ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சிறிது காலம் சுதந்திரம் கொடுத்த ரஷ்ய புரட்சி

  • ஓல்கா கொரோஷிவிலோ
  • செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மாநில தொழில்துறை தொழில்நுட்பங்கள் மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழகம்
1921 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெட்ரோகிராட் நகரில் நடைபெற்ற ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமண விழா
படக்குறிப்பு,

1921 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெட்ரோகிராட் நகரில் நடைபெற்ற ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமண விழா

1921-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரஷ்ய பால்டிக் கடற்படை வீரர் அஃபானாஸ் ஷோர் பெட்ரோகிராடில் ஒரு அசாதாரணமான ஆண் ஓரினச்சேர்கையாளர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார்.

95 முன்னாள் ராணுவ அதிகாரிகளுடன் ராணுவம் மற்றும் கடற்படையின் கீழ்நிலை உறுப்பினர்கள் மற்றும் ஆண் ஆடையை அணிந்த பெண் ஆகியோர் விருந்தினர்களாக இருந்தனர்.

இதுபோன்ற ஒரு நிகழ்வை அந்நகரம் அதுவரை கண்டதில்லை.

ஷோர் எல்லா தடைகளையும் கடந்தார். விருந்தினர்கள் வரமாட்டார்கள் என்று அவர் நினைத்தார்.

ஆனால் அவர் எதிர்பார்க்காத விதமாக ரஷ்ய பாரம்பரியதுடன், பிரட் மற்றும் உப்பு, பெற்றோர்களிடமிருந்து ஒரு வாழ்த்து மற்றும் அதனைத் தொடர்ந்து இசை கச்சேரி என்று தவிர்க்க முடியாத எல்லா வகையான ஏற்பாடுகளுடன் சரியான முறையில் திருமணத்தை நடத்தினார்.

அந்நேரத்தில் ரஷ்யாவின் ஆண் ஓரினச்சேர்க்கையாளர் சமூகம் சகிப்புத்தன்மையை ஓரளவுக்கு அனுபவித்தது.

போல்ஷெவிக்குகள் அக்டோபர் புரட்சிக்கு பின்பு நாட்டின் சட்டத்தை செல்லாததாக்கி, மீண்டும் புதியதாக எழுதினார்கள். அவர்கள் 1922 மற்றும் 1926-ல் இயற்றிய இரண்டு தண்டனை சட்டங்களிலும் ஆண் ஓரினச்சேர்கையை தடைசெய்யும் சட்டப்பிரிவு சேர்க்கப்படவில்லை.

படக்குறிப்பு,

1916 ஆம் ஆண்டு பெண்கள் ஆடைகளில் அணிந்திருந்த இளைஞர்களுடன் ரஷ்ய மாலுமிகள்

ஆனால், பெட்ரோகிராடில் நடந்த திருமணம் அதுபோன்று தோன்றவில்லை.

அஃபானாஸ் ஷோர் ஒரு ரகசிய காவல்துறை அதிகாரியாக இருந்தபோதிலும், கொண்டாட்டத்தின் இறுதியில் அனைத்து விருந்தினர்களும் கைது செய்யப்பட்டார்கள்.

இந்த முழு நிகழ்வும் ஷோர் தனது உயரதிகாரிகளுளுக்கு உதவுவதற்காக செய்யப்பட்டது என்பது பிறகு தெரியவந்தது. அதில் கலந்து கொண்டவர்களை, இந்த முன்னாள் இராணுவ வீரர்கள் 'சிவப்பு இராணுவத்தை' உள்ளே இருந்துகொண்டே அகற்ற விரும்பிய எதிர்ப்புரட்சியாளர்கள் என்று அவர் தெரிவித்தார்.

ஷார்ரின் முயற்சிகள் இருந்தபோதிலும் குற்றச்சாட்டுகள் உறுதியாக இல்லையென்பதால் இந்த வழக்கு இறுதியாக முடித்து வைக்கப்பட்டது. இதனால், 'எதிர்ப் புரட்சியாளர்களுக்கு' ஒரு பயத்தைவிட வேறெந்த பிரச்சனையும் இல்லாமல் போய்விட்டது.

தங்களை போன்றவர்களை அடையாளம் காண்பதெப்படி?

ரஷ்ய புரட்சிக்கு வெகுகாலத்திற்கு முன்னரே ரஷ்யாவில் ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் ஒரு தனித்த சமூகமாக வாழ்ந்து வந்தனர். மேலும், அவர்கள் பாணியில் 'இரகசிய மொழியால்' ஒருவருக்கொருவர் அடையாளம் கண்டுகொண்டனர்.

படக்குறிப்பு,

1920களின் புகழ்பெற்று விளங்கிய பெர்லினை சேர்ந்த ஹான்சி ஸ்டர்ம்.

செயின்ட் பீட்டர்ஸ்பெர்கில், சிலர் சிவப்பு சட்டைகளையோ அல்லது சிவப்பு சால்வைகளையோ அணிந்துகொண்டு அதன் காற்சட்டையின் பின்புற பாக்கெட்டுகளை தைத்திருப்பர்.

மற்றவர்கள் அவர்களின் முகங்களில் பவுடர் மற்றும் அதிகளவிலான மஸ்காராவையும் போட்டிருப்பர்.

புரட்சிக்கு பிறகு, பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய 'மௌனமான திரைப்பட நட்சத்திர தோற்றம்' இளம் ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு வெறும் பேஷனாக மட்டுமல்லாமல், முக்கியப்போக்காகவும் ஆகிவிட்டது.

புரட்சி மற்றும் உள்நாட்டு யுத்தத்தின் கிளர்ச்சி ரஷ்யாவிற்கும், அங்குள்ள ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் கடுமையான நேரத்தை கொண்டு வந்தது. ஐரோப்பா முழுவதிலும் உள்ள சில ஓரினச்சேர்க்கையாளர்களால் விரும்பப்பட்ட ஆடம்பர ஆடைகள் மற்றும் ஆடம்பர ஆபரணங்களுடன் ஒப்பிட முடியாத நிலையேற்பட்டது.

படக்குறிப்பு,

NEP சகாப்தத்தின் பேஷன் சின்னங்களான அப்பெஷா மற்றும் அப்ஷ்கா, லெனின்கிராட், 1920களின் நடுப்பகுதி

சட்டப்பூர்வமானாலும் தொடரும் அச்சறுத்தல்

போல்ஷெவிக்குகள் பெர்லினில் பாலியலுக்கான நிறுவனத்தை ஆரம்பித்த ஜெர்மன் அறிவியலாளரான மாக்னஸ் ஹிர்ஷபெல்ட் என்பவரால் மறைமுகமாக கவரப்பட்டனர்.

ஓரினச்சேர்க்கை என்பது ஒரு நோயல்ல, ஆனால் மனிதனின் இயற்கையான பாலியல் வெளிப்பாடு என்று பொதுவெளியில் ஹிர்ஷபெல்ட் அடிக்கடி பேசினார்.

1920களில் குற்றவியல் சட்டங்களில் ஓரினச்சேர்க்கை தொடர்பான ஒரு சட்டப்பிரிவும் இல்லை என்றாலும், ஓரினச்சேர்கையாளர்கள் சமூகம் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருந்தது. ஆண் ஓரினச்சேர்கையாளர்கள் பெரும்பாலும் தாக்கப்பட்டனர், அச்சுறுத்தப்பட்டனர் அல்லது தங்களது வேலைகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.

மனநல மருத்துவர் விளாடிமிர் பெக்டெரெவிர்கை தங்களது கடைசி நம்பிக்கையாக கருதி அவருக்கு இதயப்பூர்வமான கடிதங்களை எழுதினர். அதில் அவர்கள் மனப்பூர்வமாக கருத்துத் தெரிவித்ததுடன், மனச்சோர்வை சமாளிக்கவும், "தங்கள் நோயை குணப்படுத்த" அவர்களுக்கு உதவும்படியும் கேட்டுக் கொண்டனர்.

ஓரினச்சேர்க்கையாளர்கள் நம்பமுடியாத அளவுக்கு துணிச்சலானவர்கள் என்பதை இந்த கடிதங்கள் மற்றும் பிற ஆவணங்கள் காட்டுகின்றன. சிலர் பெண்களின் ஆடைகள், நெருக்கமான ஆடைகள் மற்றும் நீண்ட முடிகளையும் அணிந்துகொண்டு சில நேரங்களில் உண்மையான பெண்கள் போல தோற்றமளித்தனர்.

படக்குறிப்பு,

பெட்ரோகிராட் ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் சமூகத்தை சேர்ந்த 'எளிய வகுப்பு' உறுப்பினர்கள்

'உயர்குடி மக்கள்' மற்றும் 'எளிய மக்கள்'

புரட்சி வர்க்க பிரிவை ஒழித்தபோதிலும், ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் சமூக வகுப்புகளால் பிரிக்கப்பட்டனர். இரண்டு ஆண் ஓரினச்சேர்க்கையாளர் சமூகங்கள் இருந்தாலும், அவர்கள் அரிதாகவே இணைந்து செயல்பட்டனர்.

முதலாவது இருப்பவர்கள் 'உயர்குடியாளர்கள்' என்று அழைக்கப்பட்டவர்கள்; அதாவது, படைப்பு அறிவுஜீவிகள், பிரதிநிதிகள், அதிகாரிகள் மற்றும் சாரிஸ்ட் ராணுவம் மற்றும் கடற்படை அதிகாரிகள்.

மற்றொரு சமூகம் 'எளிய'தாகும். (அப்பெயர், தெளிவாக 'உயர்குடிகளால்' கண்டுபிடிக்கப்பட்டது). இவ்வகையினரில் வீரர்கள், மாலுமிகள், எழுத்தாளர்கள் ஆகியோர் அடங்குகின்றனர். இவர்கள் ரஷ்ய புரட்சிக்கு முன்னர் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கின் அழகுநிலையங்கள் முன்பு இருந்தவர்களும் இல்லை மற்றும் 1917க்கு பிறகு 'உயர்குடியை' சேர்ந்த விருத்தினர்களை வரவேற்றவர்களும் இல்லை.

1920களில், ஜெர்மன் 'ட்ரெஸ்ட்ஸி' தியேட்டர் (அதில் ஆண்கள் மற்றும் பெண்களைப் போன்ற ஆண்கள்) சோவியத்தின் ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களிடையே பிரபலமடைந்தது. குறிப்பாக பெர்லின் நைட் கிளப் 'எல் டொரடோ'வின் நட்சத்திரமான ஹான்சி ஸ்டூம் மீது பற்று வைத்திருந்தனர்.

படக்குறிப்பு,

1910களின் முற்பகுதியில், மட்லிடா க்ஷேஸ்ஸ்காவாக போன்று ஆடையணிந்த ஆண்கள்

'உயர்குடியாளர்கள்' அரிதான வேளைகளில் 'எளிமையான' பிரிவை சேர்ந்த அழகான ஆண்களை மட்டுமே அவர்களின் ஆடம்பரமான விழாக்களுக்கு அழைத்தனர். ஆனால் பெண்களின் உடையை அணிந்த ஆண் கலைஞர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.

அவர்கள் நட்சத்திரங்களாகவும், மற்றவர்கள் மத்தியில், மார்க்டிலா கிஷ்சின்ஸ்காவைப் (இரண்டாம் சார்கோ நிக்கோலஸின் மனைவி) போன்ற புகழ்பெற்ற ஆடல் நங்கைகளாவும் இருந்தனர்.

தொழில்முறை தையல்காரர்களால் செய்யப்பட்ட அழகான உடைகளால் அவர்களின் அலமாரிகள் இருந்தன. அவர்கள் புகழ்பெற்ற பெட்ரோகிராட் தையல்காரர் லீஃபெர்ட்டிலிருந்து அவற்றை வாடகைக்கு எடுத்தார்கள்.

படக்குறிப்பு,

1910களில் ரஷ்ய 'டிராஸ்டி' தியேட்டர்,

புரட்சிக்கு முன்னர், லீஃபெர்ட் ஏகாதிபத்திய நீதிமன்றத்திற்கு ஒரு சப்ளையராகவும், மிரின்ஸ்கி தியேட்டரின் நடனக் கலைஞர்களுக்காக ஆடைகளையும் தயாரித்தார்.

அனைத்தும் முடிவுக்கு வந்தன

கண்கவர் ஆண் ஓரினசேர்கையாளர்களின் திருமண விழாவை நடத்தி எதிர்தரப்பு புரட்சியாளர்களை சிக்கவைக்க அஃபாநஸி ஷவுரின் திட்டத்திற்கு பிறகு, 1920யில் இது போன்ற உயர்தர திருமணங்களோ அல்லது கைதுகளோ நடைபெறவில்லை.

ஓரினச்சேர்க்கை பொறுத்துக் கொள்ளப்பட்டாலும், ஓரினச்சேர்க்கை சமூகம் 1930களில் அதன் சுதந்திரத்தை இழக்கத் தொடங்கியது.

1933 ஜூலையில், லெனின்கிராட் ஓரினச்சேர்க்கையாளர்களின் வழக்கு என்ற பெயரில் பலதரப்பட்ட வாழ்க்கை நிலையிலிருக்கும் 175 ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கின் முழு விவரங்களும் வகைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், கைதுசெய்யப்பட்டிருக்கும் அனைவருக்கும் ​​பிரிட்டிஷ் உளவுத்துறையின் 'தீங்கிழைக்கும் எதிர்-புரட்சிவாதம்' மற்றும் 'சிவப்பு இராணுவத்தின் தார்மீக ஊழல்' ஆகியவற்றிற்காக பணியாற்றியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்காக அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

படக்குறிப்பு,

புரட்சிக்கு முன்னும் பின்னும் ரஷ்யாவில் பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள் வாழ்க்கையைப் பற்றி மிகக் குறைந்த தகவலே உள்ளது. பெட்ரோகிராட், 1916-1917

இதில் 1921இல் நடந்த அஃபானாஸி ஷார்ரின் 'திருமணம்' என்பது குறிப்பிடத்தக்க பங்கை வகித்தது என்று கருதப்படுகிறது. இரகசிய காவல்துறையினரின் 'இராணுவம் மற்றும் கடற்படைகளை சிதைவடைந்தவர்கள்' என்று அவர்களின் கூற்றுக்களை மறந்துவிடவில்லை.

1930களின் முற்பகுதியிலும் அதே இரகசிய காவல்துறையினரால் கட்டாயப்படுத்தப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களிலும் அதே கூற்றுகள் மீண்டும் மீண்டும் செய்யப்பட்டன.

லெனின்கிராட் ஓரினச்சேர்க்கையாளர்களின் வழக்கு, 1934-ஆம் ஆண்டின் புதிய குற்றவியல் சட்டத்தில் ஓரினச்சேர்க்கையை சட்டவிரோதமாக்குவதாகவும், ஓரினச் சேர்க்கை உரிமைகள் மீதான ரஷ்யாவின் குறுகியகால சகிப்புத்தன்மையை முடிவுக்கு கொண்டுவருவதற்கும் காரணமானது.

ஒல்கா கொரோஷிலோவா பிபிசி ரஷ்யாவின் அண்ணா கோசின்ஸ்காயாவிடம் இவற்றை தெரிவித்தார்.

1991-இல் சோவியத் யூனியன் பல நாடுகளாக பிரிந்த பின்னர், 1993-இல் ரஷ்யாவில் ஓரினிச்சேர்க்கையை குற்றமாக்கும் சட்டம் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காணொளிக் குறிப்பு,

பாலியல் பாகுபாட்டுக்கு உள்ளாகும் ஒருபாலுறவாளர்கள்!

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :