்தில் துருக்கியின் ஆதரவு பெற்ற போராளிகள் போரில் ஈடுபட்டு வருவதாக துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption சுதந்திர சிரியா ராணுவம் என்னும் போராளி குழு துருக்கி ஆதரவுடன் போரிட்டு வருகிறது

அந்த மாகாணம் ஜிஹாதி குழுக்களின் ஆதிக்கத்தில் இருப்பதாகவும், துருக்கி எல்லையில் ஒரு "பயங்கரவாத செயல்களுக்கான இடம்" இருப்பதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அந்நாட்டில் பதற்றம் இல்லாத பகுதிகளை உருவாக்க துருக்கி, ரஷ்யா மற்றும் இரான் ஆகிய நாடுகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒப்புக்கொண்டன.

சிரிய அதிபர் பஷார் அல்-அசாத் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று துருக்கி விரும்பினாலும், ரஷ்யா மற்றும் இரான் அவருக்கு ஆதரவாக உள்ளன.

படத்தின் காப்புரிமை Reuters

இட்லிப் மாகாணம் அல்-கொய்தாவின் ஒரு முன்னாள் பிரிவின் தலைமையின் கீழ் செயல்பட்ட ஹயாத் தஹ்ரீர் அல்-ஷாம் எனும் ஜிஹாதி அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. போரால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் ஊடுருவியுள்ள அந்த அமைப்பு, அரசுக்கு எதிராக போரிட்டு வருகிறது.

இன்னும் துருக்கி படைகள் இட்லிப் பகுதிக்குள் அனுப்பப்படாவிட்டாலும், அவை அனுப்பப்படும் என்று கடந்த மாதம் எர்துவான் கூறியிருந்தார். "அங்குள்ள பொதுமக்கள் கைவிடப்படமாட்டார்கள்," என்றும் அவர் தற்போது கூறியுள்ளார்.

சிரியாவை ஒட்டியுள்ள துருக்கியின் தெற்கு எல்லை அருகே பெரிய அளவில் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இரு நாட்டு எல்லையில் இருக்கும் பாப் அல்-ஹவா சாவடி அருகே உள்ள எல்லைக் சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர்வாசிகள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளனர்.

இஸ்லாமிய அரசு அமைப்பினர் மற்றும் குர்திஷ் தீவிரவாதக் குழுக்களுக்கு எதிராக, சிரியாவில் உள்ள அலெப்போ மாகாணத்தில் "யூப்ரடீஸ் ஷீல்டு " என்னும் ராணுவ நடவடிக்கையை இந்த ஆண்டின் தொடக்கத்தில் துருக்கி மேற்கொண்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :