செலவுக்கு என்ன செய்வாய்?: இந்திரா காந்தியைக் கேட்ட ஜெயபிரகாஷ் நாராயண்

1975 ஜூன் மாதம் 25ஆம் தேதி இரவு ஒன்றரை மணி. ஜே.பியை கைது செய்ய வாரண்டுடன் போலிசார் காந்தி அமைதி அறக்கட்டளைக்கு (Gandhi Peace Foundation) வந்தார்கள்.

Image caption ஜெய்பிரகாஷ் நாராயணுடன் முன்னாள் பிபிசி செய்தியாளர் மார்க் டலி

"ஜே.பி நீண்ட நேரம் கழித்தே உறங்கச் சென்றார். அடுத்த நாள் அதிகாலைய பாட்னா செல்ல வேண்டியிருப்பதால் மூன்று-நான்கு மணிக்கே விழித்துக் கொள்வார். எனவே சிறிது நேரம் பொறுத்திருந்தால் அவரே எழுந்துவிடுவார், அவரது உறக்கத்தை கலைக்கவேண்டாம்," என்று காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்தார் அறக்கட்டளையின் செயலாளர் ராதாகிருஷ்ணன்.

கோரிக்கையை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் காத்திருந்தனர். அவர்கள் ஜே.பியை அழைத்துக் கொண்டு செல்வதற்குள் இந்தத் தகவல் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்று ராதாகிருஷ்ணன் முயற்சிகளை மேற்கொண்டார்.

மொரார்ஜி தேசாயை ராதாகிருஷ்ணன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, அவரைக் கைது செய்யவும் போலிசார் அங்கு சென்றிருப்பது தெரிய வந்தது.

மூன்று மணிக்கு ராதாகிருஷ்ணனின் அறைக்கு வந்த போலிசார், "ஜே.பி எழுந்துவிட்டாரா? அவர் ஏன் இன்னமும் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்படவில்லை என்று வயர்லெஸில் கேட்கிறார்கள், இதற்கு மேலும் காத்திருக்க முடியாது," என்று கூறினார்கள்.

டாக்ஸியில் வந்த சந்திரசேகர்

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ஜே.பியின் அறைக்கு பூனைபோல் சப்தமின்றி நடந்து சென்ற ராதாகிருஷ்ணன், தயக்கத்துடன் அவரை எழுப்பி, போலிசார் கைது செய்ய காத்திருக்கும் தகவலைச் சொன்னார்.

Image caption பிபிசி ஸ்டூடியோவில் ஜெய்பிரகாஷ் நாராயண்

அறைக்குள் ஒரு போலிஸ் அதிகாரி நுழைந்து, "சாரி சார், உங்களை கைது செய்ய வந்திருக்கிறோம் என்று சொன்னதும், தயாராக அரை மணி நேரம் அவகாசம் கொடுங்கள்," என்று கேட்டுக்கொண்டார் ஜே.பி.

ஜே.பியின் நலம் விரும்பிகள் ஓரிருவர் வந்து சேரும் வரை ஜே.பியை அங்கேயே இருக்க வைக்க விரும்பிய ராதாகிருஷ்ணன் சாக்குபோக்கு சொல்லி காலம் கடத்தினார். ஜே.பி தயாரானதும், தேநீர் அருந்திச் செல்லுமாறு கூறினார்.

தேநீர் அருந்துவதில் இரண்டு நிமிடங்கள் கரைந்தன. அதற்கு மேல் தாமதப்படுத்த வாய்ப்பு எதுவும் கிட்டவில்லை. ஜே.பியை அழைத்துக் கொண்டு காவல் துறை வாகனம் கிளம்பிய சில கணங்களில் அசுர வேகத்தில் அங்கு வந்த டாக்ஸியில் இருந்து சந்திரசேகர் குதித்து இறங்கினார்.

படத்தின் காப்புரிமை SHANTI BHUSHAN
Image caption ராம்லீலா மைதானத்தில் பேரணி ஒன்றில் உரையாற்றும் ஜே.பி

கெடுவான் கேடு நினைப்பான்

ராதாகிருஷ்ணனும், சந்திரசேகரும் ஒரு காரில் ஜே.பி சென்ற வாகனத்தை பின்தொடர்ந்தார்கள். தில்லி நாடாளுமன்ற சாலை காவல்நிலையத்திற்கு ஜே.பி அழைத்துச் செல்லப்பட்டார்.

ஜே.பியை ஒரு நாற்காலியில் அமரவைத்த சற்று நேரத்தில் வேறு ஒரு அறையில் இருந்து வெளியில் வந்த காவல்துறை அதிகாரி ஒருவர் "உங்களை கைது செய்ய போலிசார் உங்கள் வீட்டிற்கும் சென்றிருக்கிறார்கள்," என்று சொன்னார்,

அதற்கு புன்னகையுடன் பதிலளித்த சந்திரசேகர், நான் இங்கேயே இருக்கிறேன், கைது செய்துக் கொள்ளுங்கள் என்று சொன்னதும் அவரும் கைது செய்யப்பட்டார்.

"எதாவது தகவல் சொல்ல விரும்புகிறீர்களா?" என்று ஜே.பியிடம் ராதாகிருஷ்ணன் கேட்டதும் கணப்பொழுது சிந்தித்த அவர், "கெடுவான் கேடு நினைப்பான்," என்று சொன்னார்.

Image caption பிபிசி ஸ்டூடியோவில் ராம் பஹாதூருடன் ரெஹான் ஃபஜல்

புவனேஷ்வர் உரையால் அதிகரித்த இடைவெளி

பிரபல பத்திரிகையாளரும், ஜே.பி இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றவருமான ராம் பஹாதுர் ராயின் கருத்துப்படி, ஜே.பிக்கும், இந்திரா காந்திக்கும் இடையிலான உறவு, சித்தப்பா-மகள் போன்றது. ஆனால் இந்திரா காந்தி மீது ஜே.பி ஊழல் குற்றச்சாட்டை முன்னெடுத்தபோது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட விலகல் பெரிய விரிசலானது.

1974 ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியன்று புவனேஷ்வரில் பேசிய இந்திரா, "பெரும் முதலாளிகளின் பணத்தில் வளர்ந்தவர்களுக்கு ஊழலைப் பற்றி பேசும் உரிமை இல்லை," என்றார்.

ஜே.பியை மிகவும் காயப்படுத்திய இந்த தாக்குதலால் அவர் கிட்டத்தட்ட 15 நாட்கள் வரை வேறு எந்த வேலையும் செய்யவில்லை. விவசாயம் உட்பட தனது வருவாய் ஆதாரங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் திரட்டி ஊடகங்களுக்கு அனுப்பியதோடு, அதன் ஒரு நகலை இந்திரா கந்திக்கும் அனுப்பினார்.

Image caption ஜெய்பிரகாஷ், மொரார்ஜி தேசாய், நானாஜி தேஷ்முக் மற்றும் ராய் நாராயண் (இடமிருந்து வலம்)

'மை டியர் இந்து'

ஜே.பியுடன் நெருக்கமாக இருந்த ரஜீ அஹ்மத் சொல்கிறார், "ஜே.பிக்கு ஆனந்த் பவனில் பயிற்சி அளிக்கப்பட்ட காலத்தில் இந்திரா காந்தி சிறுமி. நேருவுக்கு ஜே.பி எழுதிய கடிதங்கள் அனைத்திலும் எனதருமை சகோதரரே என்ற வாசகம் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும்."

"இந்திராவிற்கு எழுதிய கடிதங்களிலும், 'மை டியர் இந்து' என்றே ஜே.பி குறிப்பிட்டிருப்பார். இந்திராவால் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு அங்கிருந்து எழுதிய ஒரு கடிதத்தில் மட்டும், 'மை டியர் பிரைம் மினிஸ்டர்` என்று ஜே.பி எழுதியிருந்தார்."

பிரபாவதி-கமலா நேருவும் தோழிகள்

இந்திராவுக்கும் ஜே.பிக்கும் இடையிலான இடைவெளிக்கு ஜே.பியின் மனைவி பிரபாவதி தேவியின் மரணமும் ஒரு முக்கியமான காரணம் என்று சொல்கிறார் ராம் பஹாதுர் ராய்.

"ஜே.பியின் மனைவி பிரபாவதி தேவியே, இந்திராவுக்கும், ஜே.பிக்கும் இடையிலான நெருக்கத்திற்கு முக்கியமான காரணம் என்று நான் நினைக்கிறேன். இந்திராவும் பிரபாவதியை மிகவும் நேசித்தார். அதற்கு காரணம், இந்திராவின் தாய் கமலா நேருவும், பிரபாவதியும் நெருங்கிய தோழிகள். மனசோர்வு ஏற்படும்போது கமலா நேரு ஆறுதலுக்காக பிரபாவதியையே நாடுவார்," என்கிறார் ராய் பஹாதுர்.

"இந்திராவுக்கும் பிரபாவதிக்கும் இடையிலான உறவு மிகவும் நெருக்கமானது. கணவர் ஃபெரோஸ் காந்தியுடனான மணவாழ்வில் பிரச்சனைகள் எழுந்தபோது, ஜே.பியின் மனைவி பிராவதியைத் தான் தாயைப்போல் நினைத்து அனைத்து விஷயங்களையும் கலந்தாலோசிப்பார் இந்திரா."

படத்தின் காப்புரிமை PHOTO DIVISION
Image caption இந்திரா காந்தி

இந்திராவுக்கும், ஜே.பிக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளை களையத் தன்னால் முடிந்த முயற்சிகளைச் செய்தார் பிரபாவதி.

முன்னாள் பிரதமர் சந்திரசேகர் தனது சுயசரிதையில் "ஜே.பியைப் பார்க்க வேலூருக்குப் போகிறேன் என்று நான் இந்திராவிடம் சொன்னேன். அவர் என்ன பேசுவார் என்று எனக்குத் தெரியாது இதுபற்றி உங்கள் கருத்து என்ன? அவரிடம் பேச விரும்புகிறீர்களா அல்லது சண்டையிட விரும்புகிறீர்களா என்று கேட்டேன். அதற்கு நீங்கள் முதலில் பேசுங்கள், ஜே.பி விரும்பினால் நானும் பேசுகிறேன் என்று இந்திரா சொன்னார்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்திரா-ஜெய்பிரகாஷ் பேச்சுவார்த்தை

ஜே.பி மற்றும் இந்திரா காந்திக்கும் இடையிலான உறவை சுமூகமாக்க சந்திரசேகரைத் தவிர வேறு பலரும் முயற்சிகளை மேற்கொண்டனர். 1974 அக்டோபர் 29ஆம் தேதியன்று டெல்லி வந்த ஜே.பி, காந்தி அமைதி அறக்கட்டளையில் தங்கினார்.

படத்தின் காப்புரிமை SHANTI BHUSHAN

அங்கு சென்று அவரை சந்தித்த சந்திரசேகர் எழுதுகிறார், 'அவரை சந்தித்தபோது, ஒரு விஷயத்தை பற்றி உங்களிடம் பேச விரும்புகிறேன். யாரிடமும் இதைப்பற்றி பேசக்கூடாது அதிலும் உங்களிடம் குறிப்பாக இதைப்பற்றி பேசக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது என்று போஜ்புரி மொழியில் ஜே.பி என்னிடம் கூறினார்.

அதன் சாராம்சம் இதுதான், "பிகார் இயக்கத்தை பற்றிய பேச்சுவார்த்தைக்கு எனக்கு அழைப்பு அனுப்பிய இந்திரா, அதற்காக ஒரு முன்மொழிவையும் அனுப்பியிருக்கிறார். அதன் அடிப்படையில், அவர் என்னிடம் பேச விரும்புகிறார்."

"அந்த முன்மொழிவை படித்துப் பார்த்த நான், இது மிகவும் சரியாக இருக்கிறது. இதன் அடிப்படையில் நீங்கள் செயல்படலாம் என்றேன். அதற்கு மறுப்பு தெரிவித்த ஜே.பி, இந்திரா உங்களுடன் நெருக்கமாக இருக்கும் நிலையில், இதைப்பற்றி குறிப்பாக உங்களிடம் பேசவேண்டாம் என்று சொல்வதற்கு காரணம் என்ன என்று கேட்டார்".

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியை அன்போடு கட்டியணைத்த ஃபிடல் அரிய காணொளி

இதை உங்களிடம் கொடுத்தது யார் என்று கேட்டதற்கு, ஷியாம் பாபுவும், தினேஷ் சிங்கும் என்று பதிலளித்தார் ஜே.பி.

அப்படியென்றால், இந்த நடவடிக்கை புரிந்துணர்வுக்காக அல்ல, உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக வெளியுலகத்திற்கு காட்டும் கண்துடைப்பு நடவடிக்கை இது என்று சொன்னேன்." நோண்பும்

'நாட்டின் நலனே முக்கியம் ஜெய்பிரகாஷ்-ஜி'

1974 நவம்பர் முதல் தேதியன்று இந்திராவை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றார் ஜே.பி. "உங்கள் இருவருக்குமான தனிப்பட்ட பேச்சுவார்த்தை இது என்று ஜே.பியிடம் கூறப்பட்டிருந்த நிலையில், இந்திராவின் இல்லத்தில் ஜக்ஜீவன் ராம் அமர்ந்திருந்ததைப் பார்த்த ஜே.பி திகைத்து நின்றார்."

"பேச்சுவார்த்தைகளின்போது இந்திரா காந்திக்கு பதிலாக ஜக்ஜீவன் ராம் பேசினார். பீகார் சட்டமன்றத்தை கலைக்கவேண்டும் என்று வலியுறுத்திய ஜே.பி, கோரிக்கையை நியாயப்படுத்தினார். இறுதியில், பேச்சுவார்த்தை முடிவடைந்தபோது, நாட்டின் நலனை நினைத்துப்பாருங்கள் ஜே.பி-ஜி என்று மட்டுமே இந்திரா கூறினார்".

இது ஜே.பியின் இதயத்தைப் புண்படுத்தியது. "இந்து, நான் நாட்டின் நலனைத்தவிர வேறு எதையும் நினைத்ததில்லை," என்று கூறினார். இந்திரா தன்னை அவமானப்படுத்திவிட்டதாக அனைவரிடமும் கூறி வருத்தப்பட்டார் ஜே.பி. தேர்தலில் இந்திராவை நேரடியாக சந்திக்கப் போவதாக ஜே.பி கூறத் தொடங்கியதும் இதற்கு பிறகுதான்."

படத்தின் காப்புரிமை NEHRU MEMORIAL MUSEUM AND LIBRARY
Image caption மனைவி கமலாவுடன் ஜவஹர்லால் நேரு

கமலா நேருவின் கடிதங்களை திருப்பிக் கொடுத்தார்

டெல்லியில் சஃப்தர்ஜங் சாலையில் இருக்கும் இந்திரா காந்தியின் இல்லத்தில் இருந்து திரும்புவதற்கு முன், அவரிடம் ஒரு நிமிடம் தனியாக பேச விரும்புவதாக சொன்னார் ஜே.பி.

அப்போது, ஏறக்குறைய பழுப்பு நிறமாக மாறியிருந்த கடிதங்களின் தொகுப்பைக் கொடுத்தார். 1920 முதல் 1930 வரை இந்திராவின் தாயார் கமலா நேரு, ஜே.பியின் மனைவி பிரபாவதி தேவிக்கு எழுதிய கடிதங்கள் அவை. அந்த காலகட்டத்தில் இரண்டு தோழிகளின் வாழ்க்கைத் துணைவர்களும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்திரா காந்திக்கும், ஜே.பிக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமடைந்திருந்த நிலையிலும், தாயின் கடிதங்களை ஜே.பியிடம் இருந்து பெறும்போது இந்திரா சற்றே உணர்ச்சி வசப்பட்டார்.

படத்தின் காப்புரிமை SHANTI BHUSHAN
Image caption போட்கிளப்பில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய அன்றைய பிரதமர் இந்திரா காந்தி

பெருமதிப்பு பெற்ற இரு தலைவர்கள்

'கொள்கை விஷயங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம். அவருக்கு சிறிது மரியாதை கொடுங்கள்' என்று இரு தரப்பினருக்கும் இடையில் சமாதான முயற்சிகளில் ஈடுபட்ட காந்தி அமைதி அறக்கட்டளையின் சுகத் தாஸ் குப்தா கூறியதாக, இந்திரா காந்தியின் செயலாளராக பணிபுரிந்த பி.என் தர், 'இந்திரா காந்தி, தி எமர்ஜென்சி அண்ட் இண்டியன் டெமாக்ரஸி' தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

"நேரு பிரதமராக இருந்தபோது, அவர் காந்திக்கு அளித்தது போன்ற மரியாதையை பிரதமரான பிறகு இந்திரா காந்தி தன்னை மதிப்பார் என்பது ஜே.பியின் எண்ணம் என்று ராதாகிருஷ்ணாவும், தாஸ்குப்தாவும் கருதினார்கள்" என்று பி.என் தர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஜே.பி மீது இந்திராவுக்கு மரியாதை இருந்தாலும், அவரது கொள்கைகள் ஏற்புடையதாக இல்லை என்பதையும் பி.என் தர் பதிவு செய்திருக்கிறார்.

"நம்பமுடியாத விடயங்களுக்கு அதிக மதிப்பளிக்கும் கொள்கையை கொண்டவர் ஜே.பி என்பதே இந்திரா காந்தியின் கருத்தாக இருந்தது. மாறுபட்ட எண்ணங்களை கொண்டிருந்த இரு பெரும் தலைவர்களுக்கும் இடையே பொதுவான அரசியல் நிலைப்பாடு உருவாவது கடினம் என்ற நிலை உருவானது."

இந்திராகாந்தியின் பணத்தை திருப்பிக்கொடுத்த ஜே.பி

மேலும் ஒரு சம்பவம் இருவருக்கும் இடையிலான உறவை மேலும் சிக்கலாக்கியது. ஜே.பியின் டயாலிசிஸ் சிகிச்சைக்கான சாதனத்தை வாங்குவதற்காக நிதியுதவி தேவை என்று காந்தி அமைதி அறக்கட்டளையின் தலைவர் ராதாகிருஷ்ணன் நாட்டு மக்களிடமும், வெளிநாடுவாழ் இந்தியர்களிடமும் கோரிக்கை வைத்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மகன் சஞ்சய் காந்தியுடன் இந்திரா காந்தி

"ராதாகிருஷ்ணனின் ஆலோசனைப்படியும், என்னுடைய சம்மதத்துடனும் இந்திரா காந்தி, ஜே.பியின் சிகிச்சைக்காக ஒரு பெரும்தொகையை அனுப்பினார். ஜே.பியின் சம்மதத்தை பெற்ற ராதாகிருஷ்ணண் பணத்தை பெற்றுக் கொண்டதற்கான ரசீதையும் அனுப்பிவைத்தார்."

"ஆனால் ஜே.பியின் ஆதரவாளர்கள் பலருக்கு இது பிடிக்கவில்லை, அவர்கள் கொடுத்த அழுத்தத்தால் இந்திரா காந்தி அனுப்பிய பணத்தை ஜே.பி திருப்பி அனுப்பியது இருவரிடையேயான உறவு மேலும் சீர்கெட முக்கிய காரணமானது."

"இதுபோன்ற சிறிய விஷயங்களிலேயே தன்னுடைய ஆதரவாளர்களை ஜே.பியால் சமாளிக்க முடியாவிட்டால், மிக முக்கியமான விஷயங்களில் அவரிடம் இருந்து என்ன எதிர்பார்க்கமுடியும் என்ற கருத்தும் பரவலாக பேசப்பட்டது."

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
’’அடிமை மனநிலை கொண்டவர்களின் ஆட்சிதான் இங்கு நடந்து வருகிறது’’

பழிவாங்கும் அரசியலுக்கு விரோதம்

1977 மார்ச் மாதம் ஜனதா கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது, தனது மகன் சஞ்சய் காந்தியை டெல்லியின் துர்க்மான் கேட் பகுதிக்கு இழுத்துச் சென்று வலுக்கட்டாயமாக 'குடும்பக் கட்டுப்பாடு' அறுவைசிகிச்சை செய்துவிடுவார்கள் என்று இந்திரா காந்திக்கு அச்சம் இருந்ததாம்!

வெளியுறவு செயலர் ஜகத் மேஹ்தாவிடம் இதுபற்றி இந்திரா காந்தியின் நண்பர் புபுல் ஜெய்கர் தொலைபேசியில் பேசினாராம்.

இந்திரா காந்தியின் இந்த பயத்தைப் பற்றி பிரபல சுதந்திர போராட்ட தியாகியான லக்ஷ்மிசந்த் ஜெயின், ஜகத் மேஹ்தாவிடம் பேசியதும், அவர் ஜே.பியை சந்தித்தார். லக்ஷ்மி சந்த் ஜெயின் பிறகு திட்டக் குழு உறுப்பினராகவும், தென்னாப்பிரிக்காவில் இந்திய தூதரக உயரதிகாரியாகவும் பணியாற்றினார்.

லக்ஷ்மி சந்த் ஜெயின் தன்னுடைய சுயசரிதையான 'சிவில் டிஸ் ஒபீடியன்ஸ், டூ ஃப்ரீடம் ஸ்டர்க்ல்ஸ் வொன் லைஃப்' (Civil Disobedience, two Freedom Strongs One Life) இதைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். இதைக் கேட்ட ஜே.பி வருத்தப்பட்டார். இந்திரா காந்தியை அவருடைய இல்லத்திற்கு சென்று பார்த்து ஆறுதல் அளிக்கலாம் என்று நினைத்தார். இந்திராவின் வீட்டிற்கு சென்ற ஜே.பி, அவருடன் தேநீர் அருந்தினார்.

இந்த சந்திப்பின்போது, இந்திரா காந்தியின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகவில்லை என்று ஜே.பி இந்திராவுக்கு உணர்த்தியதாக ராம் பஹாதுர் ராய் கூறுகிறார். இது பழிவாங்கும் அரசியலில் ஈடுபடவேண்டாம் என்று என்று ஜனதா கட்சித் தலைவர்களுக்கு ஜே.பி கொடுத்த குறிப்பாக கருதப்பட்டது.

ஜே.பியின் வார்த்தைகளை ஜனதா கட்சித் தலைவர்கள் பின்பற்றவில்லை என்பது வேறு விஷயம். "இப்போது நீ பிரதமராக இல்லையே, செலவுகளை எப்படி எதிர்கொள்வாய்?" என்று ஜே.பி இந்திராவிடம் கேட்டதாக ராய் சொல்கிறார்.

"தந்தையின் புத்தகங்களுக்கு கிடைக்கும் ராயல்டியைக் கொண்டு வாழ்க்கையை நடத்துவேன் என்று இந்திரா பதிலளித்தார். இருந்தபோதிலும், மொரார்ஜி தேசாய் மற்றும் சரண் சிங்கிடம் இந்திராவிற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கவேண்டாம் என்று ஜே.பி கேட்டுக்கொண்டார்."

Image caption பிபிசி ஸ்டூடியோவில் குல்தீப் நய்யர்

பாட்னாவில் கடைசி சந்திப்பு

சில நாட்களிலேயே ஜனதா கட்சியிடம் பிணக்குக் கொண்டார் ஜே.பி. அவர் உடல்நிலை சரியில்லாமல் பாட்னாவில் இருந்தபோதும் ஜனதா கட்சித் தலைவர்கள் ஜே.பியை கண்டுக்கொள்ளவில்லை.

ஜே.பியை பார்க்க பாட்னாவிற்கு செல்லுமாறு மொரார்ஜி தேசாயிடம் சொன்னபோது அதற்கு, "காந்தியை பார்க்கவே நான் ஒருபோதும் சென்றதில்லை, ஜே.பி அவரை விட பெரியவரில்லை" என்று அவர் பதிலளித்துவிட்டதாக பிரபல பத்திரிகையாளர் குல்தீப் நய்யர் கூறுகிறார்.

ஆனால் இந்திரா காந்தியோ, பிகார் மாநிலம் பெல்ச்சி மாவட்டத்திற்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் பாட்னா சென்று ஜே.பியை சந்தித்து நலம் விசாரித்தார்.

ஜே.பியின் இறுதிகாலத்தில் இந்திராவுடனான உறவுகள் சுமூகமாகிவிட்டதாக ரஜீ அகமத் கூறுகிறார்.

இருந்தபோதிலும், தனது அரசியல் எதிர்காலத்திற்காகவே இந்திரா காந்தி ஜே.பியை சந்தித்தார் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்திரா காந்தியின் நோக்கம் எதுவாயிருந்தாலும், மீண்டும் தனது அரசியல் வாழ்வை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்கு ஜே.பியுடனான சந்திப்பு இந்திரா காந்திக்கு உதவியது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்