சமூகதளத்தில் கொண்டாட்டப் பதிவு; சுகவீனம் என இழப்பீடு கோரி வழக்கு- மாட்டிக்கொண்ட தம்பதி

சுற்றுலா சென்றபோது குழந்தைகளுக்கு சுகவீனம் ஏற்பட்டதாகக் கூறி, ஏற்பாடு செய்த சுற்றுலா நிறுவனத்திடம் பெரிய இழப்பீடு கோரிய தம்பதி, சமூக தளத்தில் சுற்றுலாவை கொண்டாடியதாகப் போட்டப் பதிவால் மாட்டிக்கொண்டது. பொய்யாக இழப்பீடு கோரியதாக அவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கியுள்ளது நீதிமன்றம்.

படத்தின் காப்புரிமை THOMAS COOK

தங்களுடைய விடுமுறை சுற்றுலா, "வெயில், சிரிப்பு மற்றும் வேடிக்கை" நிறைந்து இருந்ததாக சமூக ஊடகங்களில் பெருமையாக இந்த தம்பதியர் தெரிவித்து இருந்தது அவர்களுக்கு வினையாக முடிந்தது.

53 வயதான டெபோரா பிரிட்டெனும், அவரது துணைவி 43 வயதான பால் ராபர்ட்ஸூம் தங்களுடைய தவறை இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் கிரவுண் நீதிமன்றத்தில் ஒப்பு கொண்ட பின்னர், சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு மயோர்காவுக்கு விடுமுறையில் சென்றிருந்தபோது, தங்களின் இரண்டு குழந்தைகளும் நோய்வாய்ப்பட்டதாக கூறி இவர்கள் 20 ஆயிரம் பவுண்ட் இழப்பீடு கோரியிருந்தனர்.

பிரிட்டனைச் சேர்ந்த சுற்றுலா செல்வோர் குடல் நோய் ஏற்பட்டதாகக் கூறி இழப்பீடு கோருவது அதிகரித்துள்ளதாக நீதிபதி டேவிட் ஆப்ரே கூறினார்.

பிரிட்டெனுக்கு 9 மாதமும், ராபர்ட்ஸுக்கு 15 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

ஏமாற்று வேலை

வாலசேயை சேர்ந்த விர்ராலில் நடைபெற்ற தனிப்பட்ட வழக்கு விசாரணையில் தங்கள் மீதான நான்கு குற்றச்சாட்டுக்களையும் இருவரும் ஒப்பு கொண்டுள்ளனர். தாமஸ் குக் சுற்றுலா நிறுவனத்தால் இந்த வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

பிரிட்டெனின் மகள் சார்லின் உள்பட குடும்ப உறுப்பினர்கள் மீதும் முதலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு குற்றச்சாட்டுக்கள் பின்னர் கைவிடப்பட்டன. இந்த தம்பதியருக்கு சிறை தண்டனை பெற்றவுடன் சார்லின் நீதிமன்றத்தில் கூச்சல் எழுப்பினார்.

இழப்பீடு கோரி தொடர்ந்த வழக்கில் இந்த தம்பதி வென்றிருந்தால் இழப்பீடு மட்டுமல்லாமல் வழக்குச் செலவாகவும் சுற்றுலா நிறுவனம் 28,000 பவுண்டு செலவிட்டிருக்கவேண்டும் என்று கூறப்பட்ட குற்றச்சாட்டையும் நீதிமன்றம் விசாரித்தது.

படத்தின் காப்புரிமை PA

இந்த தம்பதியின் இழப்பீடு கோரிக்கை "முற்று, முழுதாக ஏமாற்று வேலை" என்று நீதிபதி ஆப்ரே தெரிவித்துள்ளார்.

"தொடக்கம் முதல் முடிவு வரை அவர்கள் ஏமாற்றி வந்துள்ளனர். இரண்டு விடுமுறை சுற்றுலாக்களின்போது, தங்களும், தங்களுடைய குழந்தைகளும் சுகவீனம் அடைந்து துன்புற்றதாக அவர்கள் இருவரும் பொய் கூறியுள்ளனர்" என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

"அவர்கள் முற்றும் முழுதாக பொய் கூறியுள்ளனர்" என்றார் ஆப்ரே.

"பேராசையே காரணம்"

கடந்த ஆகஸ்ட் மாதம் செய்யப்பட்ட இந்த இழப்பீடு கோரிக்கை மிகவும் திட்டமிட்டு, ஆலோசனைக்கு பின்னர் வழக்காக போடப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

"ஏன்? பேராசை. ஒன்றும் நடைபெறாத நிலையிலும் எதையாவது சம்பாதித்து கொள்ள விருப்பம்" என்று நீதிபதி கூறியுள்ளார்.

"நேர்மையற்ற இழப்பீடு கோரிக்கை வைப்போர், அவ்வாறு கோரியுள்ளது தவறு அறிய வந்தால் உடனடியாக சிறையில் அடைக்கப்பட வேண்டும்" என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

"அமைப்பை ஏமாற்றும் சிலரிடம் இருந்து, நம்முடைய சுற்றுலாவையும், வாடிக்கையாளர்களையும் பாதுகாப்பதற்கு நிலைப்பாடு ஒன்றை எடுக்க வேண்டியதாயிற்று" என்று 'தாமஸ் குக்' நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :