கணவனைக் கொல்ல பாலில் விஷம் கலந்த பெண்: திட்டம் தவறியதால் குடும்பத்தில் 15 பேர் பலி

லஸி எனப்படும் தயிர் பானம் படத்தின் காப்புரிமை AFP/GETTY IMAGES

பாகிஸ்தானில், புதிதாக திருமணம் ஆன பெண் ஒருவர், தனது கணவருக்கும், அவரின் உறவினருக்கும் பாலில் விஷம் கலந்து கொல்ல முயன்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அஷியா பிபி என்ற அந்த பெண், கடந்த வாரம், தனது கணவரை கொல்வதற்காக, விஷத்தை பாலில் கலந்தார் என்றும், ஆனால் அவர் அதை குடிக்க தவறி விட்டார் என்றும் காவல்துறை கூறுகிறது.

அதற்கு பதிலாக, அந்த பால், லஸி என குறிப்பிடப்படும் தயிர் வகை பானமாக மாற்றப்பட்டு, குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம், கட்டாய திருமணத்தில் இந்த பெண் தள்ளப்பட்டுள்ளார் என காவல்துறை தெரிவிக்கிறது.

பாகிஸ்தானின் கிராமப்புறங்களிலும், ஏழ்மையான பகுதிகளிலும் இத்தகைய திருமணங்கள் பரவலாக நடக்கின்றன. பெரும்பாலும், குடும்பத்தினரே பெண்களை இத்தகைய திருமணத்தில் தள்ளுகின்றனர்.

முசாஃபர்கர் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தை பொருத்தவரையில், அப்பெண் கணவரின் வீட்டில் இருந்து தப்பித்து தனது வீட்டிற்கு செல்ல முயன்று வெற்றியடையாமல் போனதாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

மூத்த காவல்துறை அதிகாரியான ஒவேஸ் அகமது, அந்த பெண் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார். அவளின் காதலர் என கூறப்படுபவரையும், அவரின் அத்தையையும் சேர்த்து காவல்துறை கைது செய்துள்ளது.

முசாஃபர்கர் காவல்துறை, 15 பேர் இறந்துள்ளதாகவும், மேலும் எட்டு பேர் முல்தான் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பிபிசி உருது குழுவிடம் தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை முதல், இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது. அந்த விஷம் கலந்த தயிரை அருந்தியவுடன், முதலில் எட்டு பேர் இறந்தனர்.

முசாஃபர்கர் மாவட்ட காவல் அதிகாரி, அவைஸ் அகமது மாலிக் கூறுகையில், எந்த வகையான விஷம் பயன்படுத்தப்பட்டது என்பது, இறந்தவர்களின் உடலை ரசாயன பரிசோதனைக்கு உட்படுத்திய பிறகே தெரியும் என்றார்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது தீவிரவாதத்திற்கு எதிரான சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

`உள்ளூர் மக்கள் இத்தகைய குற்றங்களை செய்யாமல் தடுக்கவே நாங்கள் இந்த சட்டங்களில் பதிவோம். பிறகு, நீதிமன்றம் இந்த சட்டங்களை நீக்கிவிடும்` என்றார்.

பிற செய்திகள்

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்