கேட்டலன் தலைவர்கள் மீது தேசத் துரோக குற்றம்: நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

பதவி நீக்கம் செய்யப்பட்ட கேட்டலோனிய தலைவர் கார்லஸ் பூஜ்டிமோன் மற்றும் கலைக்கப்பட்ட அவரது அரசில் பணியாற்றிய 13 பேரை நேரில் ஆஜராகுமாறு ஸ்பெயின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அரசியல் தஞ்சம் கோரி தான் பெல்ஜியம் வரவில்லை என்று கூறியுள்ளார் பூஜ்டிமோன்

அவர்களின் செயல்பாடுகளால் அரசுக்கு ஏற்படும் சாத்தியமான இழப்புகளை ஈடுகட்ட 6.2 மில்லியன் யூரோ செலுத்தவும் அவர்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளது.

ஸ்பெயினின் தலைமை அரச வழக்கறிஞர் கோசே மேனுவல் மசா, கேட்டலன் தலைவர்களுக்கு எதிராக கலகம் செய்தல், தேச துரோகம், பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்கு பதியப்படும் என்று முன்னதாகக் கூறியிருந்தார்.

அவரது வாதங்கள் 'தீவிரமானவை, தர்க்க ரீதியானவை மற்றும் அறிவுக்கு ஏற்புடையவை' என்று நீதிபதி கார்மன் லமெலா கூறியுள்ளார்.

ஸ்பெயின் சட்டங்களின்படி கிளர்ச்சி செய்யும் குற்றத்திற்கு அதிகபட்சமாக 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

பல முன்னாள் அமைச்சர்களுடன் பெல்ஜியம் சென்றுள்ள பூஜ்டிமோன், அரசியல் தஞ்சம் கோரி தான் பெல்ஜியம் வரவில்லை என்று கூறியிருந்தார்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய்

கேட்டலோனிய தன்னாட்சி பிரதேசத்தை தனி நாடக அறிவிக்க, அக்டோபர் தொடக்கத்தில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தியதை தொடர்ந்து அங்கு நெருக்கடி நிலை ஏற்பட்டது.

அந்த வாக்கெடுப்பு செல்லாது என்று ஸ்பெயின் அரசியலமைப்பு நீதிமன்றம் அறிவித்தது.

கடந்த வாரம் கேட்டலோனியாவுக்கு சுகந்திரம் பிரகடனம் செய்த பூஜ்டிமோன் தலைமையிலான அரசை ஸ்பெயின் மத்திய அரசு கலைத்து, கேட்டலோனியாவை தனது நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவந்தது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
உணவின்றி பரிதவிக்கும் சிரியா குழந்தைகள்

'தப்ப முயலவில்லை'

செவ்வாயன்று, பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் செய்தியாளர்களிடம் பேசியா பூஜ்டிமோன், அந்நாட்டுக்கு பயணிப்பதன்மூலம் சட்டத்தின் பிடியில் இருந்து தான் தப்ப முயலவில்லை என்றும், சுதந்திரமாக பேசவே தான் விரும்பியதாகவும் கூறியுள்ளார்.

கேட்டலோனியாவின் தன்னாட்சி அதிகாரத்தை தாற்காலிமாக நீக்கியுள்ள ஸ்பெயின் அரசு , வரும் டிசம்பர் 21 அன்று கேட்டலோனிய பிராந்திய நாடாளுமன்றத்துக்கு தேர்தல் அறிவித்துள்ளது. அந்த தேர்தலின் முடிவுகளை ஏற்றுக்கொள்ளப்போவதாக பூஜ்டிமோன் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption பிரஸ்ஸல்சில் பூஜ்டிமோன் செய்தியாளர்களை சந்தித்தபோது தனி நாடு ஆதரவாளர்கள், எதிர்பாளர்கள் என இரு தரப்பினரும் அங்கு கூடியிருந்தனர்.

"ஸ்பெயின் அரசிடம் நான் ஒரு தெளிவான உத்தரவாதத்தைப் பெற விரும்புகிறேன். பிரிவினைவாதிகளுக்கு முழு பெரும்பான்மை அளிக்கக்கூடிய ஒரு முடிவு வந்தால் அதை ஸ்பெயின் அரசு ஏற்றுக்கொள்ளுமா?" என்று அவர் வினவியுள்ளார்.

இந்தத் தேர்தலில் கார்லஸ் பூஜ்டிமோன் தாராளமாக பங்கேற்கலாம் என்று ஸ்பெயின் அரசு கூறியிருந்தது.

இதனிடையே, காவல் துறையின் பணிகளை மேற்கொள்ளும், 'கார்டியா சிவில்' எனப்படும் ஸ்பெயின் நாட்டின் துணை ராணுவப் படை ஒன்று கேட்டலோனிய பிராந்திய காவல் துறையின் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டது.

அக்டோபர் 1-இல் நடைபெற்ற வாக்கெடுப்பு தொடர்பாக, எட்டு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :