கேட்டலோனிய பிரச்சனை: ஏன்...எதற்கு? அடிப்படை விவரங்கள்

கேட்டலோனிய சுதந்திர ஆதரவாளர்கள் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பார்சிலோனாவில் கேட்டலோனிய சுதந்திர ஆதரவாளர்கள்

சுதந்திரத்துக்கான கேட்டலோனியாவின் முன்னெடுப்பு கடந்த நாற்பது வருடங்களில் ஸ்பெயின் நாட்டை மிகப்பெரிய அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியிருக்கிறது. இது சிக்கலான பிரச்னை. ஆகவே அதன் அடிப்படைகளைப் பார்ப்போம்.

கேட்டலோனியா என்பது என்ன?

ஆயிரம் ஆண்டுகளாக தனித்த வரலாறு கொண்டிருக்கும் கேட்டலோனியா வடகிழக்கு ஸ்பெயினில் உள்ள ஒரு தன்னாட்சி பகுதியாகும்.

வளமான இந்த பகுதியில் சுமார் 75 லட்சம் மக்கள் அவர்களது சொந்த மொழி, நாடாளுமன்றம், கொடி, கீதம் ஆகியவற்றோடு வசிக்கின்றனர். கேட்டாலோனியா சொந்தமாக காவல்துறை வைத்துள்ளது மேலும் சில பொது சேவை துறைகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

சர்ச்சை ஏன் ?

பல வருடங்களாக ஸ்பெயினின் வறுமையான பகுதிகளுக்கு தங்களது பகுதியில் இருந்து மிக அதிகளவிலான பணம் செல்வதாக கேட்டலன் தேசியவாதிகள் புகார் தெரிவித்து வந்தனர்.

அவர்களது வரவு செலவு திட்டம் மற்றும் வரிகள் ஆகியவை ஸ்பெயின் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

கடந்த 2010ல் தன்னாட்சி அதிகாரத்தில் ஸ்பெயின் மேற்கொண்ட மாற்றங்கள் அவர்களது தனித்துவ கேட்டலோனிய அடையாளத்தை சிதைத்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி கேட்டலோனியாவில் நடந்த சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பை சட்டவிரோதமானது என ஸ்பெயின் நீதிமன்றம் அறிவித்தது. அந்த வாக்கெடுப்பில் 90% கேட்டலோனியர்கள் சுதந்திரத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால் வாக்கெடுப்பில் 43% மக்கள் மட்டுமே பங்கெடுத்திருந்தனர்.

ஸ்பெயின் தேசிய காவல்துறையானது கேட்டலோனிய மக்களை வாக்கெடுப்பில் பங்கெடுக்கவிடாமல் தடுக்க முயற்சித்தபோது இரு தரப்பும் மோதின.

அக்டோபர் 27 ஆம் தேதி கேட்டலோனிய நாடாளுமன்றம் சுதந்திரத்திற்காக வாக்களித்தது. அதே சமயத்தில் மேட்ரிட் அரசு அரசியலமைப்பின் 155வது பிரிவை பயன்படுத்தி நேரடி ஆட்சியை திணித்தது.

Image caption கேட்டலோனியாவின் வரைபடம்

மேட்ரிட் என்ன செய்கிறது?

ஸ்பானிஷ் அரசு கேட்டலன் தலைவர்களை நீக்கியிருக்கிறது மேலும் பாராளுமன்றத்தையும் கலைத்திருக்கிறது மற்றும் டிசம்பர் 21 ஆம் தேதி பிராந்தியத்திற்கான தேர்தலை அறிவித்திருக்கிறது.

பதவி நீக்கத்திற்கு உள்ளான அதிபர் கார்லஸ் பூஜ்டிமோன் மேட்ரிட் அரசுக்கு தொடர்ந்து இனங்காமல் இருந்து வருகிறார். மேலும் மேட்ரிட் உத்தரவை அரசு ஊழியர்கள் பின்பற்றக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

ஏன் இந்த நெருக்கடி நிலை முக்கியமானது ?

இந்த நெருக்கடி நிலையானது, ஆயுத மோதலாக மோசமடையும் நிலை உண்டாக்கவில்லை. ஆனால் அந்த மாகாணம் மற்றும் ஸ்பெயினை பொருளாதார ரீதியாக பாதிக்கும். ஐரோப்பிய மண்டலத்தில் இது புதிய நிலையற்றத் தன்மையை கொண்டுவரும்.

இந்த நெருக்கடி நிலையானது ஐரோப்ப்பாவில் உள்ள பிரிவினைவாத இயக்கங்களுடன் மற்ற நாடுகளாலும் பதற்றமாக கவனிக்கப்பட்டு வருகிறது.

எண்களில் கேட்டலோனியா

  • ஸ்பெயின் மக்களில் 16% கேட்டலோனியாவில் வசிக்கின்றனர்.
  • கேட்டலோனியா ஸ்பெயினின் ஏற்றுமதியில் 25.6% பங்களிக்கிறது
  • ஸ்பெயினின் ஜிடிபியில் 19 % வைத்துள்ளது
  • அயல்நாட்டு முதலீட்டில் 20.7% வைத்துள்ளது.

(இந்த தகவல்கள் பேங்க் ஆஃப் ஸ்பெயின் மற்றும் தொழில், பொருளாதார அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது)

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்