கேட்டலோனியா: விசாரணையில் ஆஜராகவில்லை பூஜ்டிமோன்

அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட தனி நாடாக சுதந்திரம் பெறுவதற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புக்கு பிறகு, பதவி நீக்கப்பட்ட கேட்டலோனிய பிரதேச அரசின் உறுப்பினர்கள் ஒன்பது பேர், கிளர்ச்சி மற்றும் தேசத் துரோக குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள ஸ்பெயின் உயர்நீதி மன்றத்தில் ஆஜராகின்றனர். ஆனால், பதவி நீக்கப்பட்ட கேட்டலன் தலைவர் பூஜ்டிமோன் உள்ளிட்ட ஐந்து பேர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

கேட்டலோனிய தலைவர் கார்லஸ் பூஜ்டிமோனும், வேறு நான்கு பேரும் இந்த ஆணையை நிராகரித்துள்ளனர்.
படக்குறிப்பு,

கேட்டலோனிய தலைவர் கார்லஸ் பூஜ்டிமோனும், வேறு நான்கு பேரும் இந்த ஆணையை நிராகரித்துள்ளனர்.

அவர்களை கைது செய்ய அரசு தரப்பு ஆணையிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது பெல்ஜியத்தில் இருக்கும் பூஜ்டிமோன், "இதுவொரு அரசியல் விசாரணை" என்று முன்னதாக கருத்து தெரிவித்தார்.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு,

மாட்ரிட் நீதிமன்றம் வந்தடைந்த பதவி நீக்கப்பட்ட கேட்டலோனிய பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள்

கடந்த அக்டோபர் மாதம் முதல் தேதி கேட்டலோனியா தனி நாடாக சுதந்திரம் பெறுவது தொடர்பாக மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு, ஸ்பெயின் அரசியலமைப்பு சார்ந்த நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஸ்பெயின் அரசமைப்புச் சட்ட நீதிமன்றம் இந்த வாக்கெடுப்பை சட்டவிரோதம் என்று கூறியிருந்தது.

கடந்த வாரம் பிரதேச நாடாளுமன்றத்தை கலைத்து, உள்ளூர் தேர்தல்கள் நடத்துவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ள ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் கேட்டலோனியாவில் நேரடி ஆட்சியை செயல்படுத்தியுள்ளார்.

ஸ்பெயினின் செல்வ செழிப்புமிக்க வட கிழக்கு பிரதேசமான கேட்டலோனியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனி நாடு அறிவிக்க வாக்களித்த பின்னர் இந்த நடவடிக்கை வந்துள்ளது.

வாக்களிப்பதற்கு தகுதியானவர்களாக இருந்தவர்களில் 43 சதவீதம் பேர் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பங்கேற்றதாகவும், வாக்களித்தவர்களில் 90 சதவீதத்தினர் சுதந்திரம் பெறுவதை ஆதரித்து வாக்களித்திருப்பதாகவும் கேட்டலோனிய அரசு தெரிவித்தது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :