சீன நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு: அடுத்த தலைவர் பற்றிய குறிப்பு இல்லை

பொலிட்பூரோ குழு படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஏழு உறுப்பினர் குழு

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஏழு பேர் கொண்ட அரசியல் தலைமைக் குழுவின் நிலைக் குழுவுக்கு ஐந்து புதிய உறுப்பினர்களை நியமித்தார் அதிபர் ஷி ஜின்பிங். ஆனால், ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அடுத்த தலைவராக யார் வருவார் என்பதற்கான குறிப்பு ஏதும் இந்த நியமனங்களில் இல்லை.

வழக்கமாக ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடுகளுக்குப் பிறகு அதன் தலைவர்/ அதிபர் வெளியிடும் புதிய நிர்வாகிகள் பட்டியலில் அடுத்து யார் அதிபராக வருவார்கள் என்பதற்கான ஒரு வெளிப்படையாக அறிவிக்கப்படாத குறிப்பு இருக்கும்.

இந்தப் பாரம்பரியத்துக்கு மாற்றாக, தற்போது ஷி ஜின்பிங் அறிவித்துள்ள பட்டியலில் அடுத்த வாரிசு பற்றிய குறிப்பு இல்லை.

இந்த தவிர்ப்பு என்பது, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும், அதற்கு மேலேயும் சீனா மீது ஜின்பிங்கிற்கு உள்ள பிடியை உறுதிசெய்துள்ளது.

சீனாவின் மிக சக்திவாய்ந்த குழுவான பொலிட்பீரோ (அரசியல் தலைமைக் குழு) நிலைக்குழுவில் உள்ள ஏழு உறுப்பினர்களில் ஐந்து பேர் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பீஜிங்கில் உள்ள `கிரேட் ஹால் ஆப் பிப்பிள்` அரங்கில் குழுவை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்த குழுவில் ஏற்கனவே உள்ள 64 வயதான ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் லி கேச்சியாங் ஆகியோர் மட்டும் அந்த குழுவில் தொடர்ந்து இடம்பெறுகின்றனர்.

துணை பிரதமரான, 62 வயதான வாங் யாங், தற்போது சீனாவின் முதன்மை துணை பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் ஷாங்காய் செயலாளரான, 63 வயதாகும் ஹான் ஜங், சீன மக்களின் அரசியல் ஆலோசனை மாநாட்டை முன்னெடுத்து செல்வதற்காக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் ஊழலுக்கு எதிரான குழுவை முன்னெடுத்து செல்ல, 60 வயதாகும் ஜௌ லெ ஜீ, சீனாவின் நாடாளுமன்றத்தை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படும் 67 வயதான லீ ஜான்ஷூ மற்றும் 62 வயதான வாங் ஹுனிங் ஆகியோரும் இணைகின்றனர்.

தங்களுக்கு அடுத்து, கட்சிக்கான வாரிசு யார் என்பதை தெளிவுபடுத்தும் விதமாக, சமீப காலங்களில், சீன தலைவர்கள் தங்களின் கடைசி ஆட்சிக் காலத்தில் ஒன்று அல்லது அதற்கும் அதிகமானோரை வாரிசு பதவிக்கு ஏற்றவர்களை நிலைக்குழுவில் முன்மொழிந்தார்கள்.

ஜின்பிங்கால் வழிநடத்தப்பட்ட சென் மின்னர் மற்றும் குவாண்டூங் கட்சியின் செயலரான ஹூ சுன்ஹுவா ஆகியோர் இந்த குழுவுக்காக முன்னிருத்தப்படலாம் என்ற ஒரு கருத்து நிலவி வந்தது. அவர்கள் இருவருமே தங்களின் 50களில் உள்ளதால், நம்பிக்கையான வாரிசாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இன்றைய நிகழ்ச்சியில் மெடையேறிய ஆறு பேருமே தங்களின் 60களில் உள்ள நிலையில், அவர்களின் கடைசி ஐந்து ஆண்டு பணிகளோடு ஓய்வு பெறுவார்கள் என எதிர்பாக்கப்படுகிறது.

இளைய உறுப்பினர் இல்லாதது, ஜின்பிங்கின் நீண்ட கால எண்ணங்கள் மற்றும் அவருக்கு அடுத்த வாரிசுகள் குறித்து பல கருத்துக்களை உருவாக்கியுள்ளது.

ஒரு புதிய மத்திய ராணுவக் குழுவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே உள்ள உறுப்பினரான சூ கூஹைலான் உடன் இணைந்து, ஜாங்யங் ஷியா பணியாற்றுவார்.

நிலைக்குழு மற்றும் 25 பேர் கொண்ட பொலிட்பீரோ குழுவின் அறிவிப்புகளோடு, சீனாவின் மிக முக்கிய அரசியல் மாநாடான, கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நிறைவுற்றது.

நிலைக்குழுவின் அளவை ஏழில் இருந்து ஐந்து உறுப்பினர்களாக ஜின்பிங் மாற்றுவார் என்று முன் கூறப்பட்டுவந்த நிலையில், அதில் தற்போது எந்த மாற்றமும் இல்லை.

இந்த அறிவிப்பு நிகழ்ச்சியை காண, பிபிசி உள்ளிட்ட பல்வேறு சர்வதேச செய்தி நிறுவனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

சீனாவில் உள்ள வெளிநாட்டு செய்தியாளர்கள் குழு தனது அறிக்கையில், "இது ஊடக சுதந்திரத்தின் கோட்பாடுகளை மீறுவதாக உள்ளது" என குறிப்பிட்டுள்ளது.

இதனால் சீன தலைவருக்கு என்ன கிடைக்கும்?

படத்தின் காப்புரிமை Reuters

திறமையான வாரிசை அறிமுகப்படுத்தாதது என்பது, ஜின்பிங்கின் கீழ் அடுத்த ஐந்து ஆண்டுகள் உள்ளது மட்டுமின்றி, அவர் 2022க்கு பிறகு தனது பொறுப்பை தொடர்வதற்கு வாய்ப்புள்ளதையும் காட்டுகிறது.

செவ்வாய்கிழமையன்று, ஜின்பிங்கின் பெயர் மற்றும் சித்தாந்தங்கள், அக்கட்சியின் அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டது. இதன்மூலம், கட்சியை நிறுவிய மா சே துங்கிற்கு நிகரானவராகினார் ஷி ஜின்பிங்.

"ஷி ஜின்பிங்கின் சிந்தனைகளை" நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் சேர்ப்பதற்கு ஆதரவாக ஒருமனதாக வாக்களித்திருப்பது, ஜின்பிங்கின் சக்தியை அதிகரித்துள்ளது. இதன்மூலம், அவர் தனது ஓய்வுகாலத்திலும், தொடர்ந்து தனது சக்தியையும் செல்வாக்கையும் பயன்படுத்த முடியும்.

2012ஆம் ஆண்டு, அதிபராக தேர்வாகிய அவர், இந்த மாநாட்டின் மூலம், தனது இரண்டாவது முறையும் அதிபராக தொடர்கிறார்.

சமீப ஆண்டுகளில், சீன தலைவர்கள் 10 ஆண்டுகள் வரை ஆட்சி செய்துள்ளனர். ஆனால், ஜின்பிங் பத்து ஆண்டுகளுக்கு மேலாகவும் தொடர வாய்ப்புள்ளது. 2022ஆம் ஆண்டிற்கு பிறகும் அவர் கட்சியின் தலைவராகவும், ராணுவத்தின் தலைவராகவும் இருப்பார். இது அவரின் பதவிக்காலத்திற்கு பிறகும், நாட்டின்ம் முடிவுகளில் அவரின் செல்வக்கை பயன்படுத்த அனுமதிக்கிறது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
'ஷி ஜின்பிங் கோட்பாடு' என்பது என்ன?

சீனாவை எவ்வாறு மாற்றினார் ஜின்பிங்?

2012ஆம் ஆண்டு, பதவிக்கு வந்தது முதல், ஜின்பிங் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கான பதவிகளை வகித்துள்ளார். இதில், சீனாவின் "முதன்மை தலைவர்" என்பது அடங்கும்.

அவரின் முதல் ஐந்து ஆண்டுகளில் பல கவனிக்கத்தக்க மாற்றங்கள், நவீனமயமாக்கலுக்கான உந்துதல் மற்றும் உலக அரங்கில் தன்முனைப்பின் அதிகரிப்பு ஆகியவை இருந்தன.

சர்வாதிகாரம், தணிக்கைநிலை மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் ஆகியவற்றையும் கூட பார்த்தது சீனா.

ஊழலுக்கு எதிராக அவரால் கொண்டுவரப்பட்ட குழுவின் செயல்பாடுகளால், 10 லட்சம் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், அதிக அளவிலான எதிரிகளின் களையெடுப்பும் நடந்தது.

`ஷி ஜின்பிங் சிந்தனைகள்` என்ன?

முதல் பார்வையில், "ஷி ஜின்பிங்கின் சிந்தனைகள்" என்பது அவரில் இயல்பான சொல்லாட்சி போல தோன்றினாலும், தனது ஆட்சிகாலத்தில் ஜின்பிங் ஆதரவளித்த கம்யூனிஸ்டுகளை அது விளக்குகிறது.

அதன் 14 முக்கிய கோட்பாடுகள், நாட்டை அனைத்து வழிகளிலும் பாதுகாப்பதற்கான வலியுறுத்தலை அளிக்கிறது.

1."முழுமையான, ஆழ்ந்த சீர்திருத்தம்" மற்றும் `புதிய முன்னேற்றங்களுக்கான யோசனைகள்` உள்ளிட்டவற்றிற்கான அழைப்பு

2."மனிதன் மற்றும் இயற்கைக்கு இடையேயான சுமூகமான வாழ்க்கை" - இது மேம்படுத்தப்பட்ட சுற்றுசூழல் பாதுகாப்பிற்கான அழைப்பு, அந்நாடு, புதுப்பிக்க கூடிய சக்திகளால் இயங்க கூடிய பொருட்களை அதிகப்படுத்தும் நோக்கத்தை குறிக்கிறது.

3."மக்கள் ராணுவத்தின் மீது கட்சியின் அதிகாரம்" என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.

4."ஒரு நாடு இரண்டு அமைப்புகள்" என்பதற்கான முக்கியதுவம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தாய்நாட்டிற்கு திரும்புதல் குறித்தும் கூறப்பட்டுள்ளது. - இவை ஹாங்காங் மற்றும் தைவானை குறிக்கிறது.

சீனாவின் "புதிய யுகம்"

கேரி கிரேஸ் , பிபிசி சீனா ஆசிரியர்

புதிய தலைமைக்கான சீனாவின் திட்டம் ரகசியமாகவே இருக்கிறது. அடுத்த தலைமுறைத் தலைவர்கள் யாரும் இல்லாதது, எவ்வளவு காலத்துக்கு ஷி ஆளவிரும்புகிறார் என்பது குறித்த ஐயத்தை ஏற்படுத்துகிறது. பல வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இதற்கான காரணம் ஏதும் சொல்லப்படவில்லை. ஆனால், அவர்கள் செய்தி அளிக்கும் விதமே காரணம் என்று அதிகாரபூர்வமற்ற முறையில் தெரிவிக்கப்பட்டது. இது உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தகவல்களைக் கட்டுப்படுத்தும் சீனாவின் ஆர்வம் வளர்ந்து வருவதைக் காட்டுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்