இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பாகிஸ்தான் கிராமம் - மத நல்லிணக்கத்தின் அடையாளம்

மித்தியில் உள்ள இந்து கோவில்
Image caption மித்தியில் உள்ள இந்து கோவில்

மிகவும் கொடுமையான வன்முறைகள் நடைபெற்றதாக, பெரும்பாலும், செய்திகள் மூலம் கூறப்படும் பாகிஸ்தான் நாட்டில், இன அமைதிக்கான எடுத்துக்காட்டாக இருக்கிறது இந்த பாலைவன கிராமம்.

மித்தி, இஸ்லாமியர்களை விட இந்துக்கள் அதிகம் வசிக்கும் இடம்; கணக்கில் கொள்ளத்தக்க அளவு குற்றங்களற்றதாகவும், இரு சமூகத்தின் அமைதியான உறவை கொண்டுள்ளதாகவும் இருக்கிறது.

பாகிஸ்தானின் தார் பாலைவனத்தின் நடுவில் உள்ள தூரத்து கிராமம் இந்த மித்தி.

இது மிகவும் கடினமான விரோதமான நிலப்பரப்பாக இருந்தாலும், இந்த பாலைவனமும், நகரமும் அதற்கே உரிதான அழகைக் கொண்டுள்ளது.

சிந்து பகுதியில் உள்ள தார்பர்கர் மாவட்டத்தின் ஒரு கண்கவர் விஷயமே அங்கு இந்து மற்றும் முஸ்லிம் குடியிருப்பு வாசிகளுக்கு இடையேயான அமைதியான உறவு தான்.

அவர்கள் நூற்றாண்டுகளாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவதோடு, வெளியே நடக்கும் விஷயங்கள் அவர்களின் உறவில் விரிசலை உருவாக்காமல் பார்த்துகொள்கின்றனர்.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து 280 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மித்தி. பாகிஸ்தானில், முஸ்லிம்களை விட அதிகமாக இந்துக்கள் இருக்கும் ஒருசில இடங்களில் இதுவும் ஒன்று. உள்ளூர் அரசின் கணக்கின்படி, மித்தியில் 87 ஆயிரம் மக்கள் வசிப்பதோடு, அதில் 70 சதவிகிதம் பேர் இந்துக்களாக உள்ளனர்.

`எந்த ஒரு மதரீதியான, கலாச்சார ரீதியான பண்டிகையாக இருந்தாலும் நாங்கள் ஒன்று கூடுவோம். இந்துக்கள் தீபாவளி கொண்டாடும் போது எங்களை அழைப்பார்கள். நாங்கள் ஈகைத்திருநாளை கொண்டாடும் போது அவர்களை அழைக்கிறோம் ` என்று நினைவு கோருகிறார், முன்னாள் ஆசிரியரும், நாடக தயாரிப்பாளருமான ஹஜி முகமது டால். முகரம் நாட்களில் வழிபாடுகளில் பங்கெடுப்பதோடு, சில நேரங்களில் முஸ்லிம்களோடு சேர்ந்து இந்துக்கள் நோண்பும் இருப்பார்கள் என்கிறார் அவர். இந்துக்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாக, இந்த நகரில் முஸ்லிம்கள் மாட்டு இறைச்சிகளை உண்பதில்லை.

Image caption ஹஜி முகமது டால்

`1971இல் இந்திய விமானப்படை மித்தி வரை வந்த போது, நாங்கள் இரவோடு இரவாக இங்கிருந்து வெளியேறினோம்` என்கிறார் ஹஜி.

`எங்களோடு வசித்த அனைத்து இந்துக்களும் அதற்காக மிகவும் வருத்தம் அடைந்ததோடு, மீண்டும் அவர்களோடு வந்து வசிக்கும்படி எங்களை அழைத்தனர்.`

2001ஆம் ஆண்டு, மித்தியில் உள்ள ஜாமியா மஸ்ஜீத்தை அருகில் உள்ள நிலங்களில் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டது. `அந்த வீட்டில் ஒரு இந்து பெண்மணி வசித்து வந்தார்` என்று அவர் நினைவுகோர்கிறார், ` அவர் தானாகவே என்னிடம் வந்து, மசூதிக்காக அந்த இடத்தை எடுத்துகொள்ள சொன்னார். தொண்டிற்கு பரிசாக தான் அந்த நிலத்தை மகிழ்ச்சியுடன் அளிப்பதாக தெரிவித்தார்.`

மாமா விஷான் என்று அறியப்படும் விஷான் தாரி, தார்பர்கரில் மிகவும் விரிவான ரத்த வங்கியை நடத்துகிறார். `இஸ்லாமியர்கள் என்னை மிகவும் அதிகமாக மதிக்கிறார்கள். மேலும், அவர்கள் எந்த பாகுபாடும் இல்லாமல் எங்களிடம் ரத்தம் அளிக்கின்றனர்` என்கிறார்.

Image caption கம்லா பூணம்

2015ஆம் ஆண்டு, மிகவும் புகழ்பெற்ற சிந்தி பாடகரான, சாதிக் ஃபகீரின் இறப்பை அவர் நினைவுகோருகிறார். ` அன்று ஹோலி பண்டிகை நாள். யாருமே வண்ணங்களை பூசி கொண்டாடவில்லை. அது மித்தி நகரமே துயரத்தில் இருந்ததை போல இருந்தது`.

பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாத்தில் இருந்து, மித்திக்கு குடியேறியுள்ளார், தனியார் பள்ளி தலைமை ஆசிரியையான கம்லா பூனம். `இங்குள்ள மக்கள் ஆரம்பம் முதலே நல்லிணக்கத்துடன் வாழ்கின்றனர். இங்குள்ள முதியவர்கள், அமைதியான பாரம்பரியத்தை தொடர்ந்து உயிர்வாழ வைத்துள்ளனர். சில நேரங்களில், இங்குள்ள இளைஞர்கள் எல்லையை மீறினாலும், இரு மதத்தை சேர்ந்த பெரியவர்களும் அவர்களை ஒழுங்குபடுத்துகின்றனர்` என்கிறார்.

கலவரத்தால் கிழிக்கப்படும் ஒரு பகுதிக்கு தனித்துவமான எடுத்துக்காட்டாக உள்ளது மித்தி. ஹஜி முகமது டால் கூறுவது போல, ` அன்பை பரப்புவது எப்படி என்பதை மற்றவர்கள் மித்தியிடம் கற்றுக்கொள்ள வேண்டும்`.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்

தொடர்புடைய தலைப்புகள்