ஓரிரு வரிகளில் உலக செய்திகள்

ஜப்பானில் இன்று தேர்தல்

படத்தின் காப்புரிமை EPA

ஜப்பானில் இன்று ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடக்கிறது. தமது பதவிக்காலம் முடியும் முன்னரே அந்நாட்டுப் பிரதமர் ஷின்சு அபே திடீர் தேர்தலை செப்டம்பரில் அறிவித்திருந்தார்.

எதிர்க்கட்சிகள் பிரிந்துகிடக்கும் நிலையில் அவர் இந்தத் தேர்தலை அறிவித்துள்ளார். டோக்கியோ கவர்னர் யுரிகோ கொய்கீ முதலில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தாலும், அது செல்லுபடியாகவில்லை.

உள்ளூர் நேரப்படி, காலை 7 முதல் மாலை 8 வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

கணிக்கப்பட்டப்படி மீண்டும் பிரதமர் ஷின்சூ ஆபே தேர்வானால், ஜப்பானில் போருக்கு பிறகு அதிக காலம் தலைவராக இருந்தவர் என்ற இடத்தை அடையும் வாய்ப்பு அவருக்கு உள்ளது.

வடகொரியா ஜப்பானை கடலில் மூழ்கடிக்கப்போவதாகக் கூறியது, ஃபுக்குஷிமா விபத்திற்கு பிறகான அணு உலை கொள்கை, நாட்டின் வரி போன்ற தேசிய நெருக்கடிகளை சமாளிக்க மக்களின் ஆதரவு தேவை என்று கூறி பிரதமர் செப்டம்பர் 25ஆம் தேதி இந்த தேர்தலை அறிவித்தார்.

முகாபேவின் நியமனம்: `மறுபரிசீலனை` செய்கிறார் உலக சுகாதரா நிறுவன தலைவர்

படத்தின் காப்புரிமை AFP/GETTY IMAGES

உலக சுகாதார நிறுவனத்தின் நல்லெண்ணத் தூதுவராக அதிபர் முகாபேவை நியமிப்பது குறித்து மறுபரிசீலனை செய்வதாக அந்நிறுவனத்தின் புதிய தலைவரான டெட்ரோஸ் அத்கானாம் கெப்ரியேசஸ் தெரிவித்தார்.

பொது சுகாதாரம் தொடர்பில் ஜிம்பாப்வேவுக்கு உள்ள அவரது அக்கறையை அவர் பாராட்டியும் இருந்தார். ஆனால், 30 ஆண்டுகால முகாபே ஆட்சியில் ஜிம்பாப்வேயின் சுகாதார அமைப்பு சீர்குலைந்ததாகவும், ஊழியர்களுக்கு ஊதியம் தர முடியாமல் போவதாகவும், மருந்துகள் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து, ஜிம்பாப்வே மனித உரிமைகள் வழக்கறிஞர் ஒருவர் "தனது நாட்டின் சுகாதாரத்துறையை அழித்த ஒருவருக்கு நல்லெண்ண தூதர் பட்டம்," அளிக்கப்பட்டுள்ளது குறித்து உலக சுகாதார நிறுவனம் என்ன நினைக்கிறது என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பினார்.

இதனிடையே, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளும் முகாபே நியமனம் தொடர்பில் அதிருப்தி தெரிவித்துள்ளன. இந்நிலையில் முகாபேவின் நியமனம் குறித்து மறுபரிசீலனை செய்வதாக கெப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்பெயினின் நேரடி ஆட்சி திட்டத்தை ஏற்கமுடியாது: கார்லோஸ்

படத்தின் காப்புரிமை AFP/GETTY IMAGES

கேட்டலோனியா மீது நேரடியாக ஆட்சியை நடத்தும் ஸ்பெயினின் திட்டத்தை ஏற்க முடியாது என கேட்டலோனியத் தலைவர் கார்லோஸ் பூஜ்டியமோன் தெரிவித்துள்ளார்.

ஸ்பெயினின் பிரதமர் மரியானோ ரஜோய், கேட்டலோனியா தலைவர்களை நீக்குவதோடு, அவர்களின் நாடாளுமன்றத்தையும் கலைக்கத் திட்டமிட்டுள்ளார்.

ஸ்பெயின், பேச்சுவார்த்தைக்கான எல்லா வாய்ப்புகளையும் தவிர்த்துவிட்டு, தற்போது ஜனநாயகத்திற்கு எதிராக நடப்பதாக பூஜ்டியமோன் தெரிவித்துள்ளார்.

ஸ்பெயின் நீதிமன்றத்தின் தடையை மீறி கேட்டலோனியாவில் நடந்த சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பினைத் தொடர்ந்து இந்த நிகழ்வுகள் நடக்கின்றன.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்