சோமாலியாவில் இரட்டை வெடிகுண்டு தாக்குதல்; 14 பேர் பலி

சோமாலியா

பட மூலாதாரம், MOHAMED ABDIWAHAB/AFP/Getty Images

சோமாலிய தலைநகர் மொகதிஷுவில் நடைபெற்ற இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

வெடிபொருட்கள் நிரப்பிய காரை விடுதியினுள் ஓட்டிச் சென்று முதல் தாக்குதல் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள், விடுதியினுள் நுழைந்தனர்.

இரண்டாவது வெடிகுண்டு, முன்னாள் நாடாளுமன்ற கட்டடத்துக்கு அருகில் வெடித்தது. இதில் 14 பேர் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு கொன்ற வெடிகுண்டு தாக்குதலை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இஸ்லாமிய கிளர்ச்சிக் குழுவான, அல்-ஷபாப், இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

சோமாலியா வரைபடம்

அக்டோபர் 14ஆம் தேதி நடந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்க மறுக்கும் இந்த குழு, அதிக எண்ணிக்கையிலான பாதுகாப்புத்துறை அதிகாரிகளும், அரசியல்வாதிகள் வந்து செல்வதால், இந்த புதிய இரண்டு இடங்களை இலக்கு வைத்ததாக கூறுகின்றது.

ஞாயிறன்று, அல்-ஷபாபிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்த அணுகுமுறை குறித்த கூட்டத்தில் பங்கேற்க மாகாண தலைவர்கள் மொகதிஷூவில் கூடும் நேரத்தை, அந்த குழு தேர்வு செய்து இந்த சம்பவத்தை நிகழ்த்தியுள்ளது.

விடுதியினுள் அங்கொன்றும், இங்கொன்றுமாக துப்பாக்கிச் சத்தம் இரவு முழுவதும் கேட்டுக்கொண்டிருந்தது. விடுதியின் வாயிலில் அந்த குண்டு வெடித்ததாக தெரிகிறது.

இரண்டாவது குண்டு வெடிப்பின் போது, `வெடிபொருட்கள் நிரப்பிய ஒரு சிற்றுந்து` சாலைகளின் சந்திப்பில் வெடித்ததாக, காவல்துறை அதிகாரி முகமது மோவலிம் அதான், ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த ஒரு மணி நேரத்திற்குள், 15 காயமடைந்தவர்களை தாங்கள் மருத்துவமனைக்கு எடுத்து சென்றதாகவும் பல சடலங்கள் உள்ளதாகவும் நகர அவசர ஊர்தி சேவையான ஆமின் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 14ஆம் தேதி நடந்த தாக்குதலில் குறைந்தது 358 பேர் கொல்லப்பட்டதோடு, 56 பேர் காணாமல் போயுள்ளனர் .

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :