கேட்டலோனியாவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஸ்பெயின் திட்டம்

  • 21 அக்டோபர் 2017
மரியானோ ரஜோய் படத்தின் காப்புரிமை EPA

ஸ்பெயின் பிரதமர் பிரிவினைவாத பிராந்தியத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் அப்பிராந்தியத்தின் தலைவர்களை நீக்குவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளார்.

சனிக்கிழமையன்று நடத்த ஒரு அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய், கேட்டலோனியாவின் பாராளுமன்றத்தை கலைப்பதை பற்றி சுருக்கமாக தெரிவித்துவிட்டு, அப்பகுதியில் தேர்தலை நடத்துவதற்கான திட்டங்களை முன்வைத்தார்.

அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் இன்னும் சில தினங்களில் ஸ்பெயினின் செனட் சபையில் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.

கேட்டலோனியா சுதந்திரத்திற்கான கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தி சுமார் மூன்று வாரங்கள் ஆகியுள்ள நிலையில், இத்திட்டங்கள் வந்துள்ளன.

ஸ்பெயினின் உச்ச நீதிமன்றம் அவ்வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என்றும், அது அரசியலமைப்பை மீறுவதாகவும் கூறியது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நேரடி ஆட்சி திணிப்பை பார்சிலோனாவில் எதிர்க்கும் போராட்டக்காரர்கள்.

சுதந்திர நாட்டை அமைக்கும் முயற்சியைத் திரும்பப் பெற அந்நாட்டின் மத்திய அரசாங்கம் விடுத்த வேண்டுகோளை கேட்டலான் அரசின் தலைவர் கார்லஸ் பூஜ்டிமோன் நிராகரித்துள்ளார்.

கேட்டலான் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் "சட்டத்திற்கு புறம்பானது மற்றும் மோதல் போக்குடன்" உள்ளதென்று கூறிய ரஜோய், கேட்டலோனியாவில் நேரடி ஆட்சியை அமைப்பதை தவிர வேறு வழியில்லை என்று கூறினார்.

ஸ்பெயின் நாட்டின் அரசியலமைப்பின் 155-வது பிரிவானது, அந்நாட்டில் உள்ள அரை தன்னாட்சி பிராந்தியங்களில் நெருக்கடி நிலை ஏற்படும்போது நேரடி ஆட்சியை திணிக்க அனுமதிக்கிறது.

இதுகுறித்து, ஸ்பெயினின் செனட் சபை ஒரு வாரத்தில் வாக்களிக்கவுள்ளதாக பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் ரஜோய் தெரிவித்தார். அச்சட்டப்பிரிவை செயல்படுத்துவது "எங்களின் விருப்பமும் அல்ல, அது எங்களின் எண்ணமும் அல்ல" என்றார்.

அரசியலமைப்பின் 155-வது பிரிவு அறிமுகப்படுத்தப்பட்ட ஆறு மாதங்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று சட்ட விதிகள் கூறினாலும், வெகு விரைவிலேயே தேர்தல் நடத்தப்படுமென்று ரஜோய் தெரிவித்துள்ளார்.

ராஜோய் மற்றும் அவரின் கூட்டாளிகள் தன்னாட்சி அதிகாரத்தை மட்டும் நீக்கவில்லை ஜனநாயகத்தையே நீக்க முடிவு செய்துள்ளனர் என்று கேட்டலோனிய அரசின் துணை தலைவர் ஓரியோல் ஜோன்கிரஸ் கூறியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்