முறையற்ற தேர்தல், உயிருக்கு ஆபத்து: அமெரிக்காவுக்கு தப்பிச் சென்ற கென்ய தேர்தல் அதிகாரி

ரோஸ்லின் அக்ம்பே படத்தின் காப்புரிமை Reuters
Image caption "என்னுடைய சொந்த நாட்டிலேயே அதுபோன்ற பயத்தை நான் உணர்ந்ததில்லை" என்று அக்ம்பே பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

கென்ய தேர்தல் ஆணையத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர், கென்யாவில் அடுத்த வாரம் நடைபெற உள்ள தேர்தலை நம்பிக்கைக்குரிய வகையில் நடத்த இயலவில்லை என்று கூறி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

ரோஸ்லின் அக்ம்பே கென்ய தேர்தல் ஆணையமானது அரசியல் "முற்றுகையின் கீழ்" இருப்பதாகவும், ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை அல்லது எந்த முடிவுகளையும் அதனால் எடுக்க இயலவில்லை என்றும் கூறியுள்ளார்.

தற்போது அமெரிக்காவிலுள்ள அக்ம்பே, தான் கென்யாவில் இருந்தபோது தனக்கு வந்த மிரட்டல்களை அடுத்து அவரின் பாதுகாப்பு குறித்து அஞ்சியதாக தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம், எதிர்க்கட்சி தலைவர் ரெயாலா ஒடிங்கா அக்டோபர் 26ம் தேதி நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதிலிருந்து விலகிக் கொண்டார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி நடந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி உஹுரு கென்யாட்டா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டாலும், அவரது வெற்றி ஒழுங்கற்ற மற்றும் சட்டவிரோதமானது என்பது கண்டறியப்பட்ட பிறகு அவரின் வெற்றியை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

நியூயார்க்கில் இருந்து பிபிசியின் நேர்காணலில் பங்கேற்ற அக்ம்பே, தேர்தல் கமிஷனின் தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் கிறிஸ் சாமிண்டோ என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்தலுக்கு முன்னர் "கொடூரமாக கொலை செய்யப்பட்டார்" என்றும் "உங்களுக்கு எதுவும் நடக்காது என்று நினைப்பது தற்கொலைக்கு சமம்" என்றும் அவர் கூறினார்.

"என்னுடைய சொந்த நாட்டிலேயே அதுபோன்ற பயத்தை நான் உணர்ந்ததில்லை" என்று அக்ம்பே பிபிசியிடம் மேலும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்