மஷால் கானின் மரணம் எதையாவது மாற்றியுள்ளதா?

தெய்வ நிந்தனை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தான் கிறிஸ்துவர்கள்
Image caption தெய்வ நிந்தனை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தான் கிறிஸ்துவர்கள்

பல்கலைக்கழக மாணவரான மஷால் கான் கொல்லப்பட்டு ஆறு மாதங்கள் ஆன நிலையிலும், பாகிஸ்தானின் தெய்வ நிந்தனை சட்டத்தை மாற்றியமைப்பதில் அந்நாட்டு அரசியல்வாதிகள் அமைதி காத்து வருகின்றனர்.

தனி நபர் விருப்பு, வெறுப்புகளுக்காக தவறான முறையில் பயன்படுத்தப்படலாம் என விமர்சகர்கள் எச்சரிக்கும் ,தெய்வ நிந்தனை சட்டத்தை எப்போது பாகிஸ்தான் மாற்றியமைக்கும்? கடந்த ஆண்டு பல்கலைகழக மாணவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட பிறகு, மக்கள் அதிகாரிகள் இந்த சட்டத்தை மாற்றியமைப்பது குறித்த சட்ட ரீதியான நடவடிக்கைகளை தொடங்குவார்கள் என்ற நம்பிக்கை துளிர்த்தது. ஆனால் ஆறு மாதங்களுக்கு பிறகும், அதில் பெரிய முன்னேற்றம் ஏதும் ஏற்பட்டிருக்கவில்லை. பிபிசி செய்தியாளர் சுமைலா ஜாப்ஃரி, பாகிஸ்தானில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இரண்டு மத நிந்தனை வழக்குகள் குறித்து ஆராய்ந்தார்.

இக்பால் கானை சந்திப்பதற்காக, வடகிழக்கு இஸ்லாமாபாத்தில் உள்ள சிறிய நகரான ஹரிப்பூருக்கு நான் சமீபத்தில் பயணம் மேற்கொண்டேன்.

இவருடைய மகனான மஷால், தெய்வ நிந்தனை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் பல்கலைகழக வளாகத்தில் குண்டர்களால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். அவரின் தந்தையை நான் சந்தித்தது இதுவே முதல் முறை.

Image caption இக்பால் கான்

மேலும் பிரச்சனைகளிலிருந்து விரைவாக மீண்டெழும் தன்மை இக்பால்கானிடம் இருக்கிறது என்பதை அறிந்திருந்தேன். தன்னுடைய புத்திசாலி மகன் கொல்லப்பட்ட அந்த நாளில், அவர் தன்னுடைய அமைதியையும், தைரியத்தையும் ஒரு நிமிடம் கூட இழக்கவில்லை.

அதே நாளில் அவர் ஊடகங்களுக்கு பேட்டியளிக்கும் போது, ஒரு சொட்டு கண்ணீர் கூட விடவில்லை. நான் ஹரிப்பூர் சிறையின் வெளியே இக்பால் கானை சந்தித்தேன்.ஆறு மாத காலத்தில் நடைபெற்ற முதல் முன்னேற்றமான, தன்னுடைய மகனின் கொலை வழக்கு குறித்த விசாரணைக்காக அவர் அங்கு வந்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக 57 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த வழக்கு பல ஆண்டுகள் நடக்கலாம்.

எவ்வளவு செலவானாலும், தன்னுடைய மகனின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் இக்பால் கான் உறுதியாக உள்ளார்.``இந்த நாட்டின் வரலாற்றில் நீதி என்பது கிடைத்ததே இல்லை.ஆனால் மஷாலைப் போல, நீதியும் கொலை செய்யப்பட்டுவிடக் கூடாது என விரும்புகிறேன். இது அரசையும், நீதிமன்றத்தையும் சோதிக்கும் ஒரு வழக்கு.ஒரு வேளை இந்த முறை நீதி கிடைத்தால், அது ஒரு புதிய முன்னுதாரணமாக இருக்கும். இது கண்டிப்பாக இந்த நாடு குறித்த பார்வையை மாற்றும்.`` என அவர் கூறுகிறார்.

அதிர்ச்சியளிக்கும் புள்ளி விபரங்கள்

மரண தண்டனை அறிமுகப்படுத்தப்பட்ட 1991-ஆம் ஆண்டு முதல், தெய்வ நிந்தனை மற்றும் அது தொடர்பான வன்முறை நிகழ்வுகளால் இதுவரை 2500 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தங்களுடைய பக்கத்து வீட்டுக்காரர்களை பழி தீர்த்துக் கொள்ளக் கூட இந்த சட்டம் பயன்படுத்தப்படலாம் என விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.

சட்டத்திற்கு எதிரான குரல் எழுப்பி, அதனை சீரமைக்க வேண்டும் என கூறியவர்களில் சமீபத்தில் பாதிக்கப்பட்டவர் இக்பால் கான்.

Image caption ஆசியா பீபி

கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடைபெற்று வரும், பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மற்றொரு தெய்வ நிந்தனை தொடர்பான வழக்கு, கிறிஸ்துவ பெண்ணான ஆசியா பீபியுடையது.

ஐந்து குழந்தைகளுக்கு தாயான அவர்,தன்னுடைய கிராமத்தில் பழப் பண்ணை ஒன்றில் வேலை செய்து வந்தார். ஒரே குவளையில் நீர் அருந்தியதால், சக பணியாளரான முஸ்லிம் பெண்ணுடன் சண்டையிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அடுத்த சில நாட்களில், இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து தவறாக வார்த்தைகள் கூறியதாக அவர் மீது உள்ளூர் மசூதி ஒன்றின் மதத் தலைவர் ஆசியா மீது குற்றம்சாட்டினார். மேலும் அவர் மீது தெய்வ நிந்தனை வழக்கும் பதியப்பட்டது.

பாகிஸ்தான் சட்டப்படி, இறைத்தூதர் நபிகள் நாயகத்திற்கு எதிராக நிந்தனை செய்வது, மரண தண்டனை அளிக்கக் கூடிய குற்றமாகும்.

உள்ளூர் நீதிமன்றம் ஆசியா பீபிக்கு மரண தண்டனை விதித்தது. அதனைத் தொடர்ந்து லாகூர் உயர்நீதிமன்றமும் இந்த தண்டனையை உறுதி செய்தது.

பின்னர் உச்சநீதிமன்றத்திற்கு சென்ற இந்த வழக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கு நிலுவையில் உள்ளது.

நீதி அமைப்பு மெதுவாக சென்றுகொண்டிருப்பதால், தனிமைச் சிறையில் அவர் வாடிக்கொண்டிருக்க, அவரது குடும்பம் தற்போதும் தலைமறைவாக உள்ளது.

ஒரு கணவரின் மனஉறுதி

கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரியில் ஆசியாவின் கணவர் ஆஷிக் மசியை நான் கடைசியாக சந்தித்தேன். தனது மனைவியை வாழ்க்கை தொடர்பானது என்பதால், அவருடைய வார்த்தைகள் மிகவும் கவனத்துடனும், பயத்துடனும் வெளிப்பட்டன. ஆனால் இப்போது அந்த பயம்,ஏமாற்றத்தால் நிரப்பப்பட்டுள்ளது.

``இந்த ஒன்பது ஆண்டுகளில் ஏதாவது செய்யப்பட்டிருக்க வேண்டும். இது மிகவும் நீண்ட காலம். உங்கள் குரல் கேட்கப்படவில்லை எனில் அது மிகுந்த வலியைத் தரும்.`` என நாங்கள் ரகசியமாக சந்தித்த இடத்தில் அவர் தெரிவித்தார்.

மிரட்டல்கள் தொடர்ந்து கொண்டிருந்தாலும், தன்னுடைய குடும்பத்தை ஆஷிக் பாதுகாத்து வருகிறார். ஆனால் அரசினால் தான் ஏமாற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கிறார்.

``வேண்டுமென்றே இந்த வழக்கு தாமதிக்கப்படுவதாக உணருகிறேன். உண்மையான சட்ட காரணங்களா அல்லது மதத் தலைவர்களால் அதிகாரிகளுக்கு அழுத்தம் அளிக்கப்படுகிறதா என எனக்கு தெரியவில்லை.`` என அவர் கூறுகிறார்.

எங்கும் அச்சம்

கடந்த 2011-ஆம் ஆண்டு ஆசியாவுக்கு முன்னாள் பஞ்சாப் ஆளுநரான சல்மான் தசீர் ஆதரவளிக்க முயற்சி செய்தார். ஆனால் அவர் தனது பாதுகாவலராலேயே கொல்லப்பட்டார்.

மார்டான் பல்கலைகழகத்தில் நடைபெற்ற கொலைச்சம்பவம், அதிகாரத்தில் இருந்தவர்களுக்கும் அதிர்ச்சியளித்தது.

தெய்வ நிந்தனை சட்டத்தை சீரமைக்க வேண்டிய தேவை குறித்து முதன்முறையாக பாராளுமன்ற உறுப்பினர்கள் அவையில் பேசினர்.

முன்னாள் பாகிஸ்தான் பிரதமரான நவாஸ் ஷெரீஃப் கடுமையான வார்த்தைகளை பிரயோகித்து, இந்த சம்பவம் தனக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் அளிப்பதாக தெரிவித்தார்.

மாஷல் கானின் கொலைக்கு முதன்முதலில் கண்டனம் தெரிவித்த சிலரில், மதத் தலைவர்களின் ஆதரவு பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் இம்ரான்கானும் ஒருவர்.

ஆனால் ஆறு மாதங்களில், இந்த சட்டத்தை சீரமைக்க வேண்டும் என்ற பேச்சுக்கள் மங்கிவிட்டன. முக்கியமான மனித உரிமை செயற்பாட்டாளரான ஹுசைன் நகிக்கு இது ஆச்சரியம் தரவில்லை.

``மக்கள் தங்கள் வாழ்க்கை மீது பயம் கொண்டிருப்பதால், தெய்வ நிந்தனை வழக்குகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. நீதிமன்றமும் பயப்படுகிறது. பெரிய, பிரபலமான கல்வி நிறுவனங்களில் கூட, பழமைவாத ஆதரவாளர்கள் உள்ளனர். அவர்கள் தங்களுடைய எண்ணத்தை வெளிப்படையாக தெரிவிப்பார்கள். அவர்களை எதிர்த்து யாரும் பேச முடியாது.`` என அவர் கூறுகிறார்.

மத சிறுபான்மையினர் பல ஆண்டுகளாக இந்த சட்டத்திற்கு எதிராக போராடி வருகின்றனர். ஆனால் அதை யாரும் கண்டுகொள்வதாக இல்லை.இருப்பினும் தெய்வ நிந்தனை குற்றம் காரணமாக யாருக்கும் இதுவரை மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. ஆனால் டஜன் கணக்காணோர் பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மாஷல் அன்றே கொல்லப்பட்டார். ஆனால் ஆசியா மரணத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

தனது மகன் திரும்ப மாட்டான் என மாஷலின் தந்தை இக்பாலுக்கு தெரியும். குறிப்பிட்ட வாழ்வாதாரத்தைக் கொண்ட வயதான மனிதர் அவர்.ஆனால் தன்னுடைய மகனுக்கான நீதியை அவர் எப்போதும் சாகவிட மாட்டார். எதிர்காலத்தில் பல மாஷல்களின் பாதுகாப்பிற்காக அவர் தனியாக போராடுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்