ஐ.எஸ் அமைப்பின் கடைசி கோட்டையைக் கைப்பற்றியது சிரியா

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் பிடியில் கடைசியாக இருந்த முக்கிய இடமான தெஹிர் அசோர் பகுதியை சிரியா ராணுவம் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

தேர் அசோர் நகரில் ஐ.எஸ் அமைப்பை எதிர்த்து சிரிய ராணுவம் நடத்திய தாக்குதல்

பட மூலாதாரம், AFP/Getty

படக்குறிப்பு,

தேர் அசோர் நகரில் ஐ.எஸ் அமைப்பை எதிர்த்து சிரிய ராணுவம் நடத்திய தாக்குதல்

"பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து அந்த நகரம் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது," என்று அந்தத் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

சிரியாவின் ராணுவமும் அதன் கூட்டணிப் படைகளும் ஐ.எஸ் அமைப்பு எதிர்த்துப் போரிட்டு வந்த கடைசி புகலிடங்களில் இருந்து அவர்களை நீக்கி வருவதாக பிற செய்திகள் தெரிவிக்கின்றன.

பல வாரங்களுக்காக நடந்த சண்டைக்குப் பின், அரசப் படைகள் அந்நகரைக் கைப்பற்றியதாக, பிரிட்டனைச் சேர்ந்த சிரியன் அப்சர்வேட்டரி ஃபார் ஹியூமன் ரைட்ஸ் எனும் மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தச் சண்டையால் சுமார் 3.5 லட்சம் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.

தெஹிர் அசோர் நகரின் முக்க்கியத்துவம் என்ன?

ஐ.எஸ் அமைப்பு முன்பு கட்டுப்பாட்டில் வைத்திருந்த பகுதிகளுக்கு தலை நகராக விளங்கிய ரக்கா நகருக்கும் இராக் உடனான எல்லைக்கும் இடையே, யூப்ரடீஸ் நதிக்கரையில் இந்த நகரம் அமைந்துள்ளது.

காணொளிக் குறிப்பு,

பால்ஃபோர் பிரகடனம்: வரலாற்றையே மாற்றிய ஒற்றைத் தாள்

அந்த நதியின் இரு பக்கங்களிலும் இருக்கும் பகுதிகளை 'யூப்ரடீஸ் மாகாணம்' என்று பெயரிட்டிருந்த ஐ.எஸ் அமைப்பு, அப்பகுதி தங்கள் கட்டுப்பாட்டில் இருந்தபோது, இராக் மற்றும் சிரியா இடையே ஆயுதங்கள் மற்றும் சரக்குகளைப் போக்குவரத்து செய்யவும், போராளிகளை பரிமாறிக்கொள்ளவும் பயன்படுத்தியது.

இருநாட்டு எல்லையிலும் அமைந்திருந்த இந்த மாகாணம், 1916-இல் கையெழுத்திடப்பட்ட, அரபு நாடுகளின் எல்லைகளை வரையறுக்கும் சைக்ஸ்-பீக்கோ உடன்படிக்கையின் சரத்துகளை மீற வேண்டும் எனும் ஜிஹாதிகளின் நோக்கமாக இருந்தது.

கடந்த மாதம் அமெரிக்காவின் ஆதரவுபெற்ற சிரியாவின் படையினர் ஐ.எஸ் அமைப்பை ரக்கா நகரில் இருந்து வெளியேற்றினர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஐ.எஸ் பகுதியைக் கைப்பற்றியபின் வெற்றிக்குறி காட்டும் சிரிய ராணுவ வீரர்.

யூப்ரடீஸ் நதியின் மேற்குக் கரையோரப் பகுதியில், கடந்த 2015 முதல் சுமார் 93,000 பொதுமக்கள் ஐ.எஸ் அமைப்பின் பிடியில் சிக்கியிருந்த தெஹிர் அசோர் நகரின் பகுதிக்குள், கடந்த செப்டம்பர் மாதம் சிரியப் படையினர் நுழைந்தனர்.

தெஹிர் அசோர் மாகாணத்தின் சில பகுதிகள் மட்டுமே தற்போது ஐ.எஸ் அமைப்பின் வசம் உள்ளன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :