அமெரிக்கா-தென் கொரியா போர் திட்டங்களை திருடிய வட கொரிய ஹேக்கர்கள்

கிம் ஜாங் - உன்

பட மூலாதாரம், AFP Photo / KCNA VIA KNS

படக்குறிப்பு,

கிம் ஜாங் - உன்

வட கொரியாவை சேர்ந்த ஹேக்கர்கள், தென் கொரியாவின் இணையத்தை ஊடுருவி, வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்-ஐ கொல்ல வைத்திருந்த திட்டம் உள்ளிட்ட பல ராணுவ ஆவணங்களை திருடி உள்ளனர் என்று கூறப்படுகிறது.

தனது நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து இந்த தகவல் வெளிவந்ததாக, தென் கொரிய நாடாளுமன்ற உறுப்பினர், ரீ சியொல் -ஹீ கூறினார்.

திருடப்பட்ட அந்த ஆவணங்கள், அமெரிக்கா மற்றும் தென் கொரியாவால் வடிவமைக்கப்பட்ட போர்க் கால அவசரத் திட்டங்களை கொண்டிருந்தன.

அந்த ஆவணங்களில், தங்களது நட்பு நாடுகளின் மூத்த தளபதிகளுக்கு வழங்கப்பட்ட அறிக்கைகளும் இருந்தன.

இந்தத் தகவல் குறித்து தமது கருத்தினை தெரிவிக்க இது வரை தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகம் மறுத்து வருகிறது.

இணையத்தை ஊடுருவிய ஹேக்கர்கள், தென் கொரியாவின் சிறப்பு படைகளின் திட்டங்கள் குறித்த கோப்புகள், தென் கொரியாவில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் ராணுவ மையங்கள் குறித்த தகவல்களையும் திருடி இருக்கிறார்கள்.

"ஏறத்தாழ 235 ஜிபி அளவுள்ள ராணுவ கோப்புகள் ஒருங்கிணைந்த பாதுகாப்புத் தகவல் மையத்திலிருந்து திருடப்பட்டுள்ளன. அதில் 80 சதவீத கோப்புகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை" என்று தென்கொரிய ஆளுங்கட்சியை சேர்ந்தவரும் நாடாளுமன்ற பாதுகாப்புக் குழு உறுப்பினருமான ரீ கூறினார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே இந்த இணைய ஊடுருவல் நடந்திருக்கிறது.

பெருமளவில் தகவல் திருடப்பட்டுள்ளது.இந்த இணைய தாக்குதல், வட கொரியாவின் தூண்டுதலினால் நிகழ்ந்திருக்கலாம் என்று மே மாதம் தென் கொரியா கூறியது. ஆனால், என்ன தகவல்கள் திருடப்பட்டன என்பது குறித்து எதுவும் கூறவில்லை.

ஆனால், வட கொரியா இதனை மறுத்தது.

தென் கொரிய அரசினால் நடந்தப்படும் யொன்ஹப் செய்தி சேவை நிறுவனம், "அண்மை ஆண்டுகளில், தமது நாட்டின் மீது அண்டை நாடான வடகொரியா சைபர் தாக்குதல்களைத் தொடுத்து வருவதாகவும், அவற்றில் பெரும்பாலானவை, தமது அராசங்க இணையத்தளங்களை குறி வைத்து தொடுக்கப்படும் தாக்குதல்கள்," என்று செய்தி வெளியிட்டு இருந்தது.

பயிற்சி பெற்ற பல வடகொரிய ஹேக்கர்கள் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் தங்கியிருந்து செயல்படுவதாக சந்தேகிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :