புதிய கொள்கையை உருவாக்கி அதிகாரத்தை குவிக்கும் ஷி ஜின்பிங்

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் தன் அதிகாரத்தை மேலும் வலுப்படுத்திக்கொள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங் தனக்கென ஒரு புதிய அரசியல் சித்தாந்தத்தை உருவாக்கியுள்ளார்.

படக்குறிப்பு,

மாவோ போன்று தமக்கென ஒரு பிம்பத்தை உருவாக்க ஷி ஜிங்பின் முயல்வதாக பலரும் கூறுகின்றனர்

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19-வது தேசிய மாநாட்டில் பேசிய மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் 'ஷி ஜின்பிங் சிந்தனைகள்' எனும் சொற்றொடரை பல முறை பயன்படுத்தினர்.

இந்த சித்தாந்தங்களை தொடர்ச்சியாக பேணும் நோக்கில், அடுத்த வாரம் இந்த மாநாடு நடந்து முடிவதற்குள் இவற்றை உள்ளடக்கி கட்சியின் அமைப்புச் சட்டம் திருத்தி எழுதப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

இது மட்டும் நடந்தால் மாவோ சே துங், டெங் ஷியாபிங் போன்ற தலைவர்களுக்கு நிகராக அவரும் இடம் பிடிப்பார்.

இது கட்சிக்குள் ஜின்பிங்கின் பேரதிக அதிகாரத்திற்கு வழிவகுக்கும் என்றும் கட்சியில் இருப்பவர்கள் அவருக்கு எதிர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நடைமுறை சாத்தியமற்றதாக்கிவிடும் என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

அடுத்த ஐந்தாண்டு காலம் யார் ஆட்சி செய்பவது, நாட்டை எவ்வாறு வழிநடத்துவது ஆகியவற்றை முடிவு செய்யும் இந்த மாநாட்டை தனது மூன்று மணி நேர உரையுடன், கடந்த புதனன்று தொடங்கி வைத்தார் ஷி ஜின்பிங்.

காணொளிக் குறிப்பு,

பசியால் தவிக்கும் பல்லாயிரம் ரோஹிஞ்சா குழந்தைகள்

புதிய சகாப்தத்திற்கான சீன கூறுகளை உள்ளடக்கிய, ஷி ஜின்பிங்கின் சோசியலிச சித்தாந்தையும், சீன சூழலுக்கு ஏற்ப மார்க்சிசத்தை ஏற்றுக்கொண்ட அவரது சமீபத்திய சாதனைகளையும் முக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் புகழ்ந்து பேசியதாக வியாழன்று சீன அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஷி ஜிங் பிங்கின் சகாப்தம் என்ன நிலையில் உள்ளது?

சீன அரசியல் மிகவும் ரகசியமாகவும், வெளிப்படைத்தன்மையற்றும் இயங்கக்கூடியது. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் கட்சி மாநாட்டில் ஒரே சொற்றொடரை தொடர்ந்து பலமுறை பயன்படுத்தினால் ஏதோ பெரிதாக நடக்கப்போகிறது என்று பொருள்.

"புதிய சகாப்தத்திற்கான சீன கூறுகளை உள்ளடக்கிய, ஷி ஜின்பிங்கின் சோசியலிச சித்தாந்ததம்" எனும் சொல் தொடர் ஷி ஜின்பிங்கின் உரை பற்றிய குழு விவாதங்களில் அதிகமாக இருந்தது. இப்போது இந்தத் தொடர் சீன ஊடகங்களில் மிகவும் பிரபலம்.

படக்குறிப்பு,

தற்போது நடக்கும் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் சுமார் 2000 பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்

கடந்த 20 ஆண்டுகளாக, ஷி ஜின்பிங்கிற்கு முன்பு பதவியில் இருந்த தலைவர்கள் செய்யத் தவறியதை ஷி செய்யபோவதற்கான வலுவான அறிகுறிகள் இவை. சீனாவை பெரும் மாற்றத்திற்கு உள்ளாக்கிய தலைவர்களின் பட்டியலில் அவரும் இடம் பிடிக்கப்போகிறார்.

சீனாவில் கம்யூனிஸ்ட் புரட்சி நடந்த பின்பு வந்த முதல் மூன்று தசாப்தங்கள் மாவோ சே தூங்கின் சகாப்தமாக இருந்தது. அதன் பின்பு டெங் ஷியாபிங்கின் சகாப்தமாக இருந்தது. இப்போது ஷி ஜின்பிங்கின் சகாப்தம் அறிவிக்கப்படும் நிலையில் உள்ளது.

இப்போது உருவாக்கப்பட்டுள்ள ஷி ஜின்பிங் கொள்கைகள், கம்யூனிச சித்தாத்தங்களைத் தவிர மனிதர்கள் இயற்கையுடன் இயைந்து வாழ்வது, சீன ராணுவம் மீது கம்யூனிஸ்ட் கட்சி முழு அதிகாரம் செலுத்துவது உள்ளிட்டவற்றையும் உள்ளடக்கியுள்ளன.

2012-இல் அவர் பதவிக்கு வந்தது முதல் கட்சியிலும், சீன சமூகத்திலும் தனது அதிகாரம் மற்றும் ஆளுமையைத் தக்கவைத்துக்கொள்ள முயன்று வருவதால் மாவோ போன்று தமக்கென ஒரு பிம்பத்தை உருவாக்க முயல்வதாக பலரால் குற்றச்சாட்டுக்கு ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் ஆட்சிக்கு வந்தது முதல் ஊழல் குற்றச்சாட்டில் உயர்ந்த பதவிகளில் இருந்த அலுவலர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். சிலர் இதற்கு அரசியல் உள்நோக்கம் இருப்பதாகக் கூறினாலும், 'பதவிச் சண்டை' எதுவும் கட்சிக்குள் இல்லை என்று ஷி மறுத்தார்.

ஆனால், அவர்கள் ஷி ஜின்பிங்கிற்கு எதிராக திட்டம் தீட்டியதால்தான் அவர்களில் பெரும்பாலனானவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று மூத்த அதிகாரி லியு ஷியூ வியாழனன்று கூறினார்.

போ ஷிலாய், ஷுவோ யோங்கங் , சுன் ஷென்காய் உள்ளிட்ட ஊழல்வாதிகள் கட்சி மற்றும் ஆட்சியைக் கைப்பற்ற சதி செய்ததால்தான் கைது செய்யப்பட்டனர் என்று அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :