மொசூல் போரின்போது 741 பேருக்கு மரண தண்டனை வழங்கிய ஐ.எஸ் - ஐநா அறிக்கை

இராக்கின் மொசூல் நகரில் நடைபெற்ற போரின்போது, இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் நடத்திய கொலைகளில் குறைந்தது 741 நபர்கள் இறந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மாமன்றம் தெரிவித்திருக்கிறது.

இடிபாடுகளின் ஊடாக செல்லும் மக்கள்

பட மூலாதாரம், EPA

அதிக எண்ணிக்கையிலான ஆட்கடத்தல், பாதுகாப்பு கேடயங்களாக மக்களை பயன்படுத்துதல், வேண்டுமென்றே வீடுகள் மீது ஷெல் குண்டு தாக்குதல் நடத்துதல், தப்பி செல்ல முயல்வோரை இலக்கு வைத்து தாக்குதல் போன்ற குற்றச்சாட்டுக்களும் இந்த ஜிகாதிகள் மீது உள்ளன.

"அவர்கள் செய்திருக்கும் கொடூர குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் பதில் அளிக்க வேண்டும்” என்று ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் ஸீத் ராத் அல் ஹுசைன் தெரிவித்திருக்கிறார்.

இராக் படைப்பிரிவுகளால் நடத்தப்பட்ட வன்முறை குற்றச்சாட்டுகளும் புலனாய்வு செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

போர் உக்கிரமாக நடைபெற்ற 2016 முதல் ஜூலை 2017 வரையான காலத்தில், இராக் ராணுவம் மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளின் விமான தாக்குதல்களால், மேலும் 461 பொது மக்கள் இறந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

ராணுவ நடவடிக்கையின்போது, ஒட்டுமொத்தமாக குறைந்தது 2,521 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1,673 பேர் காயமடைந்துள்ளனர்.

பெரும்பாலும் ஐ.எஸ் நடத்திய தாக்குதல்களால் இந்த இறப்புகள் நிகழ்ந்துள்ளன என்று வியாழக்கிழமை வெளியான அறிக்கையில் இராக்கின் ஐநா உதவி சேவையும், ஐநா மனித உரிமை ஆணையமும் குறிப்பிட்டுள்ளன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :