அணு ஆயுத செய்தி சர்ச்சை: தொலைக்காட்சி உரிமம் ரத்து செய்யப்படலாம் என மிரட்டும் ட்ரம்ப்

அமெரிக்கா வசமுள்ள அணு ஆயுதங்களின் அளவை பத்து மடங்கு அதிகரிக்க அந்நாட்டு அதிபர் டிரம்ப் விரும்புவதாக செய்தி வெளியிட்ட என்.பி.சி. தொலைக்காட்சியின் உரிமத்தை ரத்து செய்யும் வாய்ப்பு பற்றி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டிவிட்டரில் ஒரு கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

படத்தின் காப்புரிமை ALEX EDELMAN/AFP/Getty Images
Image caption தொலைக்காட்சிக்கு எச்சரிக்கை.

அந்தச் செய்தியை "பொய்ச் செய்தி", "முழுக் கற்பனை" என்று வருணித்தார் டிரம்ப். "என்.பி.சி. மற்றும் தொலைக்காட்சிகளில் இருந்து எல்லாம் பொய்ச் செய்தியாக வந்துகொண்டிருக்கும் நிலையில், அவர்களது உரிமத்தைக் கேள்விக்கு உட்படுத்துவதற்கு எது உகந்த நேரம்? நாட்டுக்கு கெடுதி," என்று புதன்கிழமை தமது டிவிட்டர் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார் டிரம்ப்.

இதே தொலைக்காட்சிதான், டிரம்ப் ஒரு மூர்க்கர் என்று அந்நாட்டு ராஜீயத்துறை செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் குறிப்பிட்டதாக செய்தி வெளியிட்டது. இதன் மூலம் ஏற்கெனவே வெள்ளை மாளிகையின் கோபத்துக்கு இந்த ஊடகம் இலக்காகி இருந்தது.

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ புதன்கிழமை அமெரிக்கா வந்திருந்தார். அவரை வரவேற்ற பிறகு வெள்ளை மாளிகையில் பேசியபோதும் என்.பி.சி.யின் செய்தியை அவர் மறுத்தார்.

"பராமரிக்கவே விரும்புகிறேன்"

அவர் உண்மையில் அணு ஆயுதங்களின் அளவை அதிகரிக்க விரும்புகிறாரா என்று கேட்டதற்கு, "அணு ஆயுதங்களை, முழுமையாக, சிறப்பாக பராமரிக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது நடந்துகொண்டும் இருக்கிறது.

ஆனால் இப்போது இருப்பது போல பத்து மடங்கு வேண்டும் என நான் விரும்புவதாக அவர்கள் தெரிவித்திருப்பது முழுக்க தேவையற்றது, என்னை நம்புங்கள்" என்று தெரிவித்தார் டிரம்ப்.

"நவீனமயமாக்க விரும்புகிறேன், அவற்றுக்கு புத்துயிரூட்ட விரும்புகிறேன்," என்றும் அவர் தெரிவித்தார். பாதுகாப்புச் செயலாளர் ஜிம் மேட்டிசும் என்.பி.சி. செய்தியை மறுத்தார்.

பேச்சுரிமை சிக்கல்

அதே நேரம், தொலைக்காட்சிகளின் உரிமம் தொடர்பாக டிரம்ப் வெளியிட்ட கருத்து, பேச்சுரிமை தொடர்பான பிரச்சினையாகவும் உருவெடுத்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption கனடா நாட்டுப் பிரதமரை வரவேற்ற பிறகு என்.பி.சி. வெளியிட்ட அணு ஆயுத எண்ணிக்கை தொடர்பான செய்தியை மறுத்தார் டிரம்ப்.

"என்.பி.சி.யின் உரிமம் கேள்விக்குள்ளாகும் என்ற டிரம்பின் கருத்து, பிற அரசுகளுக்கும் எதேச்சதிகாரப் போக்குகளைக் கைக்கொள்வதற்கான துணிச்சலை வழங்கும்," என்று சிபிஜே என்னும் பத்திரிகையாளர் பாதுகாப்பு அமைப்பு டிவீட் செய்துள்ளது.

பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது அமெரிக்க 'அரசாங்க அறம்' தொடர்பான அலுவலகத்துக்குத் தலைமை வகித்த வால்டர் ஷூப் என்பவர் "இது நம்நாடு ஜனநாயகமாகவே இல்லாமல் போகும் நிலைக்கு இட்டுச் செல்லக்கூடும்" என்று அச்சம் தெரிவித்துள்ளார்.

எவ்வளவு அணு ஆயுதம்?

கடந்த ஜூலை மாதம் அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகனில் நடந்த உயர்மட்டக்கூட்டம் ஒன்றில் பேசிய டிரம்ப், 1960ம் ஆண்டு முதல் அமெரிக்கா வைத்துள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவருவதைக் காட்டும் வரைபடத்தைப் பார்த்துவிட்டு அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என்று தெரிவித்ததாக என்.பி.சி. செய்தி வெளியிட்டிருந்தது.

அமெரிக்காவிடம் 7,100 அணு ஆயுதங்களும், ரஷ்யாவிடம் 7,300 அணு ஆயுதங்களும் இருப்பதாக அமெரிக்காவின் பக்கச்சார்பற்ற ஆயுதக் கட்டுப்பாட்டு சங்கம் என்னும் அமைப்பு தெரிவித்துள்ளது.

உரிமம் ரத்து செய்ய முடியுமா?

உண்மையில் தொலைக்காட்சி உரிமத்தை ரத்துசெய்யவேண்டும் என்று டிரம்ப் விரும்பினால், அவர் அதற்காகப் போராடவேண்டியிருக்கும் என்று பார்வையாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் என்ற அமைப்பே அமெரிக்காவில் ஒளிபரப்பு நிறுவனங்களை ஒழுங்குபடுத்துகிறது.

அந்நிறுவனம் ஒரு தொலைக்காட்சிக்கென ஒட்டுமொத்தமாக உரிமம் தருவதில்லை. அதற்குப் பதிலாக ஒரு தொலைக்காட்சியின் தனித்தனி ஒளிபரப்பு நிலையங்களுக்கே உரிமம் வழங்குகிறது. என்.பி.சி. தொலைக்காட்சிக்கு 30 ஒளிபரப்பு நிலையங்கள் உள்ளன.

செய்தி முறையாக இல்லை என்று காரணம் காட்டி உரிமத்தை ரத்து செய்வது எளிமையில்லை என்கிறார்கள் வல்லுநர்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்