சமூக நீதியின் ஜாம்பவான்கள் திராவிடக் கட்சிகளா, கம்யூனிஸ்டுகளா? சர்ச்சையைக் கிளப்பிய அர்ச்சகர் நியமனம்

கேரளாவில் ஆறு தலித்துகள் உள்பட பிராமணர் அல்லாதோரை அர்ச்சகர்களாக நியமித்திருப்பது, சமூக நீதியின் ஜாம்பவான்கள் திராவிடக் கட்சிகளா, கம்யூனிஸ்டுகளா என்ற அனல் பறக்கும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த விவகாரம் வேறு விதமான விவாதம் ஒன்றையும் உருவாக்கியுள்ளது. சமூக நீதி குறித்து பல காலமாகப் பேசி வரும் திராவிடக்கட்சிகள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் உள்ள தமிழகத்தில் நடக்காத ஒன்றை கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரளா நடத்திக் காட்டியிருக்கிறது என்றும் போதிய அளவுக்கு தலித்துகளின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தாமல் வாக்கு வங்கி அரசியலுக்காக சமரசம் செய்து கொண்டார்கள் என்னும் விமர்சனமும், வைக்கம் ஆலய நுழைவுப் போராட்டத்தில் பெரியாரின் பங்கை தமிழகத்தில் இருக்கும் திராவிட அமைப்புகள் மிகைப்படுத்திவிட்டன என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

பார்ப்பனர் அல்லாதவர்கள் கோயில் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்தப் பெருமை சமூக நீதிக்காகப் போராடிய அணைத்து முற்போக்கு இயக்கங்களையும் சார்ந்தது என்று கூறியிருந்தார்.

தற்போது கேரளத்தில் உள்ள, அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த வைக்கம் என்னும் ஊரில், 1924-இல் ஆலய நுழைவுப் போராட்டம் நடந்த பின்னர், ஈழவர்கள் மற்றும் பிற தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் சோமநாதர் கோயிலில் நுழைய இருந்த தடையும், அந்தக் கோயில் அமைத்திருந்த பகுதியைச் சுற்றியிருந்த தெருக்களில் நடப்பதற்கே இருந்த தடையும் நீங்கியது.

படத்தின் காப்புரிமை Getty Images

அப்போதைய சென்னை மாகாண காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பெரியார், அந்தப் போராட்டத்தில் பங்கேற்றார். ஆனால், அந்தப் போராட்டம் அங்கிருந்த காங்கிரஸ் கட்சியினரால் முன்னெடுத்து நடத்தப்பட்டது என்றும், அவர்களின் அழைப்பின்பேரில் பெரியார் அந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தாரே ஒழிய அதில் அவருக்குப் பெரிய பங்கு இல்லை என்றும், இங்கிருந்த திராவிட இயக்கங்கள் அவரின் பங்கை மிகைப்படுத்திவிட்டதாகவும் சில சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் விமர்சிக்கின்றனர்.

'ஒற்றைச் சம்பவத்தை வைத்து பெரியாரை மதிப்பிடக் கூடாது'

இதகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை, "வைக்கம் போராட்டம் போன்ற தனித்தனியான சம்பவங்களை வைத்து பெரியாரின் பங்கை மதிப்பிடாமல், ஒட்டுமொத்தமாக சாதி ஒழிப்புக்கு அவர் என்ன பங்காற்றினார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்," என்கிறார்.

"தாழ்த்தப்பட்டவர்களுக்கு குளங்களில் நீர் எடுக்க இருந்த தடைக்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட மிகச் சில போராட்டங்களைத் தவிர வேறு போராட்டங்களில் அம்பேத்கர் நேரடியாகப் பங்கேற்கவில்லை. ஆனால், அவர்களின் பிரச்சனைகளை பற்றி அவர் நிறைய எழுதினார். காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதே சமூக நீதி மற்றும் சாதி ஒழிப்புக்கு கொள்கைகளைக் கொண்டிருந்த பெரியார், காங்கிரஸ் கட்சியில் இருந்தால் அத்தகைய போராட்டங்களுக்கு வாய்ப்பில்லை என்பதால்தான் காங்கிரசில் இருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தார், " என்றார் ராஜதுரை.

தற்போது தமிழ் தேசியவாதிகளே கூடக் கூறும் சாதி ஒழிப்பு, வர்ணாஸ்ர தர்மம் ஒழிப்பு ஆகியவற்றின் மூலமாக பெரியார்தான் இருந்தார் என்று கூறும் ராஜதுரை, "பெரியாரிடம் கற்றுக்கொண்டு அவருக்கு எதிராகவே திரும்புவது நேர்மையற்ற செயல்," என்று கூறினார்.

'தமிழகத்திலும் முடியும்'

1971-இல் திமுக ஆட்சியின்போது இந்து அறநிலையத்துறை சட்டத்தில் பரம்பரை பரம்பரையாக இருப்பவர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக முடியும் மற்றும் ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்கள் ஆக முடியும் என்று இருந்த சரத்துகள், அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆக முடியும் என்று திருத்தப்பட்டது என்று தெரிவித்தார் ராஜதுரை.

தமிழகத்திலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான வாய்ப்பு குறித்து கூறுகையில், "ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்த நீதிபதிகளால் சட்டம் ஒவ்வொரு வகையில் பொருள்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆகம விதிப்படி தமிழகத்தில் வேறு சாதியினர் அர்ச்சகர் ஆக முடியாது என்று தமிழக அரசின் முடிவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தாலும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று கேரளத்தில் இதே விவகாரம் தொடர்பான ஒரு வழக்கில் கூறியுள்ளது. அதை வைத்து இங்கு பார்ப்பனர் அல்லாதவர்களையும் அர்ச்சகர்களாக தமிழக அரசு நியமிக்க வேண்டும்," என்றார்.

படத்தின் காப்புரிமை படத்தின் காப்புரிமைHTTP://WWW.THANTHAIPERIYARDK.OR

வாக்கு வங்கி அரசியல் காரணமா?

தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆவதற்கு உச்ச நீதிமன்றம் விதித்த தடையும் ஒரு காரணமாக இருந்தாலும், அதன் பின்னர் ஆட்சியில் இருந்த திராவிடக் கட்சிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததும் ஒரு காரணம் என்கிறார் எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம்.

"அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆக வேண்டும் எனும் எண்ணம் தமிழக மக்களிடமே பரவலாக இல்லை. ஒரு வேளை அதைச் செய்தால் வாக்குகள் கிடைக்கும் என்னும் நிலை இருந்தால் அவர்கள் நிச்சயமாக அதைச் செய்திருப்பார்கள்," என்கிறார் அவர்.

தமிழகத்தில் உள்ள திராவிடக் கட்சிகளைப் போல, கேரளத்தில் உள்ள இடதுசாரிக் கட்சிகள் 'டோக்கனிசம்' (ஒப்புக்கு செய்தல்) அரசியல் செய்வதில்லை என்று கூறும் ஸ்டாலின் ராஜாங்கம், இந்த விடயத்தில் திராவிடக் கட்சிகளால் இன்னும் ஆக்கபூர்வமாக செயல்பட்டிருக்க முடியும் என்கிறார்.

ஆட்சிக்கு வந்த ஆரம்ப காலங்களில் எல்லா சாதியினரின் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்திய திராவிடக் கட்சிகள், இடைநிலைச் சாதிகளை சேர்ந்தவர்கள் அதிகாரத்திற்கு வந்த பின்னர் தலித்துகள் முன்னேற்றத்திற்கான திட்டங்களைக் குறைத்துக்கொண்டதாகக் கூறுகிறார்.

" திமுக ஆட்சிக்கு வந்த1967-க்கு முன், காமராசர் அமைச்சரவையில் அவருக்கு அடுத்த இடத்தில் ஒரு தலித் இருந்தார். இப்போது அந்த நிலை இல்லை. தற்போது தமிழகத்தில் தலித்துகள் அடைந்திருக்கும் முன்னேற்றம் அதன் தொடர்ச்சிதானே ஒழிய திராவிடக் கட்சிகளால் மட்டும் வந்ததல்ல," என்கிறார் ஸ்டாலின்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்