அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட பாக். தீவிரவாதி

கொராசனி படத்தின் காப்புரிமை Reuters

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் முக்கியமான பாகிஸ்தான் தீவிரவாதத் தலைவர் ஒமர் காலித் கொராசனி உயிரிழந்தார்.

அவரோடு சேர்ந்து மேலும் 9 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். ஜமாத்-உல்-அஹ்ரர் என்ற பெயருடைய பாகிஸ்தானி தலிபான் குழுவுக்குத் தலைவராக இருந்தார் கொராசனி.

அக்குழுவின் செய்தித் தொடர்பாளர் இதனைத் தெரிவித்தார்.

இவரது அமைப்பு, பாகிஸ்தானுக்குள் நடந்த பல வெடிகுண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் இருந்தது.

கடந்த ஒரு வாரத்தில் ஆளில்லா விமானத் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆப்கன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுவோர் உள்ளிட்ட 40 பேர் இத்தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.

அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் பாகிஸ்தான் வருகை தரவுள்ள நிலையில் கொராசனி கொல்லப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திவிட்டு ஆப்கானிஸ்தான் எல்லையில் பதுங்கிக்கொள்ளும் தீவிரவாதிகளைக் குறிவைத்துத்தாக்கும்படி அமெரிக்காவை பாகிஸ்தான் வலியுறுத்திவந்தது என ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption ஜமாத்-உல்-அஹ்ரர் பாகிஸ்தானில் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு வெடிகுண்டுத் தாக்குதல்.

கடந்த ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் ஒரு பூங்காவில் கிறிஸ்துவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 70 பேர் பலியாயினர். இத்தாக்குதலை தாங்கள்தான் நடத்தியதாகப் பொறுப்பேற்றது ஜமாத்-உல்-அஹ்ரர். குவெட்டாவில் உள்ள மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி 74 பேரைக் கொன்றதும் இந்த அமைப்புதான் என்ற குற்றச்சாட்டு உண்டு.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்