செல்பேசியில் தொல்லை: திரைப்பட நடிகரை எதிர்த்து நீதிமன்றம் சென்ற வங்கதேச ஆட்டோ ஓட்டுநர்

ஷகிப் கான்
படக்குறிப்பு,

வங்கதேசத்தின் மிகவும் பிரபலமான மற்றும் வெற்றிகரமான நடிகர்களுள் ஒருவர் ஷகிப் கான்

தனது தொலைபேசி எண்ணை ஒரு படத்தில் பயன்படுத்தியதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக ஒரு வங்கதேச ஆட்டோ ஓட்டுநர் அந்நாட்டின் மிக பிரபலமான திரைப்பட நட்சத்திரம் ஒருவர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.

திரைப்பட நடிகர் ஷாகிப் கானின் பெண் ரசிகர்களால் அதிகளவிலான தொலைபேசி அழைப்புகள் இஜஜுல் மியாவுக்கு வந்தது.

"என்னுடைய எண்ணை பயன்படுத்தியது….என் வாழ்க்கையையே துன்பகரமானதாக மாற்றிவிட்டது," என்கிறார் மியா.

தொடர்ச்சியான அழைப்புகளால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 60,000 க்கும் மேற்பட்ட டாலர்களை இழப்பீடாக கேட்கும் இவர், இது தன்னுடைய மண வாழ்க்கையையும் பாதித்துவிட்டதாகவும் வாதாடுகிறார்.

நடிகர் ஷாகிப் கானை பார்க்கலாம் என்ற எண்ணத்தில் கடந்த ஜூலை மாதத்தில் தொடர்ந்து ஐந்து நாட்களில் அவரின் ரசிகைகளிடமிருந்து கிட்டத்தட்ட 500 அழைப்புகளை பெற்றுள்ளார் மியா.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு சம்பந்தப்பட்ட நடிகர் எவ்விதமான கருத்தும் தெரிவிக்கவில்லை.

வங்கதேசத்தின் மிகவும் பிரபலமான மற்றும் வெற்றிகரமான நடிகர்களுள் ஒருவரான ஷகிப் கான், பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளார்.

பட மூலாதாரம், AFP

மியாவின் தொலைபேசி எண் குறித்த பிரச்சனை கடந்த ஜூன் மாதம் கானே தயாரித்து, இயக்கி வெளியிட்ட 'ராஜ்நீதி' என்கிற படத்திலிருந்து உருவானது.

அப்படத்தில், நடிகர் திரையிலுள்ள தன் பெண் தோழியிடம் மியாவின் எண்ணை கூறுவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.

"தினமும் நூற்றுக்கணக்கான அழைப்புகள் எனக்கு வந்தன. அவை பெரும்பாலும் ஷாகிப் கானின் பெண் ரசிகர்களிடம் இருந்து வந்தவை," என்று விரக்தியடைந்த மியா ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் பேசியபோது தெரிவித்தார்.

அவ்வாறு அழைக்கும் பலர், "ஹலோ ஷாகிப், நான் உங்களுடைய ரசிகை. என்னிடம் பேசுவதற்கு தங்களுக்கு இரண்டு நிமிடங்கள் உள்ளதா?" என்று கேட்பதாக கூறுகிறார் மியா.

காணொளிக் குறிப்பு,

பால்ஃபோர் பிரகடனம்: வரலாற்றையே மாற்றிய ஒற்றைத் தாள்

தொடர்ச்சியான அழைப்புகளால் ஏற்பட்டுள்ள கவலையின் காரணமாக மியாவுக்கு தன் குடும்பத்தினரின் வீட்டை விற்றுவிடலாமா என்ற கேள்வியை எழுந்ததாகவும் மற்றும் அதனால் அவருடைய புதிய மனைவி அவரை விட்டு செல்வதாக அச்சுறுத்துவதாகவும் கூறுகிறார்.

அவர் தான் வேறு எண்ணை மாற்றினால், தான் நீண்ட காலமாக கொண்டுள்ள வாடிக்கையாளர்களை இழப்பதுடன் தொழிலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்.

"புதியதாக திருமணம் செய்துகொண்ட தனக்கு ஒரு மகளுள்ளதாக" அவர் கூறினார். "இந்த அழைப்புகள் வரத் தொடங்கியபோது, தனக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்புள்ளதாக தன் மனைவி எண்ணியதாக" அவர் தெரிவித்தார்.

மியாவின் வழக்கு இந்த வாரம் ஒரு மாவட்ட நீதிபதியின் முன் தாக்கல் செய்யப்பட்டது, ஆரம்பத்தில் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தயக்கம் காட்டியதாக தகவல் வெளியானது.

பிறகு தொலைபேசி அழைப்புகள் காரணமாக மியாவுக்கு ஏற்பட்டுள்ள தனிப்பட்ட மனக்கவலையை விளக்கும் சான்றுகளை அவர் சார்பாக வழக்காடும் வழக்கறிஞர்கள் சமர்ப்பித்தவுடன் நீதிபதி தனது மனநிலையை மாற்றிக்கொண்டார்.

இந்த வழக்கில் மற்றொரு விசாரணை டிசம்பர் 18 ஆம் தேதியன்று நடத்த திட்டமிட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :