1962 இந்திய-சீன போர்: எனது தோட்டா சீன சிப்பாயின் கண்ணை உரசிச் சென்றது

அக்டோபர் 19ஆம் தேதி இரவு, அன்று கோர்க்கா படைப் பிரிவினருடன் இருந்தேன். அடுத்த நாள் காலை ராஜ்புத் படைப் பிரிவினரிடம் செல்லவேண்டும் என்பது திட்டம். ஆனால் அடுத்தநாள், சீனர்களின் விருப்பப்படியே நடந்து கொள்ள வேண்டியதாயிற்று.

Image caption மேஜர் ஜெனரல் கே.கே.திவாரியுடன் பிபிசியின் ரெஹான் ஃபஜல்

அடுத்த நாள் காலை ராஜ்புத் படையினரிடம் நான் சென்றேன் ஆனால் ஜெனரலாக அல்ல, யுத்தக் கைதியாக! அக்டோபர் 20ஆம் தேதியன்று காலை துப்பாக்கிச் சூட்டின் சத்தத்தைக் கேட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்தேன்.

எனது பதுங்குக் குழியில் இருந்து வெளியே வந்தேன், அந்த உயரமான பகுதியில் சிக்னல் கிடைப்பதே கடினமாக இருக்கும் நிலையில், எப்படியோ சிரமப்பட்டு, தலைமைக்கு தகவல் கொடுக்க முயற்சித்தோம்.

தொலைபேசி தொடர்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் ரேடியோ சிக்னலின் மூலம் கடுமையான துப்பாக்கிச்சூடு நடைபெறும் தகவலை பிரிகேட் தலைமையகத்திற்கு தெரிவித்துவிட்டேன்.

அசாதாரண அமைதிக்குப்பின் துப்பாக்கிச் சூடு

சிறிது நேரத்தில் துப்பாக்கி சூடு நின்று அசாதரண அமைதி நிலவியது. சிறிது நேரத்திற்குப் பிறகு, மலைப்பகுதியின் உயரத்தில் இருந்து சிறிய ரக துப்பாக்கிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சூடு நடத்திக்கொண்டே எங்கள் பதுங்குக்குழிகளை நோக்கி சீன வீரர்கள் வந்தார்கள்.

பட்டாலியனைச் சேர்ந்த அனைவரும் என்னையும் அங்கே விருந்தினர்களாக வந்திருந்த இரண்டு சிக்னல் ஆட்களையும் விட்டுவிட்டு பின்னடைந்துவிட்டார்கள் என்பதும் அப்போதுதான் தெரியவந்தது.

எந்தவொரு சீன சிப்பாயையும் நான் அவ்வளவு அருகில் பார்த்தது கிடையாது. சூழ்நிலையின் தீவிரத்தால் இதயத்துடிப்பு எகிறியது. சீன சிப்பாய்களின் ஒரு குழு எங்களைத் தாண்டி இந்திய எல்லைக்குள் முன்னேறிச் சென்றது.

பிரிகேட் தலைமையகத்தை நோக்கிச் செல்லலாம் என்று பதுங்குக்குழியில் இருந்து வெளியேறும்போது, சீனத் தரப்பின் அடுத்த குழு மலையில் இருந்து இறங்குவதைக் கண்டு மீண்டும் உள்ளே சென்றோம்.

அவர்களும் முதல் குழுவினரைப் போன்றே இடைவெளிகள் விட்டு துப்பாக்கிச் சூட்டை நடத்திக் கொண்டே முன்னேறினார்கள். ஒவ்வொரு பதுங்குக்குழியையும் சோதனையிட்டுக் கொண்டே வந்த இரண்டாவது குழு, இந்திய வீரர்கள் யாரும் அங்கு பதுங்கி இருக்கக்கூடாது என்பதற்காக அவற்றின் மீது கிரானைட் குண்டுகளை வீசிக் கொண்டே சென்றது.

ஆறாக் காயங்கள், மாறா வடுக்கள்

அந்த காலகட்டத்தில், என்னிடம் 9 எம்.எம் பிரவுனிங் தானியங்கி கைத்துப்பாக்கி ஒன்று இருந்தது. எனது சடலத்தை இந்திய வீரர்கள் கண்டெடுக்கும்போது, அந்த துப்பாக்கியில் ஒரு தோட்டாக் கூட இருக்கக்கூடாது என்று முடிவு செய்துக்கொண்டேன்.

சூழ்நிலை எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் சீனர்களை எதிர்க்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

நாங்கள் இருந்த பதுங்குக்குழியை நோக்கி இரண்டு சீன சிப்பாய்கள் வந்தபோது, அவர்களை சரமாரியாக சுட்டேன். முதலில் இருந்தவனின் இடது கண்ணுக்கு மேற்புறமாக உரசிக் கொண்டு ஒரு தோட்டா சென்றது. அவன் அப்படியே சுருண்டு விழுந்துவிட்டான்.

அவன் கண்டிப்பாக இறந்திருப்பான். ஏனெனில் அவனிடமிருந்து எந்தவொரு சத்தமும் வரவில்லை, அசைவும் இல்லை. இரண்டாவது சிப்பாயின் தோளில் குண்டு துளைத்து அவனும் கீழே விழுந்தான்.

சில நொடிகளில் அடுத்த ஆபத்தை எதிர்கொண்டேன். கூக்குரலுடன் பல சீன வீரர்கள் எங்கள் பதுங்குகுழியை நோக்கி சுட்டுக்கொண்டே வந்தார்கள். என்னுடன் இருந்த சிக்னல்மேன் படுகாயமடைந்து வீழ்ந்தார்.

அவரின் உடலில் இருந்து மிகுந்த அழுத்தத்துடன் தண்ணீரைப் போல ரத்தம் வெளியேறியதை பார்த்த காட்சியை என்னால் மறக்கவே முடியவில்லை.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சீனா

எங்கள் பதுங்குக்குழியில் குதித்த இரண்டு சீன வீரர்கள் துப்பாக்கியால் தாக்கி என்னை வெளியில் இழுத்துச் சென்றார்கள். சிறிது தூரம் நடத்தி செல்லப்பட்ட பிறகு உட்காரச் சொல்லி உத்தரவிட்டார்கள்.

இதயத்தை துடிக்க வைத்த காட்சி

சிறிது நேரத்தில் அங்கு வந்த சீன ராணுவ அதிகாரி ஒருவர் சுமாரான ஆங்கிலத்தில் பேசினார். என்னுடைய தோள்பட்டையில் பொறிக்கப்பட்டிருந்த பதவியை குறிக்கும் அடையாள சின்னத்தைப் பார்த்த அவர், என்னை மிகவும் அவமரியாதையாக நடத்தினார்.

என் அருகிலேயே மயக்கமடைந்த நிலையில் ஒரு கோர்க்கா படைப்பிரிவின் சிப்பாய் இருந்தார். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த சிப்பாய், என்னை அடையாளம் கண்டுகொண்டு தண்ணீர் கோரினார்.

அவருக்கு உதவி செய்ய எழுந்த என்னை சீன அதிகாரி அடித்தான். முட்டாள் கர்னல், நீ கைதி, உட்கார், என்னுடைய உத்தரவில்லாமல் நீ நகர்ந்தாலும் சுட்டுக் கொன்றுவிடுவேன் என்று உரக்கச் சத்தமிட்டான்.

சிறிது நேரத்திற்குப் பிறகு 'நாம்கா ச்சூ' நதியின் அருகே ஒரு குறுகிய பாதையில் அணிவகுத்து நடத்திச் செல்லப்பட்டோம். முதல் மூன்று நாட்களுக்கு எங்களுக்கு உணவு கொடுக்கப்படவில்லை, பிறகு முதல் முறையாக வேகவைத்த அரிசி சாதமும், வறுத்த முள்ளங்கியும் உணவாக வழங்கப்பட்டது.

தனிமைச் சிறை, இருண்ட அறை

சென்யேவில் இருந்த போர்க் கைதி முகாமிற்கு அக்டோபர் 26ம் தேதி அழைத்து வரப்பட்டோம். முதல் இரண்டு நாட்கள் இருண்ட அறையில் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டிருந்தேன். அதன்பிறகு மிகவும் மோசமாக காயமடைந்திருந்த கர்னல் ரிக், நான் இருந்த இருண்ட அறைக்கு கொண்டுவரப்பட்டார். மோசமாக காயமடைந்த அவரைப் பார்த்தால் மிகவும் பாவமாக இருந்தது.

முகாமில் நாங்கள் நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டு, அதிகாரிகளும், சிப்பாய்களும் தனித்தனியாக தங்க வைக்கப்பட்டோம். அங்கிருந்த வெவ்வேறு சமையலறைகளில் சீனர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சில இந்திய வீரர்கள் கைதிகளுக்காக சமைக்க அனுமதிக்கப்பட்டனர்.

காலை உணவு ஏழு முதல் ஏழரை மணிக்குள் கொடுக்கப்படும். மதிய உணவு காலை பத்தரை முதல் பதினொன்றரை மணிக்குள்ளும், இரவு உணவு மாலை மூன்றரை மணிக்கும் கொடுக்கப்படும்.

நாங்கள் தங்க வைக்கப்பட்டிருந்த வீடுகளுக்கு கதவுகளோ, ஜன்னல்களோ கிடையாது. அவற்றை எரிப்பதற்காக சீனர்கள் பயன்படுத்தியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். நேரத்தை போக்குவதற்காக சிறை வைக்கப்பட்ட இடத்திற்குள்ளேயே நடந்துக் கொண்டிருந்தேன்.

நடுங்க வைக்கும் குளிர்

அங்கு கொண்டு செல்லப்பட்ட முதல் இரண்டு நாட்களும் இரவு நேரத்தில் கடுமையான குளிரால் உறைந்துபோனோம். அந்த இடத்தில் வைக்கோல் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவற்றை பயன்படுத்திக் கொள்ள சீனர்களிடம் அனுமதி கோரினோம். அதிர்ஷ்டவசமாக, எங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்பிறகு வைக்கோலை படுப்பதற்கான மெத்தையாகவும் போர்வையாகவும் பயன்படுத்தினோம்.

தவாங்கை கைப்பற்றிவிட்டதாக நவம்பர் 8 ம் தேதி சீனர்கள் சொன்னபோது, எங்கள் கவலை அதிகமானது. சண்டை நடப்பதே அதுவரை எங்களுக்கு தெரியாது!

1942 நவம்பர் நான்காம் தேதி ராணுவப் பணியில் சேர்ந்தவன் நான் என்பதை அவர்கள் எப்படியோ கண்டறிந்துவிட்டார்கள். எனவே 1962, நவம்பர் நான்காம் தேதியன்று பணியில் நான் சேர்ந்த இருபதாவது ஆண்டு நாளை கொண்டாடுவதற்காக ஒரு ஒயின் பாட்டிலுடன் ஒரு சீன அதிகாரி என்னிடம் வந்தார்.

இந்திய வீரர்களின் உணர்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்விதமாக, சிறப்பான நாட்களில் சிறப்பு உணவு வழங்கினார்கள், இந்திய திரைப்படங்களை திரையிடுவார்கள்.

எங்கள் முகாமில் மிகவும் அழகான ஒரு சீன பெண்மணி மருத்துவராக பணிபுரிந்தார். அவ்வப்போது எங்களை பரிசோதிக்க வந்த அந்த மருத்துவரின் அழகில் இந்திய போர்க் கைதிகள் அனைவருமே மயங்கினோம் என்றே சொல்லலாம்.

Image caption சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கொடி

செஞ்சிலுவை சங்கத்தில் இருந்து பொருட்கள்

டிசம்பர் மாத இறுதியில், செஞ்சிலுவை சங்கம் இந்திய போர் கைதிகளுக்கு இரண்டு பொட்டலங்களை அனுப்பியது. ஒன்றில், ஆடைகள், குளிருக்கு பயன்படுத்த கம்பளி ஆடைகள், மஃப்ளர், தொப்பி, காலணிகள் மற்றும் துண்டுகள் இருந்தன.

இரண்டாவது பொட்டலத்தில் உணவு பொருட்கள், இனிப்புகள், பால் டின்கள், ஜாம், வெண்ணெய், மீன், சர்க்கரை பாக்கெட்டுகள், மாவு, பயறுகள், உலர் பட்டாணி, உப்பு, தேநீர், பிஸ்கட், சிகரெட், விட்டமின் மாத்திரைகள் ஆகியவை இருந்தன.

நவம்பர் 16 அன்று குடும்பத்தினருக்கு கடிதம் எழுத அனுமதி கிடைத்தது. நான்கு லெப்டினன்ட் ஜென்ரல்களுக்கு மட்டும் தந்தி அனுப்ப அனுமதி கிடைத்தது. எங்கள் கடிதங்கள் தணிக்கை செய்தபிறகே அனுப்பப்படும் என்பதால் நாங்கள் விவரமாக எதையும் எழுத முடியவில்லை.

செஞ்சிலுவை சங்கம் மூலமாக எனக்கு சில கம்பளி ஆடைகளையும், உணவு பொருட்களையும் அனுப்புமாறு ஒரு கடிதத்தில் நான் எழுதியிருந்தேன். அந்த கடிதத்தில் நான் எழுதியிருந்ததை தெரிந்துக் கொண்ட என் நான்கு வயது மகள் ஆபா, அப்பா குளிரில் தவிக்கிறார், பசியுடன் இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டாளாம்!

இந்திய பாடல்களை சீனர்கள் தொடர்ந்து ஒலிபரப்புவார்கள். அவர்கள் தொடர்ந்து ஒலிக்கவிட்ட ஒரு பாடல் லதா மங்கேஷ்கர் பாடியது. 'எத்தனை நாள் இந்த புறத்தில் இருப்பேன்' என்ற பொருள் கொண்ட அந்த இந்தி மொழிப் பாடல் எனது குடும்பத்தினரின் நினைவையும், ஏக்கத்தையும் அதிகரித்தது.

Image caption கே.கே. திவாரி சீன சிப்பாய்களின் பெயரை இந்தியில் எழுதியிருக்கிறார்

பகதூர் ஷா ஜஃபரின் கஜல் பாடல்கள்

ஒரு நாள் எங்கள் முகாமுக்கு வந்த சீன பெண்மணி ஒருவர் பகதூர் ஷா ஜஃபரின் கஜல் பாடல்களை பாடியது எங்களது வியப்பளித்தது. எங்கள் சகா ரதனும், அந்த பெண்ணுடன் இணைந்து ஜஃபரின் பாடல்களை பாடினார்.

அந்த பாடல்கள், டெல்லியில் இருந்து ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்ட (இந்தியாவின் கடைசி முகலாயப் பேரரசர்) பிறகு ஜஃபர் எழுதிய பாடல்கள். உருது தெரிந்த அந்த பெண், லக்னெளவில் சிறிது காலம் வசித்திருக்கலாம் என்று கருதினேன்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
வெப்பக் காற்று பலூன், திரவம், மாவு - பெய்ஜிங்கில் தடை ஏன்?

சீனர்கள் ஊசிகளை கொண்டு (அக்குபஞ்சர்) சிகிச்சை செய்வதை நாங்கள் பார்த்தோம். நண்பர் ரிக்குக்கு கடுமையான தலைவலி என்னும் பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருந்தது, அதற்கு சிகிச்சையும் தொடர்ந்தது. அவரின் தலைவலிக்கு காரணம் சிகிச்சையளித்தது நான் முன்னரே குறிப்பிட்ட அழகான பெண் டாக்டரா என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

இந்திய போர்க்கைதிகளை திருப்பி அனுப்புவதற்கு முன்பு சீனாவை சுற்றி காட்டவேண்டும் என்று சீனர்கள் முடிவு செய்தார்கள். போர்க்கைதிகளாக இருந்த மேலும் பத்து இந்திய ராணுவ அதிகாரிகளும் அழைத்து வரப்பட்டனர். அதில் மேஜர் தன்சிங் தாபாவும் அடங்குவார். வீரதீர செயல்களுக்காக பரம்வீர் சக்ர விருது பெற்றவர் தாபா.

முதன்முறையாக சீனாவில் சுதந்திரமாக ரேடியோ கேட்க அனுமதிக்கப்பட்டது. அங்கிருந்து கொண்டே நீண்ட நாட்களுக்கு பிறகு ஆல் இண்டிய ரேடியோ மற்றும் பிபிசி செய்திகளை கேட்டோம்.

சீனாவை சுற்றி பார்க்க அழைத்து செல்லப்பட்டபோது, சாதாரண உடை அணிந்த சீன ராணுவத்தை சேர்ந்த ஒருவர் எங்களுடன் இருந்தார். அவர்களை ஜெனரல் என்று அழைத்தோம்.

அவரை பின்தொடர்ந்து செல்லும் சிப்பாய் ஒருவர் அவருக்கு உட்கார நாற்காலி எடுத்துப்போடுவது, தேநீர் தயாரிப்பது போன்ற எடுபிடி வேலைகளை செய்வார். அவரை ஜெனரலின் ஆடர்லி என்று அழைத்தோம்.

எங்களை இந்தியா அனுப்புவதற்கான நிகழ்ச்சி நடத்தப்பட்டபோது, விடுவிப்பு ஆவணங்களில் கையெழுத்திட்டது 'ஆடர்லி'. அப்போது அவர் கையெழுத்திடுவதற்கான பேனாவை எடுத்துக் கொடுத்தது, 'ஜெனரல்'.

காலை ஒன்பது மணிக்கு குன்மிங்கில் இருந்து கிளம்பிய எங்கள் விமானம் மதியம் ஒரு மணி 20 நிமிடங்களுக்கு கல்கத்தாவை வந்தடைந்தது. ஆனால் தரையிறங்காமல் நீண்ட நேரமாக விமானம் வானிலேயே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

விமானத்தின் சக்கரங்கள் திறக்கவில்லை என்று சொன்ன விமான ஓட்டி, அதிரடியாக விமானத்தை தரையிறக்க வேண்டியிருக்கும் என்று சொன்னார்.

இறுதியாக இரண்டு மணி முப்பது நிமிடத்தில் தம்தம் விமான நிலையத்தில் இறங்கினோம். எந்தவொரு நிலைமையும் சமாளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தீயணைப்பு வண்டிகள் தயார் நிலையில் நின்றிருந்தன.

விமானம் வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்தபோது எனக்கு தோன்றியது என்ன தெரியுமா? "இத்தனை நாள் போர்க்கைதிகளாக அந்நிய நாட்டில் இருந்த நாங்கள், பல பிரச்சனைகளுக்கு பிறகும் அங்கு மரணிக்காமல், நமது தாய் மண்ணில் அதிரடியாக தரையிறங்கும்போது மரணிப்பதற்கு கொடுத்து வைத்திருக்கவேண்டும்".

(சில ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ஜெனரல் கே.கே.திவாரியுடன் பிபிசி செய்தியாளர் ரெஹான் ஃபஜல் உரையாடியதன் அடிப்படையில் எழுதப்பட்டது இந்த கட்டுரை. இப்போது கே.கே திவாரி உயிருடன் இல்லை. அவர் 2016 ஆம் ஆண்டு புதுச்சேரியில் இயற்கை எய்தினார்.)

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்