2017ம் ஆண்டின் பிரபல ஆங்கிலச் சொல் என்ன?

தலைப்புச் செய்திகளையும், குறிப்பாக ஒரு டிவிட்டர் கணக்கையும் ஆக்கிரமித்த அந்த ஆங்கிலச் சொல், புகழ் பெற்ற ஆங்கில அகராதியான காலின்ஸால் 2017ம் ஆண்டின் பிரபல சொல்லாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption டிரம்ப்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் டிவிட்டர் பதிவுகளில் பலமுறை குறிப்பிடப்பட்டு, அவரது பதிவுகளின் அடையாளமாகவே மாறிவிட்ட அந்தச் சொல்: 'ஃபேக் நியூஸ்' (fake news).

பொய்ச் செய்தி என்று பொருள் தரும் அந்த ஃபேக் நியூஸ் என்ற சொல்லைப் பயன்படுத்துவதில் டிரம்ப் மட்டுமல்லாமல் உலகமே ஆர்வம் காட்டியதாகத் தெரிகிறது இப்போது. 2017ம் ஆண்டில் மட்டும் இச்சொல்லைப் பயன்படுத்துவது 365 சதவீதம் அதிகரித்துள்ளது.

2017ம் ஆண்டுக்கான பிரபல சொல்லை தேர்வு செய்வதற்காகத் தயாரிக்கப்பட்ட போட்டிச் சொற்பட்டியலில் அரசியலின் செல்வாக்கு அதிகம் இருந்தது.

ஆன்டிஃபா (Antifa) மற்றும் எக்கோ சேம்பர் (Echo Chamber) ஆகிய சொற்களும் பிரபல சொற்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பயன்பாட்டுடன் தொடர்புடைய 'இன்ஸ்டா' என்ற சொல்லோ, 'ஃபிஜிட் ஸ்பின்னர்' என்ற சொல்லோகூட ஃபேக் நியூஸை பிரபலச் சொல்லுக்கான போட்டியில் முந்த முடியவில்லை.

ஃபேக் நியூஸ் என்பதை "செய்தி சொல்வது போன்ற பாவனையில் பொய்யான, உணர்ச்சியூட்டும் தகவல்களை அளிப்பது," என்று வரையறை செய்கிறது காலின்ஸ் அகராதி.

ஐந்தாவது ஆண்டாக ஒரு சொல்லை அல்லது சொற்றொடரை ஆண்டின் பிரபல சொல்லாக காலின்ஸ் தேர்வு செய்கிறது. ஏற்கெனவே காலின்ஸ் தேர்வு செய்த சில சொற்கள்: பிரக்ஸிட், ஜீக் ஆகியன.

அடுத்த ஆண்டு காலின்ஸ் அகராதியில் ஃபேக் நியூஸ் என்ற சொற்றொடரும் அதற்கான விளக்கமும் இடம் பெறும்.

படத்தின் காப்புரிமை HARPER COLLINS
Image caption பொய்ச் செய்தி என்ற சொல்லுக்கு காலின்ஸ் அகராதியின் விளக்கம்.

டிரம்ப் மட்டுமல்ல, பிரிட்டன் பிரதமர் தெரீசா மே, அந்நாட்டு தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெர்மி கார்பைன் ஆகியோரும் இச்சொல்லைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளனர். சமூக வலைத்தளம் முழுவதும் பொய்ச் செய்திக் குற்றச்சாட்டுகள் விரவிக் கிடக்கின்றன.

உண்மையை உரைப்பதாகவோ, குற்றச்சாட்டாகவோ பயன்படுத்தப்படும் 'பொய்ச் செய்தி' என்ற இந்தச் சொல்லை இந்த ஆண்டு தவிர்க்கவே முடியாது என்றும் இதன் பயனாக செய்தி அளிப்பின் மீதான சமூகத்தின் நம்பிக்கை பாதிப்படைந்திருப்பதாகவும் காலின்ஸ் மொழி உள்ளடக்கப் பிரிவின் தலைவர் ஹெலென் நியூஸ்டீட் தெரிவித்துள்ளார்.

குளிர்காலத்தில் தமது உடம்பை கதகதப்பாக வைத்துக்கொள்ள மட்டுமே ஒரு துணையைத் தேடுவதைக் குறிக்கும் கஃபிங் சீசன் (Cuffing Season), ஜென்டர் ஃப்ளூயிட் (gender-fluid), ஜிக் எக்கானமி (gig economy) ஆகிய சொற்களும் பிரபல சொல்லைத் தேர்ந்தெடுப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட பட்டியலில் இடம் பெற்றிருந்தன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :