சொந்த இடங்களிலிருந்து 'வெளியேற்றப்பட்ட' வங்கதேச இந்துக்கள்

பரம்பரை சொத்துகளை நீங்கள் அனுபவிக்க முடியாது என்று கூறி உங்கள் பூர்விக இடத்திலிருந்து நீங்கள் வெளியேற்றப்பட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்? அதை 'எதிரிச்சொத்து' என்று சட்டம் சொன்னால் எப்படி இருக்கும்?

பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த இடத்தில், உங்களுக்கு சொந்தமான வீட்டை, அதன் உரிமையை மீண்டும் பெறுவதற்காக நீதிமன்றத்திற்கு கால் தேய நடந்தும், அலைகழிக்கப்பட்டால் எப்படி இருக்கும்?

வங்கதேசத்தில் வசிக்கும் ஆயிரக்கணக்கான சிறுபான்மை இந்து குடும்பங்கள், அந்த நாட்டின் பழைய சட்டத்தின் காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்னதாக தங்கள் சொத்துக்களை இழந்துவிட்டார்கள்.

சில அதிர்ஷ்டசாலிகளுக்கு அவர்களின் வீடும், சொத்துகளும் திரும்பக் கிடைத்துவிட்டாலும், பெரும்பாலான இந்து மக்கள் நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருக்கின்றனர்.

உண்மையில், 1971-ஆம் ஆண்டு வங்கதேசம் உருவாவதற்கு முன்னர் அங்கு, 'எதிரிகள் சொத்துச் சட்டம்' என்று அழைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய சட்டம் இருந்தது, அது பின்னர் 'சொத்துரிமைச் சட்டம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த சட்டத்தின்படி, நாட்டின் எதிரியாகக் கருதப்படும் நாட்டை சேர்ந்த மக்கள் மற்றும் அறக்கட்டளைகளின் சொத்தை அரசு எடுத்துக்கொள்ள முடியும்.

வங்கதேசத்தில் சிறுபான்மை மக்களாக இருந்த இந்துக்கள் இந்தச் சட்டத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டார்கள்.

1947-ல் இந்தியா இரு நாடாக பிரிந்த சமயத்தில் இந்தியாவில் வசித்த இந்து மக்களில் லட்சக்கணக்கானவர்கள் பாகிஸ்தானுக்கு என்று ஒதுக்கப்பட்ட பகுதியில் இருந்து வெளியேறினார்கள்.

பலர் பிறந்த இடத்தையும், சொத்துகளையும், உடமைகளையும் விட்டு வெளியேற மனமில்லாமல், பிறந்த மண்ணிலேயே வாழ முடிவெடுத்தார்கள். சிலர் தங்களுடைய சொத்துக்களை உற்றார் உறவினர்களின் பெயருக்கு மாற்றிக் கொடுத்துவிட்டுப் புலம் பெயர்ந்தார்கள்.

காலத்தின் கோலத்தில், இரண்டாக பிரிந்ததில் ஒரு பகுதியான பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் தனிநாடாகப் பிரிந்தது. இந்தியா ஒன்றாக இருந்தபோது வங்கதேசத்தில் வசித்த இந்து மக்களின் சொத்துக்கள்தான் தற்போது சிக்கல்களின் ஆணிவேர்.

வங்கதேசத்தின் தெற்கு நகரமான சிட்டகாங்கில் வசிக்கும் கிருஷ்ணகாந்த் கடந்த ஐந்து ஆண்டுகளாக நீதிமன்றத்திற்கு அலைந்துக் கொண்டிருக்கிறார்.

Image caption கிருஷ்ணகாந்த்

"என்னுடைய இரண்டு ஏக்கர் நிலத்தை உள்ளூர் மக்களே ஆக்கிரமித்துக் கொண்டார்கள். இந்த விவகாரம் பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது" என்று அவர் கூறினார்.

விசாரணை தொடங்கி விட்டது, ஆனால் இதுவரை தீர்ப்பு வெளிவரவில்லை, அரசின் அணுகுமுறை இந்த விவகாரத்தில் ஆக்கப்பூர்வமாக, நேர்மறையாக இருந்தாலும், புதிய சட்டத்தின் காரணமாக நான் நீண்ட காலமாக காத்திருக்கிறேன்" என்கிறார் கிருஷ்ணகாந்த்.

வங்கதேசம், கிழக்கு பாகிஸ்தானாக இருந்தபோது இந்த சட்டத்திற்கு அடித்தளம் இடப்பட்டது. இதுபோன்ற சட்டங்கள் இந்தியாவிலும் இருக்கிறது. பிரிவினையின்போது பாகிஸ்தானுக்குச் சென்றவர்களின் சொத்து வழக்குகள் பல இந்திய நீதிமன்றங்களில் விசாரணையில் இருக்கின்றன.

வங்கதேசத்தில் வசிக்கும் 16 கோடி மக்களில் கிட்டத்தட்ட இரண்டு கோடி பேர் இந்துக்கள். அரசின் புள்ளிவிபரங்களின்படி வங்கதேசம் உருவானபோது, இந்துக்களின் எண்ணிக்கை மேலும் அதிகம்.

சொத்துக்களின் உரிமை பற்றி பல சர்ச்சைகள்

வங்கதேச தலைநகர் டாக்காவில் இப்படி சர்ச்சைக்குள்ளாகிய சொத்துகளைக் கண்டறிவது கடினமானதல்ல.

ஆனால் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அதுபற்றி வெளிப்படையாகப் பேச விரும்புவதில்லை. அதைப்பற்றி பேசுவதற்கே மறுத்துவிடுவார்கள்.

தினாஜ்பூர், கோபால்கஞ்ச், சில்ஹட், ஜஷோர் போன்ற பல நகரங்களில் பல இந்து குடும்பங்களை சந்தித்து பேச முயற்சித்தோம். பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையை கூறிய பிறகே இந்த விவகாரம் பற்றி அவர்கள் ஓரளவாவது பேச முன்வந்தார்கள்.

Image caption டி.எல் செளத்ரி

ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி, டி.எல் சௌத்ரியை டாக்காவின் ஷங்கரி சந்தையில் சந்தித்தேன்.

அந்தப் பகுதியில் இருக்கும் மிகப்பெரிய கோயில் அறக்கட்டளையின் உறுப்பினரான அவர் இந்துகளின் சொத்து தொடர்பான வழக்குகளுக்காக நீதிமன்றத்தை நாடுகிறார்.

"வெற்றிபெறுவோம் என்று எங்களுக்கு திடமான நம்பிக்கை இருந்தாலும், அரசு நிர்வாகத்தின் உயர்நிலையில் இருந்து கீழ்நிலைவரை பலர் யாரோ ஒருவருக்கு கட்டுப்பட்டவர்களாக சிலர் இருக்கிறார்கள். எனவே அவர்கள் நியாயமாக நடந்துக் கொள்ளாதபோது நாங்கள் மேல் நீதிமன்றங்களின் கதவுகளைத் தட்ட வேண்டியிருக்கிறது."

தங்கள் மூதாதையர்களின் சொத்துக்களை மீட்பதற்காக குறைந்தபட்சம் 7,000 வழக்குகள் 'உரிமையுடய சொத்துச் சட்டம் (Vested Property Act) என்ற வங்கதேசத்தின் சட்டத்தின்கீழ் அந்நாட்டு நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.

நாட்டின் உயர் நீதிமன்றம், இதுபோன்ற வழங்குகள் பலவற்றில் சிறுபான்மை இந்துக்களுக்கு ஆதரவாக பல தீர்ப்புகளை வழங்கியுள்ளது. பழைய சட்டமும் திருத்தப்பட்டது.

Image caption அனிசூல் ஹக், சட்ட அமைச்சர், வங்கதேசம்

ஆனால் பெரும்பான்மையான சொத்து ஆக்ரமிப்பு வழக்குகளில், இன்னும் முடிவு வரவில்லை.

வழக்குகள் தாமதம்

பிபிசி நிருபர் இதுபற்றி வங்கதேச சட்ட அமைச்சர் அனிசூல் ஹக்கிடம் கேட்டபோது அவர் இதை ஒப்புக்கொண்டார்.

"தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்குகளில், வீடுகள், உடமைகள் அல்லது நிலங்கள் போன்றவை அதன் அசல் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவேண்டும் என்று நான் உத்தரவிட்டிருக்கிறேன். இதுபோன்ற வழக்குகளில், தடைகளை ஏற்படுவதை தடுக்கும் வகையில் ஒரு நடைமுறையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். பல ஆண்டுகளுக்கு மெத்தனமாக நடைபெற்று வந்த இந்த வழக்குகளை துரிதப்படுத்த சிறிது காலம் தேவைப்படுகிறது. தவறுகளையும், தடைகளையும் சரிசெய்ய தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம், மூன்று முதல் நான்கு மாதங்களில் எங்கள் முயற்சிகளின் விளைவை நீங்கள் கண்கூடாகப் பார்க்க முடியும்" என்கிறார் வங்கதேச சட்ட அமைச்சர்.

வீட்டை இழப்பது என்பது தனது சுயத்தையும், ஏன் தன்னையே இழந்துவிடுவதைவிட குறைவான வலியை தரக்கூடியதா என்ன?

ஒரு பழைய சட்டத்தினால் உங்கள் உடமையும், உரிமையும் உங்களுக்கானது இல்லை என்றுகூறி பிறரால் ஆக்ரமிக்கப்படும்போது ஏற்படும் வலியை அப்படியே விவரிப்பதற்கு உகந்த வார்த்தைகள் எந்தவொரு மொழியிலாவது இருக்கிறதா?

ஆனால் கேள்விகளுக்கான பதில் விரைவில் கிடைத்துவிடும் என்று நம்பிக்கையளிக்கிறார் சட்ட அமைச்சர்.

இந்த நம்பிக்கை வங்கதேசத்தில் வசிக்கும் சிறுபான்மை இந்துக்களின் உடமைகளையும் உரிமைகளையும் திருப்பிக்கொடுக்குமா? அவர்களின் மனதில் வாழ்வதற்கான நம்பிக்கையை மீட்டெடுக்குமா என்பதை காலம்தான் சொல்லும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்