தண்ணீர் ஆபத்தில் இருக்கும் லட்சக்கணக்கான மக்களை காப்பாற்ற நம்பிக்கை தரும் மணிகள்

பிசின் மணிகள்
Image caption அர்செனிக் மற்றும் இதர தீங்கு விளைவிக்கும் பொருட்களை நீரில் இருந்து பிசின் மணிகள் நீக்கும்

பிசின் மணிகள் பார்ப்பதற்கு ஒரு பெரிய விஷயமாக இல்லாவிட்டாலும், வங்கதேசத்திலும், இந்தியாவின் சில பகுதிகளிலும் ஆபத்தில் இருக்கும் லட்சக்கணக்கான மக்களை இவற்றால் காப்பாற்ற முடியும்.

வங்கதேசத்தில் தண்ணீரில் ஆர்செனிக் நச்சுத்தன்மையால் 20 மில்லியன் மக்கள் ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது.

"மனித வரலாற்றிலேயே, அதிகளவு மக்களை பாதிக்கும் நச்சுத்தன்மை" என்று உலக சுகாதார அமைப்பு இதனை கூறுகிறது.

ஏற்கனவே இந்த நச்சுத்தன்மையால் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

வங்கதேசம் முழுவதும் 1940 ஆம் ஆண்டு முதல் மில்லியன் கணக்கான "குழாய் கிணறுகள்" தோண்டப்பட்டன.

செலவு குறைந்த பாக்டீரியா இல்லாத நீர் வழங்குவதற்கான வழிவகையாக 1970-களில் இருந்து அரசும், லாப நோக்கற்ற அமைப்புகளும் எளிமையான பம்புகளை நாடு முழுவதும் வழங்கின.

இருப்பினும் 1980-களில் ஆர்செனிக் நச்சு தொடர்பான பாதிப்புகள் வெளிப்பட ஆரம்பித்தன.

ஆர்செனிக்கை பார்க்க முடியாது, மணமற்ற அதனை நுகரவும் முடியாது; தோலில் புண்கள் ஏற்படுவதுதான் நச்சு பாதிப்பின் முதல் அறிகுறி.

இந்த நச்சு பாதித்தால் பலவிதமான இதயநோய்கள், புற்றுநோய் தோன்றலாம்.

மேலும், இதன் வெளிப்புற அறிகுறிகள் தொழுநோய் போல இருக்கும். இதனால் பாதிக்கப்பட்டவர்களும், அவர்களது குடும்பத்தினரும் உள்ளூர் சமூகத்தால் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

அதிக விலை

Image caption ஆர்செனிக் நச்சால் பாதிக்கப்பட்ட சியாடன் நெஸாவின் தோலில் புண்கள் ஏற்பட்டுள்ளன

ஆர்செனிக் நச்சால் பாதிக்கப்பட்ட சியாடன் நெஸாவின் தோலில் புண்கள் ஏற்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 50 வயதான சியாடன், இந்த நோய், தனது குடும்பத்தினர் அனைவரையும் பாதித்திருப்பதாக தெரிவித்தார்.

"இந்த கிணற்றினால், என் முழு தோலிலும் கருப்பு திட்டுக்கள் ஏற்பட்டுள்ளன" என்று அவர் கூறுகிறார்.

"என் குழந்தைகளைப் பற்றி கவலைப்படுகிறேன், ஏனென்றால் அவர்களை திருமணம் செய்துக்கொள்ள யாரும் தயாராக இல்லை." என்கிறார்.

கிணறுகளை மாற்றுவதற்கு அரசு முயற்சிகள் எடுத்த போதிலும், பல கிராமப்புறங்களில் இவையே தண்ணீர் தேவைக்கான முக்கிய ஆதாரமாக உள்ளன.

அதிலும் குறிப்பாக பல குடும்பங்கள் சொந்தமாகவே குழாய் கிணறுகளை தோண்டியெடுத்துள்ளன. வங்கதேசத்தில் ஆர்செனிக் நச்சுத்தன்மையினால் ஏற்படுகின்ற நோய்களால் ஆண்டுதோறும் 43,000 பேர் உயிரிழக்கின்றனர்.28 வயதான மின்ஹஜ் செளத்ரி அமெரிக்காவில் வளர்ந்தவர், வங்கதேசத்தில் வசிக்கும் தனது குடும்பத்தினரைப் பார்க்க பள்ளி விடுமுறையில் வந்தார்.

"அமெரிக்காவில் தண்ணீரால் உயிரிழப்பு ஏற்படும் என்று நினைத்துக் கூட பார்க்கமுடியாது. ஆனால் வங்கதேசத்தில் உயிரிழக்கும் ஐந்து பேரில் ஒருவரின் மரணத்திற்கும், பாதுகாப்பற்ற குடிநீருக்கும் தொடர்பு இருந்ததை பார்த்து அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் ஏற்பட்டது" என்று சௌத்ரி கூறுகிறார்.

அவரது தாத்தா தண்ணீருடன் தொடர்புடைய ஒரு நோய் காரணமாக இறந்ததையடுத்து, இதற்கு ஒரு நடவடிக்கை எடுக்க முடிவு செய்தார்.

Image caption மின்ஹஜ் செளத்ரி

ஒரு குறிப்பிட்ட வகை பிசின் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவரும், அதை ஏற்கனவே இந்தியாவில் தீவிரமாக செயல்படுத்திவந்தவருமான டாக்டர் அருப் கே. சென்குப்தாவுடன் இணைந்து, 2013 ஆம் ஆண்டில் 'டிரிங்க்வெல்' என்ற நிறுவனத்தை சௌத்ரி உருவாக்கினார்.

அர்செனிக் மற்றும் இதர தீங்கு விளைவிக்கும் பொருட்களை நீரில் இருந்து பிசின் நீக்கும். அந்த பிசினை பயன்படுத்தும் 'டிரிங்க்வெல்', சுத்திகரிப்பு வடிகட்டிகளின் தண்ணீரை செலுத்தி, அர்செனிக் மற்றும் இதர தீங்கு விளைவிக்கும் பொருட்களை நீக்குகிறது.

'டிரிங்க்வெல்' தொழில்முனைவோரால் உள்ளூரில் தண்ணீர் விற்கப்படுகிறது. அதிலிருந்து கிடைக்கும் பணம், 'டிரிங்க்வெல்' அமைப்பை பராமரிக்க உதவுகிறது.

இடத்தை பொருத்து தண்ணீருக்கு விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 20 லிட்டர் (0.22 கேலன்கள்) தண்ணீருக்கான ஒரு மாத சந்தா, $ 0.05 (4p) மற்றும் $ 0.12 (9p)க்கும் இடையில்தான் நிர்ணயிக்கப்படும்.

தொழில் முனைவோருக்கான வாய்ப்பு

அனைத்து நீர்த் திட்டங்களிலும் 30% முதல் 50% திட்டங்கள் தோல்வி அடைந்ததற்கு காரணம், பெரியளவிலான முதலீடுகளுக்குப் பிறகும் அவற்றை முறையாக பராமரிக்காததுதான் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.

Image caption டிரிங்க்வெல்லின் முதல் தொழிற்சாலையை தொழில்முனைவர் ஹபிபுர் ரகுமான் நடத்தி வருகிறார்.

அர்செனிக் நஞ்சை சமாளிப்பதில் சமூக தொழில் முனைவோர் பங்கு வகிக்கமுடியும் என்று வங்கதேசத்தின் நீர் உதவி அறக்கட்டளையின் இயக்குநரான டாக்டர் கைரேல் இஸ்லாம் நம்புகிறார்.

செயல்படுத்துவது மற்றும் பராமரிப்புதான் முக்கியமான பிரச்சனையாக இருப்பதாக, டாக்டர் இஸ்லம் பிபிசியிடம் கூறினார்.

செயல்பாடு மற்றும் பராமரிப்பு செலவுகளும் உள்ளடங்கியதாக டிரிங்க்வெல் இருப்பதால், இதுபோன்ற அமைப்பே "இந்த நாட்டின் தேவை" என்கிறார்.

முதல் டிரிங்க்வெல் தொழிற்சாலை 2015-ஆம் ஆண்டில் மாணிக்கஞ்ச் மாவட்டத்தில் நீர் விநியோகத்தைத் தொடங்கியது. தற்போது, அந்த ஓர் ஆலை, 750 தினசரி வாடிக்கையாளர்களையும், நாளொன்றுக்கு 150,000 லிட்டர் (32,995 கேலன்கள்) நீரையும் வழங்குகிறது.

இந்த நெட்வொர்க் நாடு முழுவதும் மேம்படுத்தப்பட்டு, அவ்வப்போது பள்ளிகளுக்கு சென்று, மாணவர்களின் உணவுக்காக பாதுகாப்பான குடிநீரை வழங்குகிறது.

அதைப் பற்றி குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவிக்கின்றனர். இப்படியே அங்கிருந்து சமூகம் முழுவதும் வாய்வழியாக இச்செய்தி பரவுகிறது.

இந்தியாவிலும், வங்கதேசத்திலும் தற்போது 30 டிரிங்க்வெல் சுத்திரிப்பு ஆலைகள் இருக்கின்றன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அவை சேவைகளை வழங்குகின்றன.

இது டிரிங்க்வெல்லின் தொடக்கம் மட்டுமே என்று செளத்ரி நம்புகிறார். ஆசியா முழுவதிலும் கோடிக்கணக்கான மக்களை சென்றடைய முடியும் என்றும் அவர் நம்புகிறார்.

இத்தொழில்நுட்பத்தை நாடெங்கிலும் கொண்டுசெல்வது பற்றி, அவர் ஏற்கனவே வங்கதேச அரசிடம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

தங்களுடைய தொழில்முனைவோர் தொடரமைப்பில் மக்களும் இணைந்து, பராமரிப்புப் பணியில் ஈடுபட்டால், `எப்போதும்" சுத்தமான நீரை வழங்க முடியும் என்று சௌத்ரி நம்புகிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்

தொடர்புடைய தலைப்புகள்