காஸ்ட்ரோவை கொல்ல ஒரு மில்லியன் டாலர் 'சுபாரி' கொடுக்கப்பட்டதா?

எஃப் கென்னடி

பட மூலாதாரம், EPA

அமெரிக்க முன்னாள் குடியரசுத் தலைவர் ஜான்.எஃப் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான 2800 ரகசியக் கோப்புகளை வெளியிடத் தகுந்த கோப்புகளாக வகைமாற்றம் செய்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஆவணங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வந்தபிறகு கென்னடி படுகொலை தொடர்பான ரகசியங்களும், உண்மைகளும் வெளிவரும் என்று நம்பிக்கை எழுந்துள்ளது. அதைத்தவிர வேறுபல விஷயங்கள் வெளிவந்துள்ளன.

இதில் வெளியாகியுள்ள ஒரு விஷயம் உலகின் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது. கியூபாவின் புரட்சித் தலைவரும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோவை கொல்வதற்காக அமெரிக்கா சதித்திட்டம் தீட்டியதாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

காஸ்ட்ரோவின் தலைக்கு என்ன விலை?

அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏ கம்யூனிஸ்ட் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவை படுகொலை செய்ய, அமெரிக்கா சதி செய்ததாக தொடர்ந்து பல ஆண்டுகளாக கியூபா அரசு குற்றம் சாட்டிவந்துள்ளது.

கென்னடி படுகொலைக்கு காஸ்ட்ரோ காரணம் என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் நிலையில், ஹவானா மற்றும் வாஷிங்டன் இடையே இணக்கம் அதிகரித்து வருவதை எதிர்க்கும் சிலர் திட்டமிட்டு வெளியிடும் வதந்தி இது என்றும் கூறப்படுகிறது.

பட மூலாதாரம், AFP

பாஸ்டன் கல்லூரியின் வரலாற்று பேராசிரியர் பேட்ரிக் மைனியின் கருத்துப்படி, "காஸ்ட்ரோவை கொல்வதற்கான சி.ஐ.ஏயின் முயற்சிகளுக்கும், கென்னடியின் படுகொலைக்கும் எதோவொரு சம்பந்தம் இருக்கிறது. சி.ஐ.ஏவின் திட்டங்களை லீ ஹார்வீ ஆஸ்வால்டு அறிந்திருந்தார், ஒருவேளை கென்னடியைக் படுகொலை செய்ய அவரை ஊக்கப்படுத்தியதோ அதுதானோ?"

கடந்த வியாழனன்று வெளியிடப்பட்ட ஆவணங்களின்படி, அமெரிக்க உளவுத்துறை மற்றும் புளோரிடாவிலிருந்து வந்த கியூபா குடியேறிகள் சிலமுறை சந்தித்து பேசினார்கள். அதில் ஃபிடல் காஸ்ட்ரோவை கொலை செய்வது குறித்த திட்டங்கள் தீட்டப்பட்டன.

ஃபிடல் காஸ்ட்ரோ உள்ளிட்ட கியூபா நாட்டின் பல தலைவர்களைக் கொல்வதற்கு விலை நிர்ணயிக்கப்பட்டதாக ஒரு ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

ஃபிடல் காஸ்ட்ரோவை கொல்வதற்கு ஒரு மில்லியன் டாலர், அவரது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோ மற்றும் சே குவேராவை கொல்வதற்கு தலா 20 ஆயிரம் டாலர் விலை நிர்ணயிக்கப்பட்டதாக அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கென்னடி கொலை மர்மம்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான்.எஃப் கென்னடி படுகொலை பற்றி பல மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. இந்த படுகொலையுடன் தொடர்புடைய ரகசிய ஆவணங்களை வெளியிடபட்டால் மர்ம முடிச்சுகள் அவிழுமா?

தேசிய ஆவணக் காப்பகத்தால் பகிரத்தக்கதாக மாற்றப்பட்டுள்ள கோப்புகளில் இருப்பது என்ன என்பது பற்றி டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

54 ஆண்டுகளுக்கு முன்பு டெக்சஸ் மாகாணத்தின் டல்லாஸ் பகுதியில் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது முதல் அவரது கொலைக்கான காரணங்கள் பற்றி பல கருத்துகள் உலாவருகின்றன.

இந்தக் கொலை தொடர்பான விசாரணையின் சுமார் 50 லட்சம் பக்க ஆவணங்கள் முழுவதையும் 25 ஆண்டுகளில் பகிரங்கமாக வெளியிடவேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றம் 1992ல் சட்டம் இயற்றியது.

இந்தச் சட்டப்படி, ஆவணங்கள் அனைத்தும் 2017 அக்டோபர் 26ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும். இதற்கு முன்னதாகவே, சுமார் 90 சதவீத ஆவணங்கள் வெளியிடப்பட்டுவிட்டன.

ஆவணங்களில் இன்னும் வெளியிடப்படாமல் இருந்தவற்றில் பெரும்பாலானதை டிரம்ப் விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.

இருந்தாலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பு காரணங்களுக்காக வேறு சில ஆவணங்களை வெளியிட மறுத்துள்ளார்.

பட மூலாதாரம், Reuters

"இந்த முக்கிய சம்பவத்தின் அனைத்து அம்சங்களையும் பற்றி அமெரிக்க மக்கள் முழுமையாக அறிந்திருக்க வேண்டும்" என்று டிரம்ப் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆவணங்கள் அமெரிக்க தேசிய காப்பக இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

கென்னடி படுகொலை பற்றி பல்வேறு கதைகள் உலாவினாலும், கென்னடியை கொலை செய்தது லீ ஹார்வீ ஆஸ்வால்டு என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

எனினும், கொலையில் மற்றொரு நபரும் ஈடுபட்டிருக்கும் சாத்தியம் இருந்தது. இந்தக் கொலை தொடர்பாக ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் பல தகவல்களை ஆவணங்கள் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கென்னடி படுகொலையின் பின்னணி

1963 நவம்பர் 22-ம் தேதி டல்லாஸில் மேற்கூரையில்லாத கார் ஒன்றில் பயணித்தபோது கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டார். அந்தக் காரில் இருந்த டெக்சஸ் மாகாண ஆளுநர் ஜான் கொன்னாலி காயமடைந்தார்.

பட மூலாதாரம், Reuters

சற்று நேரத்தில் காவல்துறை அதிகாரி ஜெ.டி.டிப்பிட்டும் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட லீ ஹார்வீ ஆஸ்வால்டு, கொலை குற்றச்சாட்டை மறுத்ததுடன், தான் அப்பாவி என்றும் கூறினார்.

கென்னடி கொலை செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்கு பிறகு, நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கு முன்னரே, கொலைக் குற்றம்சாட்டப்பட்டவர் கொலை செய்யப்பட்டார்.

நவம்பர் 24ஆம் தேதியன்று, டல்லாஸ் காவல்துறையின் பிடியில் இருந்த ஆஸ்வால்ட்டை, உள்ளூர் இரவு விடுதியின் உரிமையாளர் ஜாக் ரூபி சுட்டுக் கொன்றார்.

வாரன் கமிஷன் அறிக்கை

1964 செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட வாரன் கமிஷன் அறிக்கையின்படி, லீ ஹார்வீ ஆஸ்வால்ட் டெக்சாஸ் ஸ்கூல் புக் டெபாசிட்டரி கட்டடத்தில் இருந்து கென்னடியை துப்பாக்கியால் சுட்டார்.

"லீ ஹார்வே ஆஸ்வால்டு அல்லது ஜாக் ரூபி இருவருமே எந்தவொரு உள்நாட்டு அல்லது வெளிநாட்டு சதித்திட்டத்திற்கு துணைபோனதான ஆதாரங்கள் எதுவும் இல்லை" என்றும் விசாரணை கமிஷன் அறிக்கை கூறுகிறது.

பட மூலாதாரம், AFP/GETTY IMAGES

1979 ஆம் ஆண்டில் ஹவுஸ் தேர்ந்தெடுப்புக் குழுவானது, இந்தக் கொலை வழக்கை விசாரித்தது. கொலை செய்த இடத்தில் இருவர் இருந்திருக்கலாம் என்று கூறியது.

யார் இந்த லீ ஹார்வீ ஆஸ்வால்டு?

லீ ஹார்வீ ஆஸ்வால்ட் அமெரிக்க கடற்படையில் பணியாற்றியவர், ராணுவ நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர். 1959 இல் சோவியத் யூனியனுக்கு சென்ற அவர், 1962 வரை அங்கேயே வசித்தார்.

மிம்ஸ்க்கில் வானொலி மற்றும் தொலைக்காட்சி தொழிற்சாலையில் பணியாற்றிய அவர், அங்குதான் தனது மனைவியை முதன்முதலில் சந்தித்தார்.

கென்னடி கொலை செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஆஸ்வால்டு கியூபா மற்றும் ரஷ்யா தூதரகங்களுக்கு சென்றார் என்று வாரன் கமிஷன் கண்டறிந்தது.

பட மூலாதாரம், Getty Images

பிற கதைகள்

கென்னடியின் கொலையில் இரண்டாவது நபர் சம்பந்தப்பட்டிருக்கும் வாய்ப்பு இல்லை என்று சிலர் கருதுகிறார்கள். சிலரோ, கென்னடி பின்புறம் இருந்து அல்ல, முன்புறம் இருந்து சுடப்பட்டதாக கருதுகிறார்கள். ஆஸ்வால்டு கன்னங்களில் செய்யப்பட்ட பாரஃபின் சோதனையில், அவர் துப்பாக்கியை இயக்கவில்லை என்று தெரியவந்தது. எனினும், இந்த சோதனையின் நம்பகத்தன்மையும் கேள்விக்குள்ளாகப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :