கேட்டலோன் சுதந்திரம்: வாக்கெடுப்பால் எந்தப் பலனும் இருக்காது என்கிறார் ஸ்பெயின் பிரதமர்

ஸ்பெயின் பிரதமர் மடியானோ ரஜோய் படத்தின் காப்புரிமை EPA
Image caption கேட்டலோனியாவின் சுதந்திர அறிவிப்பால் எந்த விளைவும் இருக்காது.

கேட்டலோனியா தனது சுதந்திரம் குறித்து விடுக்கும் எந்த ஒரு பிரகடனத்துக்கும் எந்த ஒரு பலனும் இருக்காது என்று ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜாய் எச்சரித்துள்ளார்.

மேலும் , கேட்டலோனியா பிரதேசத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் தன்னாட்சி உரிமையை இடை நிறுத்தப்படும் சாத்தியக்கூறையும் தான் நிராகரிக்கவில்லை என்று அவர் கூறினார்.

'எல் பெய்ஸ்' செய்தித்தாளுக்கு வழங்கிய பேட்டியொன்றில், இந்த நெருக்கடிக்குத் தீர்வு காண எடுக்கப்படும் எந்த ஒரு மத்யஸ்த முயற்சியையும் ரஜாய் நிராகரித்தார்.

முன்னதாக, ஆயிரக்கணக்கான மக்கள், ஸ்பெயினில் ஒற்றுமை கோரி பேரணி நடத்தினர்.

கடந்த ஞாயிறு அன்று கேட்டலன் சுந்திரத்திற்காக நடந்த பிரச்சனைக்குரிய மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பிற்கு பதிலளிக்கும் வகையில் இது நடந்தது.

செழிப்பான வட-கிழக்கு பகுதியான கேட்டலோனியாவில், உள்ள 23 இலட்சம் மக்களில், வாக்குப்பதிவில் பங்கேற்ற 90 சதவிகிதம் பேர், சுதந்திரம் வேண்டும் என்றே வாக்களித்துள்ளனர்.

இந்த வாக்கெடுப்பில் 43 சதவிகித ஓட்டுக்கள் பதிவாகின.

இந்த தேர்தலில் பல முறைகேடுகள் நடந்ததாகவும், சில வாக்குப்பெட்டிகள் ஸ்பெயின் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வாக்குப்பதிவிற்கு ஸ்பெயின் நீதிமன்ற அளித்திருந்த தடையினால், வாக்களிக்க வருபவர்களை காவல்துறையினர் கலைக்க முயன்ற போது, கிட்டத்தட்ட 900 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதில் 33 காவல்துறையினரும் காயமடைந்துள்ளனர்.

"சுதந்திரத்துக்கான எந்த ஒரு பிரகடனமும் எங்கும் இட்டுச்செல்லாது என்பதை அரசு உறுதி செய்யும்" , என்று 'எல் பெய்ஸ்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ராஜாய் கூறினார்.

தன்னாட்சி பெற்ற ஒரு பிரதேசத்தின் நிர்வாகத்தில் தலையிட தேசிய நாடாளுமன்றத்தை அனுமதிக்கும் ஸ்பெயினின் அரசியல் சட்ட 155வது பிரிவைப் பிரயோகிக்க அவர் தயாராக இருக்கிறாரா என்று கேட்டதற்கு, " சட்டத்துக்குட்பட்ட எந்த வழிமுறையையும் பயன்படுத்துவதை தான் நிராகரிக்கவேயில்லை" என்றார் ரஜாய்.

கேட்டலோனியாவில் கருத்தறியும் வாக்கெடுப்பு நடக்கும் முன்பாக, அங்கு நிலை நிறுத்தப்பட்ட கூடுதல் போலிசாரை, இந்த நெருக்கடி சூழல் தீரும்வரை அங்கேயே இருத்தி வைக்க தான் திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

அதிகரித்துவரும் இந்த அரசியல் நெருக்கடி காரணமாக தேசியத் தேர்தல்களை முன்கூட்டியே நடத்த தான் உத்தரவிடப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.

ஸ்பெயின் நீதிமன்றம், திங்களன்று நடைபெறுவதாக இருந்த, கேட்டலன் நாடாளுமன்ற கூட்டத்திற்கு தடை விதித்துள்ளதை தொடர்ந்து, கேட்டலன் அதிபர் கார்லஸ் பூஜ்டியமோனின் உரை, செவ்வாயன்று, உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த முறை கேட்டலன் நாடாளுமன்றம் கூடும் போது, ஒருதலைபட்சமாக, அது சுதந்திரத்தை அறிவிக்கும் என்ற ஊகம் உள்ளது.

இந்நிலையில், கேட்டலோனியாவின் முன்னாள் தலைவரான அர்தர் மாஸ் , ஃபினான்ஷியல் டைம்ஸ் பத்திரிக்கையிடம் கூறுகையில், `கேட்டலோனியா, தனியாக பிரிந்து செல்லுவதற்கான உரிமையை பெற்றுவிட்டது என்றாலும் கூட, அது இன்னும் உண்மையான சுதந்திரத்திற்கு தயாராகவில்லை` என்றார்.

படத்தின் காப்புரிமை AFP

வாருங்கள் பேசுவோம்

சனிக்கிழமையன்று ஸ்பெயின் தலைநகர் மெட்ரிட்டில் நடந்த பேரணியில், ஆயிரக்கணக்கான மக்கள் ஒற்றுமையான ஸ்பெயினுக்காக குரல் எழுப்பினர்.

கேட்டலன் நகரான பார்சிலோனா உள்ளிட்ட நகரங்களில் நடந்த ஆர்பாட்டங்களில், அரசியல் தலைவர்களுக்கு இடையான பேச்சுவார்த்தை நடைபெறவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

வெள்ளைநிற ஆடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ''அரசியல்வாதிகளைவிட மிகவும் மேன்மையானது ஸ்பெயின் நாடு`' , `'வாருங்கள் பேசுவோம்'` உள்ளிட்ட பல்வேறு வாசகங்களடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

அரசியல் நிலையற்ற தன்மையால், கேட்டலனில் உள்ள வணிக நிறுவனங்கள், அங்கிருந்து கிளப்புவது குறித்த அறிவிப்பை தொடர்ந்து அளிக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்